மைக்ரோசாப்ட்டுக்கு இன்னொரு அடியாக கூகுளும் பிரெளசர் உலகில் கால் எடுத்து வைக்கிறது!

02.9.2008.3
தேடுதல், மெயில் என சகல மேட்டர்களிலும் கலக்கிக் கொண்டிருக்கும் கூகுள், அடுத்து பிரெளசரையும் ஆரம்பிக்கவுள்ளது. இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிகிறது.

இன்டர்நெட் பயன்பாட்டுக்கு மிகவும் முக்கியமானது, அடிப்படையானது பிரெளசர்.

தற்போது பல வகையான பிரெளசர் வலையுலகில் உலவிக் கொண்டுள்ளன. அதில் அதிகம் பிரபலமானது இன்டர்நெட் எக்ஸ்புளோரர்தான். ஆகஸ்ட் மாத சந்தை நிலவரப்படி இன்டர்நெட் பயன்பாட்டாளர்களில் 73 சதவீதம் பேர் இதைத்தான் பயன்படுத்துகின்றனர்.

இதுதவிர பயர்பாக்ஸ் (19.73%), சஃபாரி (6.73%), ஒபேரா (0.74%) ஆகிய பிரவுசர்களும் புழக்கத்தில் உள்ளன.

முன்பு இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பங்கு 90 சதவீதமாக இருந்தது. ஆனால் பயர்பாக்ஸ் வந்த பின்னர் எக்ஸ்புளோரரின் பங்கு குறைந்து விட்டது.

இந் நிலையில் மைக்ரோசாப்ட்டுக்கு இன்னொரு அடியாக கூகுளும் பிரெளசர் உலகில் கால் எடுத்து வைக்கிறது. தனது பிரவுசருக்கு குரோம் என பெயரிட்டுள்ளது கூகுள்.

இதுதொடர்பான அனைத்து விவரங்களும் கூகுள்குரோம் இணையதளத்தில் உள்ளன (http://www.gchrome.com/). இந்த பிரெளசர் பல விசேஷங்கள் உள்ளடங்கியுள்ளன.

தேடுதல், வீடியோ ஸ்ட்ரீமிங், இமேஜ் சர்ச், இமெயில் உள்ளிட்ட பல பயன்பாடுகளை தற்போது கூகுள் தன் பக்கம் வைத்துள்ளது. இந் நிலையில் தனது ‘குரோம் பிரெளசர்’ மூலம் இன்டர்நெட் பயன்பாட்டாளர்களை ஒட்டுமொத்தமாக தன் பக்கம் இழுக்க திட்டமிட்டுள்ளது கூகுள்.

இந்த பிரெளசரின் ‘பீட்டா வெர்சன்’ நாளை அறிமுகமாகவுள்ளது.

இன்டர்நெட் உலகம், குரோம் ‘பேட்டை’ ஆகுமா, கூகுள் சவாலை எக்ஸ்புளோரரும், பயர்பாக்ஸும் சமாளிக்குமா என்பதை என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.