மேலும் ஒரு வருடம் மக்கள் முகாம்களில் முடக்கப்படுவார்கள் இந்தியா சம்மதம்.

போருக்குப் பின்னர் சரணடைந்த மக்களை வட பகுதியில் குடியேற்றாமல் தொடர்ந்து முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கிறது இலங்கை அரசு. வடபகுதியில் பெருமளவு இராணுவத்தினரைக் குடியமர்த்தி வரும் இலங்கை மக்களின் நிலங்களை பெருமளவு சூறையாடி வருகிறது. வடபகுதியை முழுமையாக இராணுவ மயமாக்கும் திட்டங்களுக்கு இன்னும் சில ஆண்டுகாலம் நீட்டிக்கும் நிலையில் இலங்கையில் கண்ணிவெடியை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்களின் ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது.இலங்கையின் வடக்கு பகுதியில் போரால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காக 7 இந்திய நிறுவனங்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றன.அவற்றின் ஒப்பந்தத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக இலங்கை பொருளாதார மேம்பாட்டு அமைச்சக செயலர் பி.பி.ஜெயசுந்தராவிடம் இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே.காந்தா வியாழக்கிழமை தெரிவித்தார். போரால் இடம்பெயர்ந்தவர்களை மறுகுடியமர்த்தும் பணியையும், வடக்குப் பகுதியில் ரயில் இருப்புப்பாதை அமைக்கும் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியிலும் இந்த நிறுவனங்கள் ஈடுபடும்.