மேற்கு வங்கத்தை காஷ்மீராக மாற்றப்பார்க்கிறார்கள்- மம்தா குற்றச்சாட்டு.

கொல்கத்தாவில் நிருபர்களிடம் திங்கள்கிழமை பேசிய மம்தா கூறியதாவது: மக்களுடைய ஆதரவு குறைந்துகொண்டே வருவதால் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறும் இடதுசாரி முன்னணி அரசு அரசியல் சட்டத்துக்கு முரணாகவும் ஜனநாயக மாண்புகளுக்கு மாறாகவும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மாநில மக்களைக் கொடுமைப்படுத்தி வருகிறது. காஷ்மீரைப் போல மக்கள் திரண்டு எழுந்து வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று அரசு நினைப்பதுபோலத் தெரிகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணை நின்று அவர்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு அவர்களை போலீஸôரைக் கொண்டும் கட்சியின் குண்டர்களைக் கொண்டும் அடித்து, சித்திரவதை செய்து கொடூரமாக நடத்தி வருகிறது. பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது அதிக அளவில் நடக்கிறது. இதைச் செய்வதற்காக கிராமங்களுக்கு அந்தப் பகுதியைச் சேராதவர்களைக் கொண்டு வந்து அட்டூழியம் செய்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. சீனத்தில் மாணவர்களின் கிளர்ச்சியை ஒடுக்க தியானென்மென் சதுக்கத்தில் சீன ராணுவ அரசு கையாண்ட அதே அடக்குமுறைகளை மேற்கு வங்க அரசும் கையாளத் துடிக்கிறது. இந்தியா என்ன சீனாவைப் போல சர்வாதிகார நாடா? துப்பாக்கி வாங்குகிறது மாநில அரசு: பழங்குடி மக்களின் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதியிலிருந்து துப்பாக்கிகளை வாங்குகிறது மாநில அரசு. அவற்றை மார்க்சிஸ்ட் கட்சியின் தொண்டர்களிடம் ஒப்படைக்கிறது. மார்க்சிஸ்ட் தொண்டர்கள் அவற்றை மாற்றுக் கட்சிக்காரர்களுக்கு எதிராகவே பயன்படுத்துகின்றனர். பெண்களைத் துகிலுரிந்து மானபங்கப்படுத்துகின்றனர். ஜங்கல்மஹால் மாவட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் அனேகம். லால்கரில் நக்ஸல்களுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை என்ற போர்வையில் மாநிலப் போலீஸôருடன் மார்க்சிஸ்ட் குண்டர்களும் சேர்ந்துகொண்டு கிராமவாசிகளைக் கொன்றனர். அரசுக்கு எதிராகச் செயல்படுகிறவர்களைக் கைது செய்யக்கூடாது, தண்டிக்கக்கூடாது என்று எப்போதும் நான் சொன்னதில்லை. அவர்களைத் தேடுவதாகக் கூறிக்கொண்டு தங்களுக்கு உடன்பாடாக இல்லாத கிராமவாசிகளைத் துன்புறுத்துவதும் கொலை செய்வதும் மானபங்கப்படுத்துவதும் ஏன் என்றுதான் கேட்கிறேன். அப்படிச் செய்யும் உரிமையை இவர்களுக்கு யார் தந்தது? இது ஜனநாயக நாடு இல்லையா? தவறு செய்தவர்களை விசாரித்து தண்டிக்க நீதிமன்றங்கள் இல்லையா? ஜங்கல்மஹால் மாவட்டத்தில் மார்க்சிஸ்டுகள் முகாம்களை அமைத்து அங்கே துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைப் பதுக்கி வருகின்றனர் என்று பத்திரிகைகளிலும் செய்திகள் வருகின்றன. இந்த முகாம்களை அமைக்க அனுமதி கொடுத்தது யார்? இம் மாதம் 9-ம் தேதி என்னுடைய கட்சி பொதுக்கூட்டத்துக்கு வந்த பெண்களை அடையாளம் கண்டு அவர்களை மானபங்கப்படுத்துவதற்காகவே கேஷ்பூர், கார்பெட்டா,கோல்தோரே ஆகிய ஊர்களுக்கு வெளியாள்களை மார்க்சிஸ்ட் கட்சியினர் அழைத்து வந்தனர். அவர்கள் மனிதத் தன்மையே இல்லாமல் பெண்களிடம் நடந்துகொண்டனர். ஜன்சோல் என்ற கிராமத்தைச் சேர்ந்த கல்பனா சின்ஹா மகாபாத்ர என்ற பெண் அப்படி பாதிக்கப்பட்டவர். அவர் சம்பவம் நடந்த பிறகு வீட்டுக்குச் செல்ல பயந்து கொல்கத்தாவுக்கு ஓடிவந்து மம்தாவை அணுகி நடந்த சம்பவங்களைக் கூறினார். தன்னைப் போல பாதிக்கப்பட்ட பெண்கள் ஏராளம் என்றும் அவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்றும் கோரினார். ஜங்கல்மஹால் பகுதியில் மார்க்சிஸ்ட் குண்டர்களால் பலவந்தப்படுத்தப்பட்ட பெண்களைத் திரட்டி தில்லியில் ஜந்தர்மந்தர் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்துவேன்; அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்என்றார் மம்தா பானர்ஜி.