மூதூர் படுகொலைகளுக்கு அனைத்துலக விசாரணை தேவை : ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச்

இலங்கையின் வடகிழக்கு பகுதியில், பிரெஞ்சு நிவாரண உதவி அமைப்பின் ஊழியர்கள் 17 பேர் மூன்று ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டதை தொடர்ந்து கொலையாளிகளை கண்டுபிடிக்க அரசாங்க விசாரணைகள் தவறியிருப்பதால் அனைத்துலக விசாரணை ஒன்று இது குறித்து நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் கோரியுள்ளது.

பிரான்ஸின் ஏ சி எஃப் எனப்படும் உதவி அமைப்பின் உள்ளூர் ஊழியர்கள் கொல்லப்பட்டமை பற்றிய விசாரணையை அரசாங்கம் கையாண்ட விதமே, ஒட்டுமொத்தமாக தவறானது என்று குறிப்பிட்டுள்ள அந்த மனித உரிமைகள் அமைப்பு சர்வதேச விசாரணை ஒன்று அத்தியாவசியம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டில் இந்த கொலைச் சம்பவங்கள் நடந்த சமயத்தில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்திருந்த சமாதான கண்காணிப்பாளர்கள் இது தொடர்பில் கருத்து வெளியிடும் போது “இக்கொலைகளில் அரசாங்க இராணுவத்தினர் சம்பந்தப்பட்டிருந்ததாக தாம் கருதுவதாக குறிப்பிட்டார்கள்”.

ஆனாலும் அரசாங்க நடத்திய விசாரனையோ இக்கொலைகளுக்கு இராணுவம் பொறுப்பல்ல என்று கூறியுள்ளது.

BBC