முஸ்லிம் போராளிக் குழுவினருடனான அமைதிப் பேச்சுகள் முடிவுக்கு வந்துவிட்டதாக பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு!

05.09.2008.

பிலிப்பைன்ஸின் முஸ்லிம் போராளிக் குழுவினருடனான அமைதிப் பேச்சுகள் முடிவுக்கு வந்துவிட்டதாக அந்நாட்டின் அரச அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 11 வருடகாலமாக வன்முறைகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் தடைப்பட்டு வந்த இப் பேச்சுகள் தற்போது முற்றிலும் கைவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

போராளிகளுடன் பேச்சுகளை மேற்கொள்வதற்காக அரசினால் ஒழுங்கமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டுள்ளதுடன் அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கான கொள்கைகளை மாற்றியமைத்து தென்பகுதியிலுள்ள உள்ளூர் சமூகங்களுடன் நேரடிப் பேச்சுகளை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக ஜீசஸ் டுரேஸா தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேலதிக பேச்சுகள் எதுவும் நடைபெறாது நாங்கள் அமைதிப் பேச்சுகளுக்கான குழுவை கலைத்துள்ளோம். நாங்கள் இப் பகுதியிலுள்ள முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை கண்டறிவதற்காக அங்குள்ள மக்களுடன் நேரடியாக கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் மொறோ இஸ்லாமிய விடுதலை முன்னணி என்னும் இயக்கத்தின் உறுப்பினர்கள் நாட்டின் தென்பகுதியிலுள்ள மின்டனாவோ தீவிலுள்ள மக்களை கொன்றதுடன் அவர்களின் சொத்துகளையும் எரித்ததைத் தொடர்ந்தே அமைதிப் பேச்சுகள் தொடர்பிலான கொள்கையை தாம் மாற்றியுள்ளதாக டுரேஸா தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று முன்தினம் கருத்துத் தெரிவித்திருந்த பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி குளோரியா மகாபாகல் அரோயா சட்ட ஒழுங்குகள் மற்றும் அரசியலமைப்பு என்பவற்றினூடாகவே அமைதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் வன்முறைகள், பலவந்தப்படுத்தல்கள் மற்றும் துப்பாக்கி முனைகளினூடாக அமைதி உடன்படிக்கையை அடைய முடியாதெனவும் தெரிவித்திருந்தார்.

சுமார் 4 மில்லியன் முஸ்லிம்களைக் கொண்ட நாட்டின் தென்பகுதியில் சுயாட்சி கோரி முஸ்லிம் போராளிகள் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.