முல்லைத்தீவில் மர்மக் காய்ச்சலால் 20 நாட்களுக்குள் 9பேர் பலி!

முல்லைத்தீவு மாவட்டம், முல்லைத்தீவு நகரத்தில் வேகமாகப் பரவிவரும் ஒருவித காய்ச்சலால் கடந்த 20 நாட்களுக்குள் 9பேர் பலியாகியுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பில் கொழும்பு சுகாதாரப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டு, காய்ச்சலுக்கான காரணத்தை ஆராய்வதற்காக கொழும்பிலிருந்து மருத்துவக் குழுவொன்று முல்லைத்தீவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதுடன் தடுப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், இக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் கேதீஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில், இக்காய்ச்சல் தொடர்பாக மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு நாம், அதற்கான காரணத்தை ஆராய்ந்துவரும் நிலையில், கொழும்பு சுகாதாரத் திணைக்களத்திற்கும் அறிவித்திருந்தோம்.

எமது மருத்துவக் குழுக்கள் இணைந்து இக்காய்ச்சலுக்கான வைரஸை இனங்காணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார்.