முற்போக்குத் தமிழ்த் தேசியம் – ஆற்றலும் ஆற்றலின்மையும் : விஜய்

ஈழ மக்களின் வாழ்நிலையோடு எந்தத் தொடர்புமின்றி புலம் பெயர் நாடுகளில் சில தனிநபர்களை முன்னிறுத்திய எழுத்தாக்கங்களும், அதனோடிணைந்த அருவருக்கத்தக்க அவதூறுகளும் நம்பிக்கையை உரைப்பதில்லை. தோல்வியின் வடுக்களிலிருந்து வடியும் இரத்ததில் இன்பம் காண்பது போன்ற கோரத்தைத் தான் காண்கிறோம். ஒரு பகுதியின் அவதூறுகளும் அவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக இன்னொரு பகுதியின் வாதங்களும் எதிர்காலம் குறித்துச் சிந்திப்பதைத் தடுக்கிறது.

இலங்கை அரசு கட்டமைக்கும் வலைப் பின்னளுள் சிக்கிக்கொண்ட பிறிதொரு தொகுதி முற்போக்குச் சிந்தனைக்கு எதிரான தடுப்புச்சுவரை தனது நலன்களிலிருந்து மேலும் உறுதியாக்க முனைகிறது.

உறுதியான தத்துவார்த்தப் பின்புலமற்ற ஈழ மக்களின் போராட்டத்தின் இழப்புக்களிலிருந்து கற்றுக்கொள்ளவும், அதற்கான வழிமுறைகளைத் தேடவும் புலம் பெயர் தமிழர்கள் எமக்கு நிறையவே பங்காற்ற முடியும். அதற்கான குறைந்த பட்ச சுதந்திரம் இலங்கைக்கு வெளியில் தான் கிடைக்கிறது.

எமது சூழலுக்கு ஏற்ற நடைமுறைத் தந்திரோபாயங்களை நாமே வகுத்துக்கொள்ளவேண்டும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லையெனினும், கோட்பாட்டுரீதியில் இலங்கைக்கு அப்பாலான தமிழ்ப் பேசும் மக்களின் பங்களிப்பு காத்திரமான பாத்திரத்தை வகிக்கமுடியும் என்பதில் சந்தேகமில்லை.

நம்மை முற்போக்குவாதிகளாகக் நாமே கருதிக்கொள்வதனால் அதிலிருந்து தொடங்கிச் செல்ல முனைகின்றேன். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முற்போக்குவாதம் – முற்போக்கு வாதிகள் குறித்துப் பேசிவருகின்றோம். ஆயினும் அது குறித்த தெளிவான வரையறைகள் இன்னமும் முன்வைக்கப்பட்டதாக அறிய முடியவில்லை.

தமிழ்ப் பாராளுமன்ற வாதத்திற்கும், ஆயுத இயக்கங்களின் இராணுவவாதக் கண்ணோட்டத்திற்கும் மாறுபட்ட கருத்துக்களை முற்போக்கவாதம் என்று குறிப்பிடும் போக்கே காணப்படுகிறது. அத்துடன் முற்போக்குவாதம் என்பது புதிய பாதை என்றும் மூன்றாவது பாதை என்றும் இனங்கண்டு கொள்ளப்படுகிறது. தமிழ் முற்போக்குவாதம் அல்லது புதிய பாதை அல்லது மூன்றாவது பாதை என்பன தேசியப் போராட்டத்தின் வழியாக மேற்கிளம்பியதனால் இதனை தமிழ்த் தேசிய முற்போக்கு வாதம் என அடையாளம் காணலாம். தமிழ்த் தேசிய முற்போக்கு வாதம் அடிப்படையில் பின்வரும் விடயங்களைக் கொண்டமைந்திருந்தன.

1. தேசிய விடுதலைப் போராட்டத்தினை ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் என்ற வகையில் ஏற்றுக்கொண்டமை. அதற்கான அரசியல் தீர்வு குறித்து முரண்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

 2. தமிழ்ப் பாராளுமன்ற வாதம் முன்வைத்த தமிழ் உயர்குழாத்தினரின் விடுதலையை மறுத்து மக்களின் விடுதலையை வலியுறுத்தியமை

3. இராணுவவாதக் கண்ணோட்டத்திற்கு மாறாக சனநாயகம் மற்றும் மக்கள் புரட்சியை வலியுறுத்தியமை.

4. சமூக மாற்றத்தை வலியுறுத்தியமை. அரசியல் உள்ளீடற்ற மேகுறித்த வெற்றுச் சுலோகங்கள் தான் முற்போக்குத் தேசியம் என வரைமுறை செய்யப்பட்டது. 1980களில் ஆயுதப்போராட்டம் முனைப்புப் பெற்ற வேளையில் உருவான தமிழ் இளைஞர் இயக்கங்களில் பல முற்போக்குவாதத்தினைப் பேசின .

அதனடியாக தமது இயக்கத்தினை உருவாக்கவும் முனைந்தன. புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் என்பன இத்தகைய இயங்கங்களாக தங்களை இனங்காட்ட முனைந்தன.

அதேவேளை மாக்சிச – லெனினிசக் கட்சிகளின் மரபுத்தலைமைகள் தமிழ்த் தேசிய விடுதலைக்கான போராட்டத்தினை தமிழ் உயர்குழாத்தினரின் போராட்டமாகப் புரிந்து கொண்டு அதனை மக்கள் புரட்சிக்கு எதிரானதாகக் கருதி விமர்சிக்க முனைந்த வேளை, அக்கட்சிகளிலிருந்து விலகியவர்களால் மாக்சிச – லெனினச முறைமையிலிருந்தும் இயக்கங்கள் உருவாகின.

என்.எல்.எப்.டி இவ்வாறானதொரு இயக்கமாக அமைந்தது. தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை ஒரு பின்னணியில் இயங்கியது.

தவிர மக்கள் திரள் அமைப்புக்களைக் கட்டமைப்பதனூடான ஆயுதப் போராட்டம் என்ற கருத்தைப் “பாசறை” என்ற சிறிய குழுவும் முன்வைத்தது.

புலிகளும், ரெலோவும் ஆயுதக்கண்ணோட்டத்தினை முன்வைத்து வளர்ச்சி பெற்று வந்தன. 1983 இல் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையத் தொடர்ந்து மேலெழுந்த தமிழ்த் தேசிய அலையை இந்தியா பயன்படுத்திக்கொண்டு, முற்போக்கு அரசியல் பின்புலம் ஏதுமற்ற ஆயுத அணிகளை உருவாக்குவதில் முனைப்புக்காட்டியது.

உணர்ச்சிமயப்பட்ட இளைஞர்களை அணிதிரட்டிய இந்திய அரச உதவிபெற்ற ஆயுதக் குழுக்கள் பெரும் எண்ணிக்கையான இளைஞர்களைக் கொண்டு இராணுவக் குழுக்களை உருவாக்கின. இவை வெறும் ஆயுதக் குழுக்களாகவே அமைந்தன. உறுத்தியன மக்கள் திரள் அமைப்புக்களின் பலமும் கண்காணிப்பும் அற்ற இராணுவக் குழுக்கள் மக்களிலிருந்து அன்னியப்பட்டு உருவாகின.

மக்கள் பலமற்றவர்களாகவும், இயக்கங்கள் பலமானவையானதுமான ஒரு சூழல் உருவாகியது. வெகுஜன அமைப்புக்களை அடிப்படையாக முன்வைத்த சில குழுக்கள் மக்களை அணிதிரட்டி அவர்களைப் பலமுடையவர்களாக உருவாக்க மேற்கொண்ட முயற்சிகள் தோற்றுப்போயின.

குரூரமான பேரினவாத அடக்குமுறையின் தாக்கத்தாலும் தேசியவாத அலையின் தாக்கத்தாலும் மக்கள் தாம் இயக்கங்களை விடப் பலவீனமான நிலையிலும், அவர்களாலும் அடக்கப்படும் நிலையிலும் வாழ்கிறோம் என்று தெரிந்திருந்தும் தேசிய விடுதலை இயக்கங்களுக்கே ஆதரவு வழங்கினர்.

ஆக, மக்கள் போராட்டத்திற்கான அடித்தளம் சிதைக்கப்பட்டது. மக்களை அணிதிரட்டாமல்மல் அவர்களைப் போராடக் கற்றுக்கொடுக்காமல் மக்கள் போராட்டம் சாத்தியமற்றதாயிற்று.

இந்த நிலையில் சில இயக்கங்களின் தலைமைத்துவம், மாக்சிச – லெனினசக் கொள்கைகைளை தமது கொள்கைகளாக கூறிக்கொண்ட போதிலும், மக்கள் போராட்டத்தினை தமது போராட்டமாக காட்ட முனைந்த போதிலும், தங்களை முற்போக்குவாதிகளாகக் காடட முனைந்த போதிலும் நடைமுறையில் பிற்போக்குவாதக் கண்னோட்டத்தினூடே பிரச்சினைகளை அணுக முற்பட்டன.

வெகுஜன அமைப்பாக்கலுக்கான நிகழ்ச்சித்திட்டமும், அதற்கான அரசியல் நடைமுறையும் அற்ற வெற்றுக் கோசங்களாகவே மார்க்சிய லெனினியம் அமைந்திருந்தது. 1985களில் புளொட் இயக்கத்தின் தலைமை அராஜக வழியில் செயற்படத்தொடங்கியதனை அடுத்து அங்கு முற்போக்கு வாதிகளுக்கும் அராஜகவாதிகளிக்கும் இடையிலான உட்கட்சிப் போராட்டம் முனைப்புப் பெற்றது.

இறுதியில் அராஜகவாம் தலைமையை தக்கவைத்துக் கொள்ள முற்போக்கு வாதிகள் வெளியேறவெண்டிய நிலையேற்பட்டது. முற்போக்குவாதிகளில் பலர் உதிரியாகவும் சிறுசிறுகுழுக்களாகவும் சிதறுண்டு செல்ல சிலரால் தீப்பொறிக் குழு உருவாக்கப்பட்டது. மக்களை அணிதிரட்டுவதற்கான புறநிலை யதார்த்தம் அற்றுப் போயிருந்த நிலையில், இவர்களிடம் அதற்கான நடைமுறைத் தந்திரோபாயங்களை வகுத்துக்கொள்ள சந்தர்ப்பம் அற்ற நிலையில் கற்கைக் குழு என்ற நிலைக்குச் சுருங்கி அவை அழிந்து போனது.

அவ்வாறான நடைமுறைத் தந்திரோபாயத்தை வகுப்பதற்கான பங்களிப்பை தீப்பொறிக்கு நானும் வழங்கியிருக்க முடியும் என்ற நிலையில் கூட அது குறித்த அரசியல் அறிவு என்னிடம் அன்று இருந்ததில்லை. இதே காலகட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் பிலும் இத்தகையதொரு நிலை தோன்றியிருந்தது. உட்கட்சி முரண்பாடுகள் வலுவடையத்தொடங்கின.

இறுதியில் முற்போக்கு வாதிகள் வெளியேறவேண்டிய நிலையேற்பட்டது. கண்ணன் தலைமையில் குழுவாக சிலர் இயங்க முற்பட்டார்கள. அதே வேளை டக்ளஸ் தலையைமில் சிலர் தனிக்குழுவாக இயங்கத்தொடங்கினர். ஈரோஸ் இயக்கம் ஒரு மூடுண்ட அமைப்பாக இருந்தது. அவ்வியக்கத்தினுள்ளான நிலைமைகளும் இத்தகையதே எனக்கூறப்பட்டாலும் விடயங்கள் எவையும் வெளிவரவில்லை.

ஆயினும் தழிம் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் 1985 களில் முற்போக்குவாதம் ஒரு வலுவான இடத்தினைப் பெற்றிருந்தது. மார்க்சிய அரசியல் விவாதங்கள், தேடல்கள், கருத்தரங்கள், ஆய்வுகள் என்று எங்கும் பரந்து விரிந்த விவாதச் சூழல் காணப்பட்டது. ஆயினும் சிந்தனை முறையில் மாற்றம் உருவாவதற்கும் அரசியல் நடைமுறை யுக்திகளை பகுத்துக் கொள்வதிலும் எமது போராட்டம் போதிய அனுபவமற்ற அரும்பு நிலையிலேயே காணப்பட்டது. மேலே இனங்காட்டிய இயக்கங்கள் பாட்டாளிவர்க்கப் போராட்டத்தினை நோக்காகக் கொண்ட புரட்சிகர இயக்கங்கள் அல்ல.

ஆனால் அவை முற்போக்குவாத இயக்கங்களாக தம்மை வளர்த்தெடுக்க முனைந்தவை. மக்கள் அணிதிரட்டப்படாமல் பலமற்றிருந்த சூழலில், , பிற்போக்குவாத அதிகார வர்க்கத்தினர் அவ்வமைப்புக்களின் தலைமைத்துவத்தினைக் கைப்பற்றிக் கொள்ள, முற்போக்கு வாதிகள் சிதறுண்டு வெளியேறிய நிலையேற்பட்டது. இந்த இயங்கங்களின் பிரதான பிரச்சினைக்குரிய விடயம் அல்லது இந்த இயக்கங்களின் எதிர்காலப் பண்பினைத் தீரமானித்த விடயங்களில் இரண்டு முக்கியமானவை.

1. மக்களை அணிதிரட்டும் வழிமுறை அற்றிருந்தமை.

2. அதற்கான குறைந்தபட்சச் சாத்தியக் கூறுகளையும் இந்தியத் தலையீடு அழித்தமை.

ஆரம்பத்திலிருந்தே மக்களிலிருந்து அன்னியப்பட்டிருந்த இயக்கங்கள், வெறும் இரகசியத்தைப் பேணும் ஆயுதக் குழுக்களாக மாறிப்போயின. “நிழல் உலகக் குழுக்ககள்” போன்ற கட்டமைப்பு உருவானது. நிக்கரகுவாவில் 2000 பொதுமக்கள் அமரிக்க ஆதரவு பொலீஸ்நிலையத்துள் நுளைந்து அதனை நிர்மூலமாக்க கெரில்லாக்கள் ஆயுதங்களைக் கைப்பற்றி போலிசாரைக் கைது செய்தனர். ஈழத்தில் ஐந்து போராளிகள் மட்டுமே பொலீஸ்நிலையத்தை தாக்கிய சம்பவங்களும் உண்டு.

புலிகள் நிலப்பரப்புக்களைக் கைப்பற்றியிருந்த வேளைகளில் ஆசிரியர் சங்கம் போன்ற தன்னிச்சையான வெகுஜன அமைப்புக்கள் கூட அழிக்கப்பட்டு வெறும் இராணுவ அதிகாரம் மட்டுமே நிலைநாட்டப்பட்டது. புலிகள் ஏனைய இயக்கங்களை அழிக்கத் தொடங்கிய காலத்தில் அந்த இயக்கங்கள் உட்கட்சிப் பிரச்சினைகளால் வலுவிழந்த அமைப்புக்களாகவே இருந்தன. ஒரு புறத்தில் மக்கள் போராட்டம் குறித்துப் பேசியவர்கள் அதற்கான மார்க்கத்தைக் கண்டறியாத சூழலில், திட்டங்கள் ஏதுமின்றிய குழுக்களாக மாறின. இதனால் உறுப்பினர்களிடையே விரக்தியும் உட்கட்சிப் பூசல்களும் உருவாகின.

1985களின் பின் புலிகளின் தனித்தவமான தலைமை நிலைநிறுத்தப்பட்ட வேளை, தீப்பொறிக் குழு, உதிரியான சில நபர்கள் என்பனவே எஞ்சியிருந்தன. பின்னர் புலிகள் இவர்களையும் கைது செய்து காணமல் போகச் செய்தது மட்டுமன்றி, வெகுஜன அமைப்புக்களையும் செயலிழக்கச் செய்தன. செல்வி, தில்லைநாதன், தர்மலிங்கம் மற்றும் என்.எல்.எப.டி உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்டு காணமல் ஆக்கப்பட்டனர்.

1990 களின் பின் முற்போக்குவாதிகள் வட கிழக்கிற்கு அப்பால் செல்ல வேண்டிய நிலையேற்பட்டது. பலர் புலம்பெயர்ந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதன்பின்பான இருபதாண்டுகள் வட கிழக்கிற்கு அப்பாலான ஒரு இருப்பையே முற்போக்கு வாதிகள் கொண்டிருந்தனர். தீப்பொறிக்குழு மட்டுப்படுத்திய அளவில் அரசியல் பணிகளை மேற்கொண்டு வந்ததாகவே அறிய முடிகிறது. அதன் தலைவர் கேசவன் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்து வேளை புலிகளால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்.

கடந்த இருபதாண்டுகள் வட-கிழக்கில் மட்டுமன்றி தென்னிலங்கையிலும் முற்போக்குவாதிகள் இயங்க முடியாத ஒரு சூழலையே அரசும் புலிகளும் பேணிவந்தனர். புலம் பெயர்ந்த நாடுகளில் ஒப்பீட்டளவில் சுதந்திர நிலை காணப்பட்ட போதும் புலிகள் முற்போக்குவாதிகளை தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உட்படுத்தி செயற்பட முடியாத நிலைக்குத் தள்ளினர். இச்செயலிழப்புகச்செய்யும் இறுதி நோக்கம் இன்றும் அரச ஆதரவு சீரழிவு வாதிகளால் புதியவடில் முன்னெடுக்கப்படுகின்றது.

புலிகளின் தேசிய வாதம் மிகப்பெரும் அரசியல் கருத்தியலாக தமிழர் மத்தியில் கட்டியெழுப்பப் பட்டிருந்தது. புலிகள் பெரும் விடுதலைச் சக்திகளாக தோற்றம் காட்டினர். விமர்சனம் செய்ய முற்பட்டோர் தேசத்துரோகிகளாக ஆக்கப்பட்டனர். அழிக்கப்பட்டனர் அல்லது அடக்கப்பட்டனர். புலிகள் தோற்கடிக்கப்பட்ட இன்றைய நிலையினை நோக்குகையில், 1980 களின் அரசியல் நிலையிலேயெ இருந்து வருகிறோம்.

“தந்தை செல்வா” நிறுத்தியிருந்த அரசியல் நிலையிலே தமிழர்கள் இருந்து வருகிறார்கள். இறுதியில் “தந்தை செல்வா ” தமிழ் மக்களைக் கடவுள்தான காப்பாற்ற வேண்டும் எனக் கூறியதாக அறிகிறோம். புலிகள் பெரும் மக்கள் அழிவிலும் அகதி வாழ்விலும் விட்டுவைத்துள்ளனர். தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மக்கள் போராட்டங்களின் மூலமே அடையப்பெற வேண்டும் என்பதே உரிமைகளுக்ககாகவும் விடுதலைக்காகவும் போராடி உரிமைகளையும் விடுதலையையும் பெற்று வாழ்கின்ற மக்களின் வரலாறு எமக்கு உணர்த்துகிறது.

மனித சமூகம் பெற்றுக் கொண்டுள்ள உரிமைகளும் விடுதலையும் போராடிப்பெற்றவை என்பதே வரலாறு. வரலாற்றனுபவங்களிலிருந்து படிப்பிகைளைப் பெற்று விடுதலைக்கான போராட்டத்தினை சரியான திசை வழியில் முன்னெடுத்துச் செல்வதினூடாகவே விடுதலையை அடையப்பெற முடியும். மக்கள் விடுதலைக்கான சரியான திசை வழியைத் தேடும் ஒரு கடுமையான, நேர்மையான பணியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வோம்.

இன்று வரை தமிழர்களின் இன விடுதலைக்கான முற்போக்குக் கருத்தியலோ – சிந்தனைகளோ உருவாக்கப்படவில்லை என்பதிலிருந்து தொடங்கிச் செல்ல வேண்டும் போலிருக்கிறது. மகாச்சி-லெனினச வாதிகள் – இடதுசாரிகள் தமிழர்களின் இனவிடுதலைக்கான போராட்டத்தினை ஒரு தற்காலிக சமூக முரண்பாடுகளின் விளைவாகவும் தமிழ் உயர்குழாத்தினரின் அரசியலாகவும் கருதுவதாகக் கூறினர்.

இன முரண்பாடுகள் முப்பதாண்டுகள் கடந்தும் பிரதான முரண்பாடு என்ற நிலையிலிருந்து மாற்றமடையாது தொடர்கிறது. புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பும் அது அவ்வாறே தொடர்கிறது. அதே வேளை இன்று இலங்கையின் இடது சாரிக்கட்சிகள் இனரீதியாப் பிழவுண்டு கிடக்கும் நிலையினேயே காணமுடிகிறது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது!

தமிழர்களை மையப்படுத்திய இடதுசாரிகள் புலிகளை எதிர்க்காதும், இன ஒடுக்குமுறைகளை எதிர்த்தும் தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். மறுபுறம் சிங்களவர்களை மையப்படுத்திய இடதுசாரிகள் அரசை ஆதரித்தும் புலிகளை எதிர்த்தும் தமது இருப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இவர்கள் இருசாராரும் தத்தமது இனம்சார் மக்கள் விரோதிகளுடன் சமரசப் போக்கினை கொண்டிருந்தமை முக்கிய கவனிப்பிற்குரிய விடயமாகும். தேசிய வாதம் குறித்த இடதுசாரிகளின் மருட்சி தேசியவாதம் இனவாதமானகவும் பாசிசமாகவும் வளரச்செய்ததில் பெரும் பங்காற்றியது என்று துணிந்து கூறலாம். அல்லது இடதுசாரிகள் மத்தியில் அதிகார வர்க்கத்தின் ஆட்சி நிலை கொண்டுள்ளதாகவே நினைக்க வேண்டும். அதற்கான நியாயாங்கள் இல்லாமலில்லை. இறுதியாக தமிழர்களின் அரசியல் பற்றி அக்கறைப்படுவோர் உலகளாவிய ரீதியிலலும் தேசிய அளவிலும் முனைப்புப்பெற்றுள்ள பின்வரும் விடயங்கள் குறித்து அக்கறைப்பட்டாக வேண்டும்.

1. தேசிய இன விடுதலைப் போராட்டம் – இன உரிமைக்கான போராட்டம்.

2. சனநாயக விடுதலைக்கான போராட்டம்

3. பாட்டாளி வர்க்கப் புரட்சி.

மற்றொரு புறம் இலங்கைத் தமிழ் மக்களிடையே முக்கிய முனைப்புப் பெற வேண்டிய மற்றொரு விசேடமான விடயம் பெண்கள் விடுதலைக்கான போராட்டம் என்பதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். தமிழ்த் தேசிய வாதம் பின்வரும் வழிகளில் ஆற்றல் மிக்க பங்களிப்பை வழங்கும்.

1. சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக் கெதிரான தமிழ் இனத்தேசியத்தின் விடுதலை

2. நவீன முதலாளித்துவமும் – அனைத்து ஒடுக்குமுறைகளுக் கெதிராகப் போராடும் அரசியலறிவும் போராட்டக்குணமும் கொண்ட பாட்டாளி வர்க்கமும் வளர்ச்சி பெறாத இலங்கையில் மக்களை அரசியல் மயப்படுத்தவும், அணிதிரட்டவும், சமூகப்பிரச்சினைகளுக்கெதிராக போராடவும் முன்வைத்தல். .

மூன்றந்தர அவதூறுகளிலிருந்தும் அரசியல் சண்டித்தனங்களிலிருந்தும் விடுதலை அடைந்து குறைந்தபட்ச ஆரோக்கியமான அரசியல் விவாதங்களுக்கு வித்திடுவோமாயின் நாளைய சமூகத்திற்குக் காத்திரமான பங்களிப்புச் செய்தவர்களாவோம்.

விவாதங்களிலிருந்து முன்னோக்கிச் செல்வோம்.

2 thoughts on “முற்போக்குத் தமிழ்த் தேசியம் – ஆற்றலும் ஆற்றலின்மையும் : விஜய்”

  1. வெள்ளீக்கிழமை லண்டன் சீறீ முருகன் கோயிலுக்கு வெளீக்கிட்டுக் கொண்டிருக்கும் போது கள்ளர் முகத்திலா நான் முழிக்க வேண்டும்.,கட்டைச் சட்டையும் ஆளூம் புளீயங்கூடல் சந்தியில் நிற்கிற எருமைமாடு மாதிரித்தான் இருக்கிறது,இவனை நம்பி விசுவமடுவுக்கு விவசாயத்திற்கு போன சனமும் இல்ல,இந்த வேடதாரியும் இல்ல,இந்தப் பின்னூட்டம் வராது எனத் தெரியும் ஆனால் வயிறூ எரிந்த எத்தனையோ ஈழத்தமிழரின் சாபம் அவன்ர எச்சத்தைக் கூட விடவில்லை என்பது இந்த உலகுக்கே தெரியும்.மண்ணாங்கட்டி தமிழனை மட்டுமா இவன் அழித்தான்,தமிழையும் அழித்தான்.பாவிப்பயல்.

    1. தமிழ்மாறன் என்பவர் கலப்பு ரத்தம் உடையவர் என்பதையே இந்தப் பதிவு காட்டுகிறது. படத்திலிருப்பவர்கள் சுத்தமான தமிழ் ரத்தம் உடையவர்கள்…

Comments are closed.