மும்பைச் சம்பவத்தில் அசல் கொல்லப்பட்டுவிட்டார் நான் போலி : கசாப்

gasapமும்பை: எனக்கும், மும்பை சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை. என்னை சித்திரவதை செய்து போலீஸ் தரப்பில் ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்து வாங்கினர் என்றார் கசாப்.

இதை விட உச்சகட்டமாக பாலிவுட்டில் சேரவே தான் மும்பைக்கு வந்ததாகவும் கூறி கோர்ட்டை ஸ்தம்பிக்க வைத்தார் கசாப்.

கசாப் கூறுகையில், மும்பையில் தாக்குதல் சம்பவம் நடந்த நவம்பர் 26ம் தேதிக்கு 20 நாட்களுக்கு முன்பாகவே நான் மும்பைக்கு முறையான விசா மூலம் வந்து விட்டேன்.
சினிமாவில் சேர்ந்து பணியாற்றவே நான் மும்பைக்கு வந்தேன். ஆனால் நவம்பர் 25ம் தேதி என்னைக் கைது செய்து, தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் சேர்த்து விட்டனர்.

நான் கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி மாஜிஸ்திரேட் முன்பு அளித்த வாக்குமூலம் நிர்பந்தத்தால் கொடுத்ததாகும். உண்மையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் சம்பவம் நடந்தபோது நான் இல்லை. நான் ரயில் நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கியால் சுடவும் இல்லை.

நான் ரயில் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டதைப் பார்த்தாக சாட்சி பரத் தாமோர் என்பவர் கூறியுள்ளது தவறானதாகும்.

உண்மையில் சம்பவம் நடந்த சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்த தீவிரவாதி என்னைப் போலவே இருந்துள்ளான். எனது உயரம், முகம் அப்படியே அவனைப் போலவே உள்ளது. அவனைத்தான் உண்மையில் போலீஸார் சுட்டுக் கொன்றனர். அவனது பெயர் அபு அலி என்று என்னிடம் பின்னர் போலீஸார் தெரிவித்தனர்.

அவனைக் கொன்று விட்டு என்னைப் பிடித்துக் கைது செய்து இந்த வழக்கில் சேர்த்துள்ளனர்.

நவம்பர் 25ம் தேதி நான் ஜூஹு பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தேன். அன்று ஒரு படம் பார்க்க சென்று கொண்டிருந்தபோதுதான் போலீஸார் என்னைக் கைது செய்தனர்.

பாகிஸ்தானிலிருந்து ஜூஹு பகுதிக்கு ஒரு பாகிஸ்தானியர் வருவது முதல் முறையல்ல. எனவே நான் வந்ததிலும் ஆச்சரியும் இல்லை. உண்மையில் நான் தங்குவதற்கு ஒரு வீடு பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த சமயத்தில்தான் என்னைப் போலீஸார் கைது செய்து விட்டனர்.

என்னை உள்ளூர் போலீஸார்தான் முதலில் கைது செய்தனர். பின்னர் குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

நவம்பர் 27ம் தேதி மாஜிஸ்திரேட் முன்பு என்னை கொண்டு போய் நிறுத்தினர். அப்போது நான் ஒரு வாக்குமூலம் அளித்தேன். ஆனால் அது ஒப்புதல் வாக்குமூலம் அல்ல. நான் கொடுத்த வாக்குமூலத்தை போலீஸார் திரித்துக் கூறி விட்டனர்.

பத்வார் பார்க் பகுதியில் நாங்கள் ஒரு படகில் வந்திறங்கியதாக கூறுவதிலும் உண்மை இல்லை. கோர்ட்டில்தான் முதல் முறையாக அந்தப் படகை நான் பார்த்தேன்.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தலைவர்களுடன் நான் பேசவும் இல்லை. எனது புகைப்படம் டிவி, செய்தித்தாள்கள் வந்து விட்டதால் நான்தான் அது என்று சாட்சிகள் கூறியிருப்பார்கள்.

டேவிட் கோல்மேன் ஹெட்லியை நான் சந்தித்துள்ளேன். அது உண்மைதான்.

(அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இந்த வழக்குக்கும், ஹெட்லிக்கும் இப்போது என்ன சம்பந்தம் என்று கேட்டார்)

என்னை முழுமையாக சொல்லவிடுங்கள். பிறகு எனக்கு பேச வாய்ப்பு கிடைக்காது.

(இதைக் கேட்டதும் குறுக்கிட்ட நீதிபதி, கோர்ட் உன் முன்பு என்ன கேள்விகளைக் கேட்டுள்ளதோ அதற்கு மட்டுமே பதில் சொல்ல வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார். இருப்பினும் ஹெட்லி குறித்து தொடர்ந்து கூறினான் கசாப்.)

போலீஸ் காவலில் நான் இருந்தபோது, என்னை சில வெளிநாட்டுக்காரர்கள் விசாரித்தனர். அவர்களில் ஒருவர் டேவிட் கோல்மேன் ஹெட்லி.

போலீஸார் என்னை அடித்து உதைத்து சித்திரவதை செய்து ஒப்புதல் வாக்குமூலம் பெற்றனர். அப்போது என்னிடம் சில வெளிநாட்டுக்கார்களும் விசாரணை நடத்தினர். அவர்களில் ஒருவர்தான் ஹெட்லி.

என் மீதான அனைத்துப் புகார் களையும் நான் திட்டவட்டமாக மறுக்கிறேன் என்றார் கசாப்.

அப்போது குறுக்கிட்ட இன்னொரு குற்றவாளியான சபாபுதீன் அகமதின் வக்கீலான இஜாஸ் நக்வி நீதிபதியைப் பார்த்து, ஹெட்லி என்று பெயர் குறிப்பிட்டுள்ளான் கசாப். எனவே இதை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும் என்றார்.

அதற்கு நீதிபதி, முதலில் கசாப் தனது வாக்குமூலத்தை முடிக்கட்டும். பிறகு அவர் என்ன சொல்ல விரும்புகிறாரோ அதைச் சொல்லட்டும் என்றார்.

இதையடுத்து இஜாஸ் நக்வி ஒரு மனுவை சமர்ப்பித்தார். அதில், கசாப் ஹெட்லியின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளதால், ஹெட்லியை வரவழைத்து விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் அவருடைய பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

ஹெட்லியையும் விசாரிக்க வேண்டும் என கருதுகிறேன். கசாப், பாஹிம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகியோரை மட்டும் விசாரிக்காமல் ஹெட்லியையும் விசாரிக்க வேண்டும்.

எப்.பி.ஐ. ஏஜென்ட்டாக வந்து ஹெட்லி கசாப்பை விசாரித்திருக்கலாம் என கருதுகிறேன் என்றார் நக்வி.

ஹெட்லியின் பெயர் இன்றைய வழக்கில் இடம் பெற்றதும், கசாப்பை அவர் விசாரித்ததாக வெளியாகியுள்ள தகவலாலும் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஹெட்லியை மும்பை தீவிரவாத வழக்கில் தொடர்புடையவராக அமெரிக்க எப்.பி.ஐ கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் சேர வந்தேன், என்னைப் போல இருந்த தீவிரவாதியை கொன்று விட்டு என்னைக் கைது செய்து விட்டனர் என்று கசாப் படா தில்லாக கூறியிருப்பது மும்பை கோர்ட்டில் இன்று பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

மும்பை தாக்குதல் வழக்கை நீதிபதி தஹிளியானி விசாரித்து வருகிறார். வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 250க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.