முக்கிய புலி உறுப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் புலிகளின் முக்கிய ஆவணங்கள் மீட்பு!

விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் திட்டங்கள், ஆயுதக் கொள்வனவு விபரங்கள், அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் அடங்கிய கோப்புக்கள் சில மீட்கப்பட்டிருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டம் வெள்ளாமுள்ளிக்குளம் பகுதியில் நிலத்தின்கீழ் புதைத்துவைக்கப்பட்டிருந்தே இந்தக் கோப்புக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்த 272 கோப்புக்கள் மீட்கப்பட்டிருப்பதாக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அத்தியட்சகர் வாஸ் குணவர்த்தன கூறினார். 
விடுதலைப் புலிகள் அமைப்புடன் கடந்த 10 வருடங்களாக இணைந்து செயற்பட்டுவந்த ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இவை மீட்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதியுதவி வழங்கியவர்கள், வங்கிக் கொடுக்கல் வாங்கல்கள், ஆயுதக் கொள்வனவு பற்றிய விபரங்கள், ஆயுதக் கடத்திலில் ஈடுபடும் கப்பல்கள் பற்றிய விபரங்கள் போன்றன இந்தக் கோப்புக்களில் உள்ளடங்கியிருப்பதாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு கூறியுள்ளது.