சிறுவர்கள் கூட வெளியே செல்ல முடியாத நிலை :மாவை

வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் அவசர சிகிச்சைக்காக சிறுவர்கள் கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதீராஜா தெரிவித்துள்ளார்.
சிறுவர்களை வெளி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று மேலதிக சிகிச்சைகளை வழங்குமாறு ஆலோசனை வழங்குகின்ற போதிலும், பாதுகாப்புத் தரப்பினர் அதற்கு மனுமதி மறுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக முகாமிற்குச் செல்லும் வீதிகளில் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாதநிலையில் இருப்பதாகவும், இதனால்

மருத்துவ சேவைகளை முகாமிற்கு எடுத்துச் செல்வதில் சிக்கல்கள் நிலவுவதாகவும் மாவை சேனாதீராஜா சுட்டிக்காட்டினார்.
மேலும், வெள்ளத்தின் பின்னரான முகாமில் ஏற்பட்டுள்ள தொற்று நோய்கள் காரணமாக சுகாதார சேவையை உரிய முறையில் வழங்கமுடியாத நிலையிலேயே மருத்துவர்கள் இவ்வாறு வெளிவைத்தியசாலைகளுக்கு சிறுவர்களை அழைத்துச் செல்லுமாறு ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

இவ்வாறு சுகாதார ரீதியாக பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ள முகாமிலுள்ள மக்கள் மீது பாதுகாப்புத் தரப்பினரால் மேலும் அழுத்தங்களை மேற்கொள்வதன் காரணமாக எதிர்காலத்தில் முகாம் மக்களுக்கும், பாதுகாப்புத் தரப்பினருக்குமிடையே மோதல்கள் ஏற்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுதொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, முகாமில் தேவையான அனைத்து சுகாதார வசதிகள் இருப்பதாகவும், முகாமிகளிலிருந்து எவரும் வெளியேற அனுமதிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

அவ்வாறு ஏதேனும் ஒருவருக்கு வெளி வைத்தியசாலைக்குச் சென்று விசேட சிகிச்சைகள் பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய நிலை ஏற்படுமாயின் அதற்கு பாதுகாப்புத் தரப்பினர் ஒழுங்குகளை செய்துகொடுப்பதாகவும் கூறியுள்ளார்.