முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்கக்கோரும் பிரசாரத்தை சர்வதேச மன்னிப்புச் சபை முன்னெடுத்துள்ளது.

  
 
    வவுனியா தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்கக்கோரும் பிரசாரமொன்றை சர்வதேச மன்னிப்புச் சபை தனது உறுப்பினர்கள் மத்தியில் மேற்கொண்டுள்ளது. “முகாம்களைத் திறந்துவிடு” என்ற இந்தப் பிரசாரத்தை சபையின் பொதுச்செயலாளர் இரானி கான், சபையின் சர்வதேசப் பிரதிநிதிகள் மத்தியில் ஆரம்பித்துள்ளார்.

துருக்கியில் நடைபெற்று வரும் மன்னிப்புச் சபையின் சர்வதேசப் பிரதிநிதிகள் கூட்டத்திலேயே இந்தப் பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது.

‘முகாம்களைத் திறந்துவிடு” பிரசாரத்தின் ஒரு பகுதியாக இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கான   கோரிக்கைகள் அடங்கிய காணொலி ஒன்று ‘பேஸ்புக்’ சமூக வலைத் தளத்தில் சர்வதேச மன்னிப்புச் சபையால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

– மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தை இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்றும்,

– இலங்கை அரசாங்கம் கோரும் உதவிகளை இந்திய அரசாங்கம் கண்காணிப்பதுடன், இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களின் நிர்வாகத்தை படையினரிடம் இருந்து பொது அதிகாரிகளின் கைகளுக்கு உடனடியாக மாற்றுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும்,அந்த காணொலியில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மன்னிப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில்:

போர் முடிவடைந்து இரு மாதங்கள் கடந்துவிட்டது. இருந்தபோதும், புதிதாக இடம்பெயர்ந்தவர்களின் தேவைகளை அதிகாரிகள் இன்னும் சரியாகக் கவனிக்கவில்லை. முகாம்களில் அளவுக்கு மீறிய கூட்டநெரிசல் காணப்படுவதுடன் அவை சுகாதாரமற்றவையாகவும் உள்ளன.

அதற்கும் மேலாக இவை அனைத்தும் செயற்பாட்டு ரீதியாகத் தடுப்பு முகாம்கள். தரைப்படையினராலேயே அவை நிர்வகிக்கப்படுகின்றன. அங்கிருந்து மக்கள் வெளியே செல்வது தடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் அடிப்படை சட்டப் பாதுகாப்புக்கூட தடைசெய்யப்பட்டுள்ளது.

எவ்வளவு காலத்துக்கு என்று தெரியாமலேயே குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட மொத்தக் குடும்பத்தையும் அடைத்து வைத்திருக்கிறது. வடிகட்டும் சோதனைகளுக்காக அவர்களை தடுத்து வைத்திருக்க வேண்டியுள்ளது என்று அரசாங்கம் இதற்கு கூறும் காரணம் நியாயமானதல்ல.

இடம்பெயர்ந்த மக்கள் உதவிப் பணியாளர்களுடன் பேசுவதற்குக்கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த சுயாதீன கண்காணிப்பாளரும் கட்டுப்பாடின்றி முகாம்களுக்குச் சென்றுவர அனுமதிக்கப்படாத நிலையில் அங்குள்ள மக்கள் பெரும்பான்மையோர் பாதுகாப்பற்ற நிலையிலேயே உள்ளனர். காணாமல் போதல், கடத்தல், வகைதொகையற்ற கைது மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற ஆபத்துக்களையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

மக்களை மனம்போன போக்கில், கட்டாயப்படுத்தி அடைத்து வைக்கும் தனது கொள்கையை இலங்கை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கேட்கிறது. இத்தகைய தற்காலிக தங்கும் இடங்கள் தமக்குத் தேவை எனக் கருதும் மக்களை கட்டுப்பாடின்றி முகாம்களுக்கு வந்து செல்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.

அனைத்துலக சமூகத்தின் உதவி மற்றும் ஆதரவுடனும் இடம்பெயர்ந்த மக்களின் ஒத்துழைப்புடனும், முகாம்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதற்கான தெளிவான இலக்கையும் காலப்பகுதியையும் இலங்கை அரசாங்கம் கண்டிப்பாக ஏற்படுத்த வேண்டும்.

இல்லையேல் இப்போது இருக்கும் நிலையிலும் பார்க்க மேம்பட்டதான, சொந்த இடங்களைவிட்டு வேறு இடங்களில் குடியமர்த்துதல் போன்ற மாற்றுத் திட்டங்களையாவது முடிந்தளவு விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
– என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.