மாற்று அரசியலுக்கான புதிய பயணத்திற்குப் பலம் சேர்க்க கேத்தல் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வேண்டுகிறோம்:சி. கா. செந்திவேல்

 தமிழ் மக்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறை பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது. கடந்த காலங்களில் அதனைக் கடைப்பிடித்து வந்த ஐக்கிய தேசியக்கட்சியும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தமிழ் மக்களை தொடர்ந்தும் அழிவுகளுக்கும் பேரவலங்களுக்கும் உள்ளாக்கிய பேரினவாதக் கட்சிகளேயாகும். எனவே அவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் வந்து வாக்குகள் கேட்பதற்கு எவ்வித அருகதையும் அற்றவர்கள்.

அதே போன்று தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியம் என்ற மூடுமந்திரத்தை உச்சரித்துக் கொண்டு பாராளுமன்றக் கதிரைகளுக்காகத் தமிழ் மக்கள் மத்தியில் வெறும் இன உணர்ச்சிக் கொள்கைகளை முன்வைத்து வந்த ஆதிக்க அரசியல் தலைமைகளும் தமிழ் மக்களின் அழிவுகளுக்கு காரணமாவர். எனவே மீண்டும் இத் தலைமைகளையும் அவர்களது வெளிவேசங்களையும் நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது. எனவே இதுவரை சென்ற பழைய பாழடைந்த பாதையில் இருந்து விலகி மக்கள் மாற்று அரசியல் பயணத்தை புதிய திசையில் முன்னெடுக்க வேண்டும். அத்தகைய தூரநோக்கு மிக்க கொள்கையையே புதிய ஜனநாயக கட்சி முன்வைக்கிறது. அதனை முன்னிறுத்தியே இத் தேர்தலில் கேத்தல் சின்னத்தில் கட்சி சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடுகிறது.

 இவ்வாறு கரவெட்டி மத்தி சம்மந்தர் கடையடிக்கு அருகாமையில் இடம் பெற்ற புதிய ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய புதிய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் முதன்மை வேட்பாளருமான சி. கா. செந்திவேல் கூறினார்.

 வேட்பாளர் க. ஆனந்தகுமாரசாமி தலைமையில் நடைபெற்ற இப் பிரசாரக் கூட்டத்தில் மேலும் செந்திவேல் பேசுகையில், தமிழ் மக்கள் வரலாறு காணாத பேரழிவுகளையும் பேரவலங்களையும் அனுபவித்த சூழலில் இத் தேர்தல் நடைபெறுகிறது. அதேவேளை அவற்றுக்குக் காரணமாக இருந்த பேரினவாத ஆளும் வர்க்க கட்சிகளோ அன்றி தவறான கொள்கைகளை முன்வைத்து தமிழ் மக்களையும் தமிழ் இளைஞர்களையும் குருட்டுத்தனமாக வழிநடாத்திய தமிழ்த் தலைகளோ தாம் அவற்றுக்குப் பொறுப்புதாரிகள் இல்லாதவர்கள் போன்று வெட்கமின்றி மக்களிடம் வாக்குகள் கேட்கிறார்கள். பேரினவாதக் கட்சிகள் தமது கொடூர உருவங்களை மறைத்து பணத்தை வாரி இறைத்து பல்வேறு வர்ணங்களில் மக்களை ஏமாற்ற நிற்கின்றன. அதேவேளை ஐக்கியம், ஒற்றுமை, தன்மானம் பற்றிப் பேசிவந்த தமிழர் தேசியக் கூட்டமைப்பு நான்கு துண்டுகளாகி தொடர்ந்தும் தமிழ் மக்களை பாராளுமன்றக் கதிரைகளுக்காகக் காட்டிக் கொடுக்க முன் நிற்கிறார்கள். அதற்காக ஒவ்வொரு தரப்பும் தமிழ்த் தேசியம் என்ற மூடு மந்திரத்தை உச்சரித்து நிற்கிறார்கள். ஆனால் தமிழ்த் தேசியம் என்ற மூடு மந்திரத்தை மக்கள் இப்போது சரியாக அடையாளம் கண்டு வருகிறார்கள்.

அறுபத்து மூன்று வருடங்களாகத் தமிழ்த் தலைமைகள் இதுவரை முன்னெடுத்து வந்த பழைமை வாத பிற்போக்குத் தமிழ்த் தேசியத்தையே நிராகரித்து எதிர்க்கின்றோம். அதே வேளை தமிழ் மக்கள் மத்தியில் முற்போக்கான தமிழ் தேசியம் உருவாகி முன்செல்லுமாக இருந்தால் அதனை வரவேற்கத் தயாராகவே உள்ளோம். ஆனால் எந்தவொரு தமிழ்த் தலைமையாவது கடந்தகாலப் பட்டறிவின் ஊடாகத் தமிழ் மக்கள் மத்தியில் முற்போக்கான தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கத் தயாராக இல்லை. தொடர்ந்தும் தமிழ்த் தேசியத்தின் பெயரால் தமிழ் மக்களை அழிவுப் பாதையில் இழுத்துச் செல்லவே முன்நிற்கிறார்கள். அத்தகைய சக்திகளுக்கு இத் தேர்தலில் தமிழ் மக்கள் தமது வாக்குப் பலத்தைப் பாவித்து சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும்.

 ஜனநாயகம், சுயநிர்ணயம், ஐக்கியம், சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் உழைக்கும் வர்க்க சக்திகளின் தலைமையிலான மக்களுக்கான மாற்று அரசியலே தமிழ் மக்களுக்கு புதிய திசை காட்டக் கூடியதாகும். அதனை மக்கள் முன்வைத்து அங்கீகாரம் பெறுவதற்கு இத் தேர்தலில் நாம் போட்டியிடுகின்றோம். எம்மிடம் பாராளுமன்றப் பதவி மோகமோ அன்றி முதலாளித்துவ சுகபோக  ஏமாற்று அரசியலோ கிடையாது. எனவே அரசியல் ரீதியில் சிந்தித்து மாற்று அரசியலுக்கான புதிய பயணத்திற்குப் பலம் சேர்க்க இத் தேர்தலில் கேத்தல் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வேண்டுகிறோம்.

இதேபோன்றதொரு தேர்தல் பிரசாரக் கூட்டம் கரவெட்டி மேற்கு கன்பொல்லை ஆலயம் முன்பாக வேட்பாளர் ஆ. தங்கராசா தலைமையில் நடைபெற்றது. இப் பிரசாரக் கூட்டங்களில் “தேர்தல் வருகிறது” என்ற வீதி நாடகமும் இடம் பெற்றது.