மார்க்சிஸ்ட் கட்சியையும் உடைத்த கருணாநிதி.

எல்லா கட்சிகளையும் சேர்ந்த எம்.எல்.ஏக்களும் தங்கள் கட்சியில் இணைந்து விட்டது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார் கருணாநிதி. அதிமுக கூடாரமே காலியாகிவிட்டது போன்ற தோற்றத்தை திமுகவும் அதன் ஊடகங்களும் இணைந்து உருவாக்குகின்றன. ஒட்டுண்ணி அரசியலான ஓட்டுப் பொறுக்கி அரசியலில் இதெல்லாம் சகஜம் என்றாலும் கம்யூனிஸ்டுகள் என்றால் நேர்மையானவர்கள் என்ற எண்ணம் பொது மக்களிடம் உண்டு. ஆனால் இந்த போலித் தேர்தல் முறையில் எவர் ஒருவரும் யோக்கியமானரில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் மார்க்ஸ்சிஸ்ட் கட்சியில் எம்.எல்.ஏ கோவிந்தசாமி. திமுகவின் .4 ஆண்டு சாதனைகளுக்காக துணை முதல்வர் மு..ஸ்டாலினுக்கு வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்போவதாக கோவிந்தசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து பாராட்டு விழா நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக் குழு கோவிந்தசாமிக்கு அறிக்கை அனுப்பியிருந்தது.அதில் கூறப்பட்டுள்ளதாவது, திமுக அமைச்சர்களை அழைத்துப் பாராட்டுவிழா நடத்துவது கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது. ஆகஸ்ட் 1ஆம் தேதி பாராட்டு விழா நடத்தக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு கோவிந்தசாமி எந்த பதிலும் அளிக்கவில்லை. இதுகுறித்து திருப்பூர் சென்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள், தீவிர ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கோவிந்தசாமி எம்எல்ஏ நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் இன்று அறிவித்துள்ளார்.கடந்த ஒருவருடத்திற்கு முன்பு, திருப்பூர் தொழிலதிபர்களுடன் கோவிந்தசாமி எம்எல்ஏ, முதல்வர் கருணாநிதியை சந்தித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அக்கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் பதவியில் இருந்து கோவிந்தசாமி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சட்டப்பேரவையில் 9 எம்எல்ஏக்கள் இருந்தனர். கோவிந்தசாமி கட்சியை விட்டு நீக்கப்பட்டதால் அதன்பலம் 8ஆக குறைந்துள்ளது.

2 thoughts on “மார்க்சிஸ்ட் கட்சியையும் உடைத்த கருணாநிதி.”

 1. பெரிய கட்சிக் கொள்கை… புடலங்கா கொள்கை!

  பாராட்டுவது என்பது ஒருவருடைய சுய உரிமை…… அதைக்கூட அனுமதிக்காத பாசிசம் பிடித்த கட்சியாகவே மார்க்சிஸ்ட் விளங்குகிறது……..

  இந்த நாடு எப்பதான் திருந்துமோ

 2. இது ஒன்றும் திருமண வாழ்த்துப் போல வாழ்த்தல்ல.
  பொது வாழ்வில் உள்ளவர்கட்குச் சில கட்டுப்பாடுகள் உள்ளன. கோவிந்தசாமி எந்த வித பிரதிபலனையும் எதிர்பாராமல் பாராட்டு விழா நடத்த மாட்டார். இத்தகைய சமரசங்கள் தான் காட்டிக் கொடிப்புகதும் வழி செய்கிறது.

  காலையில் ஒரு கட்சி — மாலையில் ஒரு கட்சி –நள்ளிரவில் ஒரு கட்சி என்று கட்சி தாவல் மலிந்த தமிழக அரசியல் சூழலில், அதற்குப் பழகிப் போனவர்கட்குக், கட்சி ஒழுங்கு கட்டுபாடு எல்லாம் பாசிசமாகத்தான் தெரியும்.

  கட்டுரைத் தலைப்பு மிகைப் படுத்தப்பட்டுள்ளது. இது கட்சி உடைவாகி விடாது.
  சி.பி.ஐயில் இப்படி நடப்பதற்கே காரணம் சந்தர்ப்பவாதச் சட்டமன்ற அரசியலில் அமிழ்ந்த்தது தான்.

Comments are closed.