மார்கிஸ் டீசேட் தங்கிச் சென்ற விடுதி : யமுனா ராஜேந்திரன்

MassacreInKorea1951

 

 

 

 

 

என்றாலும் நாய்கள்தான் அங்கு வந்து சென்றிருந்தன

என்பதை மட்டும் உறுதியாகச் சொன்னார்கள். 

சற்றுமுன் வந்துபோனவர்கள்

முகத்துவாரத்தில் காணாமல் போக்கிய மனிதர்களை

நாய்கள் வனாந்தரங்களில் அல்லாமல்

மினுங்கும் நகர்களின் மூன்று நட்சத்திரவிடுதிகளில்

கோரைப் பற்களால் குதறிக் களிக்கத்

திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் 

தங்கிச்சென்ற நாய்களின் அறைகளின் படுக்கைகளில்

திட்டாய் உறைந்திருப்பது

பதின்மரினது கலவிக் கொண்டாட்டத்தின் கறைகளா அல்லது

மிஞ்சிய திராட்சைரசத்தின் கொஞ்சமா அல்லது

இரவில் வரவழைத்த பெண்கள்

வன்கலவியில் சிந்திய மாதவிடாய்க் குருதியா

என அடையாளம் காண முடியவில்லை

என்றும் சொன்னார்கள்

முன்னைநாள் அதே விடுதியில்

சித்திரவதையினால் கொல்லப்பட்ட பெண்ணின்

இரத்தக் கறையாகக் கூட அது இருக்கலாம்

டீசேட் கடைசியில் தங்கிச் சென்ற

விடுதியறையாகவும் கூட அது இருக்கலாம்

என்றும் சொன்னார்கள் 

என்றாலும் நாய்கள்தான் அங்கு வந்து சென்றிருந்தன

என்பதை மட்டும் உறுதியாகச் சொன்னார்கள். 

நிலமெங்கும் சிதறிக் கிடக்கும் பிணங்களை

தியானத்தில் கிடக்கும் உயிருள்ள மனிதர்கள் என்று

சித்தார்த்தன் சொன்னதாக அந்த நாய்கள் சொல்வதாகவும்

பெருநகரங்களுக்குப் போய்வந்தவர்கள் சொல்கிறார்கள் 

நாய்களின் விருந்து மேசையில்

பன்றியும் மாடும் ஆடும் கோழியும் திராட்சைரசமும்

சிவப்பு மக்காச் சோளரசமும்

சிவப்பு அரசியும் குவிந்திருந்த தட்டுகளில்

குழந்தைகளின் உடல் பிளந்து குடல்சரியும் காட்சிகள்

ஓவியமாகத் தீட்டப்பட்டிருந்ததாகவும்

முள்கம்பி வேலிகளுக்கிடையில் நிற்கும்

சிறுமியர் சிறுமியரது முகங்களின் அச்சம்

புகைப்படங்கள் பிம்பங்கள் எனும் அளவில்

உன்னதமாக இருக்கிறது என

அவைகள் சொன்னதாகவும் சொன்னார்கள் 

தலைநகரத்தின் மீது சூரியன் தோன்றியிருப்பதாகவும்

தீவு முழுக்கவும்

மஞ்சள்நிறக் கதிர்கள் பரவிக் கொண்டிருப்பதாகவும்

வேட்டையாடித் திரிந்த காட்டுப்புலிகள்

முற்றிலும் வனாந்தரங்களுடன் கரிந்து அழிந்துபோய்விட்டதால்

மான்கள் பாதுகாப்புடன் கிராமத்து வெளிகளில் வாள்களுடன்

துள்ளிவிளையாடுவதாகவும்

நாய்கள் சொன்னதாகச் சொன்னார்கள்

பீரங்கி வண்டிகள்

சமாதான அருங்காட்சியகங்களின் அழகுக்கானது போலவே

வடக்கிலும் கிழக்கிலும்

பூந்தோட்டங்களின் மத்திகளில் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக

நாய்கள் சொன்னதாகவும் வந்து போனவர்கள் சொன்னார்கள் 

என்றாலும் நாய்கள்தான் அங்கு வந்து சென்றிருந்தன

என்பதை மட்டும் உறுதியாகச் சொன்னார்கள். 

நிஜத்தில் நாய்களை, கோரைப் பற்களுடனும் வஞ்சகத்துடனும்

உலக நகரங்களில் அலைகிற நாய்களை,

நாய்கள் என்று அழைக்காமல்

நரிகள் என்று அழைப்பதே

பொருத்தமாக எனக்குப் படுகிறது. 

நாய்களைக் கௌரவமாக நடத்த வேண்டும்

தடவினால் கழுத்தை நிமிர்த்தி

வாஞ்சையுடன் கருணை கசிய நம்மைப் பார்க்கும் நாய்களை

நிஜத்தில் நாய்கள் என்ற சொல்லில் குறிக்க

எனக்கு விருப்பமில்லை.

அவைகளைக் குட்டிச் செல்லம் என்றோ

மினி என்றோதான் அழைக்க விரும்புகிறேன் 
 

————————————————————————————————————

மார்கிஸ் டீசேட், சித்திரவதையிலும் கொலைகளிலும் இன்பம் காண்பது மனித இயல்பு என்ற சொன்ன பிரெஞ்சு நாவலாசிரியர். ‘சேடிசம்’ என்ற சொல் இவர் பெயரால்தான் அகராதியில் இடம்பெறுகிறது.

6 thoughts on “மார்கிஸ் டீசேட் தங்கிச் சென்ற விடுதி : யமுனா ராஜேந்திரன்

  1. நல்ல கவிதை.நான் இப்பிடி வாசித்ததே இல்லை.மொழிபெயர்ப்பே இப்பிடி இயல்பாக அழகாக ஈருக்குமென்றால் உண்மைப்பிரதி இன்னும் நல்லாக இருக்கும்

  2. பேரினவாதத் திமிர் பிடித்த இரண்டு கால் விலங்குகளின் கொலைவெறியை இதைவிட நாகரிகமாகவும் உண்மையாகவும் சொல்ல முடியாது.நெஞ்சில் இரத்தம் உறையவைக்கும் எழுத்து.

  3. cheran- i do not know whether you are poet cheran or writing in punai peyar. it is my original poem. alas! the stanza and my original formate is missing here. editors should be cautious.and thanks maraimalai yamuna rajendran.

  4. சொற்கள் பொருள் அறுந்து நிற்கும்
    இன்று

    எச்சொல்லில் வடித்தாலும் உறைகாமலே உறைந்து நிற்கிறது உள்ளம். மிக நல்ல படைப்பு. பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி.

  5. அருமையான கவிதை. அற்புதமான சொல் விளை யாட்டு. மனதைநெருடும் கருத்துச் செரிவு.

  6. திரு. யமுனா ராஜெந்திரன் பரவ்லாக டெல்லி சென்னைப் ப்த.திரிக்கைகளில் எழுதி வருபவர். இவரது இந்தக்கவிதைமிக மிக அருமையாக அமைந்தள்ள்து. என்னை மிகவும் கவ்ர்ந்த கவிதை என்றும் சொல்கிறென். வாழ்த்துக்கள்

Comments are closed.