மாணவர்கள் மத்தியில் அமைதியின்மையத் தூண்டிவிட ஜே.வி.பி. முயற்சி எனக் குற்றச்சாட்டு

ஜே.வி.பி. யினர் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் அமைதியின்மையத் தூண்டிவிட முயற்சிப்பதாக அரசாங்கம் குறற்ச்சாட்டு தெரிவித்துள்ளது. ஜே.வி.பி. இலங்கையிலுள்ள 15 பிரதான பல்கலைக்கழகங்களில் 6 பல்கலைக்கழகங்களில் தனது செல்வாக்கினை மாணவ சம்மேளனங்கள் மூலமாக கொண்டுள்ளதெனவும், அதனைப் பயன்படுத்தி அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருவதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் எதிர்ப்புப் போராட்டங்கள் அதிகரித்துள்ளன. புதிய உயர் கல்வி அமைச்சரின் நடவடிக்கைகள், தனியார் உயர் கல்வி நிறுவனங்களை அமைக்க அனுமதியளித்தல், நாட்டில் நிலவும் சர்வாதிகாரப் போக்கு காரணமாக பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் போராட்டங்கள் அதிகரித்துள்ளன. மாணவர் போராட்டங்களை அடக்கி ஒடக்குவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிற போதிலும் அவற்றைத் தடுத்துவிட முடியாத நிலையில் இந்தக் குற்றச்சாட்டை அரசு முன்வைத்துள்ளது. பல்கலைக்கழகங்களில், உபவேந்தர்கள் தாக்கப்பட்டுள்ளமை, மாணவர்களிடையே சண்டைகள் ஏற்பட்டுள்ளமை, பரீட்சைகள் குழம்பியுள்ளமை, பல்கலைக்கழக உடமைகள் நாசமாக்கப்பட்டுள்ளமை, 200 வரையான மாணவர்கள் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளமை, உயர் கல்வி அமைச்சு அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டமை, அதனைத் தொடர்ந்து கலகம் அடக்கும் பொலிஸாரால் 18 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை எனப் பல நெருக்கடிகள் தோன்றியுள்ளன. நெருக்கடி நிலைமையை அடுத்து அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, உயர் கல்வி அமைச்சர் மற்றும் 17 பல்கலைக்கழ உபவேந்தர்களைச் சந்தித்து இராப்போசன விருந்தளித்து கலந்துரையடியிருக்கிறார். அமைச்சின் செயலாளர், ‘பல்கலைக்கழக முறைமையை சீர்குலைக்க அவர்கள் முயற்சிக்கின்றனர், பல்கலைக்கழகங்கள் சுத்திகரிக்கப்படும்” என இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். அரச பத்திரிகையான சண்டே ஒப்சேவர் ஆசிரியர் தலையங்கத்தில், ‘ஜே.வி.பி. யானது மற்றொரு கிளர்ச்சியை மேற்கொள்கிறதா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்களினால் அரச மட்டத்தில் குழ்ப்பங்கள் எற்பட்டிருக்கிற வேளை, சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் நிதியமைச்சிற்கெதிரான போராட்டம் ஒன்றும் நடைபெற்றுள்ளது. 2011 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகளால் அரசாங்கத்திற்கெதிரான கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பிமல் ரட்ணாயக்கா சோசலிச இளைஞர் சங்கத்தின் தலைவர் என்பது கவனத்திற்குரியது. இதே வேளை, புதிய புலானாய்வுப் பிரிவு, தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் நாடு சர்வதாதிகாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய தெரிவித்திருக்கிறார். மேலும், சர்வாதிகார மடைமைத்தனத்துக்கு எதிரான இயக்கம் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் திகிதியில் அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக ஒரு இலட்சம் மக்களை அணிதிரட்டி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது. இவ்வியகக்ம் சார்பில் ஐ.தே.க.யின் எம்.பி யான மங்கள சமரவீர இதனைத் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் காணமல் போனோரை நினைவு கூர்ந்து விசேட நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது. காணமல்போனோரது உறவினர்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதி நிதிகள், ஐ.தே.க. வின் பிரதித் தலைவர் கருஜெசூரிய, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஆகியேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.