மகிந்த கூட்டணி கூட்டமைப்பு 45 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

நடந்து முடிந்த வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முன்னனிலையில் உள்ளது. வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முதலிடத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாம் இடத்திலும் உள்ளன. முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ள வடமத்திய மாகாணத்தின் பொலன்னறுவை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 910 வாக்குகளைப் பெற்று 6 இடங்களையும் ஐக்கிய தேசியக் கட்சிய 63 ஆயிரத்து 265 வாக்குகளைப் பெற்று 4 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஜே.வீ.பீ 7 ஆயிரத்து 381 வாக்குகளைப் பெற்ற போதிலும் ஆசனங்கள் எதனையும் பெறவில்லை. வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மதவாச்சி, அனுராதபுரம் மேற்கு, ஹொரவப்பொத்தான, அனுராதபுரம் கிழக்கு, மிகிந்தலை ஆகிய தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே வெற்றிபெற்றுள்ளது. அனுராதபுரம் மாவட்டத்தில் கெக்கிராவ மற்றும் கலாவௌ ஆகிய தொகுதிகளின் முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளை சப்ரகமுவ மாகாணத்திலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே முன்னனிலையில் உள்ளது. முடிவுகள் வெளியாகியுள்ள எகலியகொட, கலவான,பலாங்கொட, ரக்குவானை, பெல்மதுளை, நிவித்திகலை ஆகிய இடங்களில் ஆளும் கூட்டமைப்பினர் வெற்றிப்பெற்றுள்ளனர். கேகாலை மாவட்டத்தின் முடிவுகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே முன்னிலையில் உள்ளது. கேகாலை மாவட்டத்தின் தெடிகம, கேகாலை, அரநாயக்க ஆகிய தொகுதிகளில் ஆளும் கட்சி வெற்றிபெற்றுள்ளது. கேகாலை மாவட்டத்தில் மேலும் 7 தொகுதிகளில் முடிவுகள் வெளியாகவில்லை.

இடம்பெற்ற சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபை தேர்தல்களின் இறுதி முடிவுகளின் அடிப்படையில் இரு மாகாண சபைகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 45 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. வட மத்திய மாகாண சபையில் 307,457 வாக்குகளை பெற்று 20 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெற்றுள்ளது. அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி 205,284 வாக்குகளை பெற்று 12 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 26,738 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் வடமத்திய மாகாணத்தில் பெற்றுள்ளன.
இறுதித் தகவல்களின் படி,

மேலும் சப்ரகமுவ மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 472,789 வாக்குகளை பெற்று 25 ஆசனங்களையும் , ஐக்கிய தேசிய கட்சி 346,321வாக்குகளை பெற்று 17 ஆசனங்களையும் மக்கள விடுதலை முன்னணி 19,068 வாக்குகளை பெற்று இரு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.