மழை வெள்ளத்தில் முகாம் மக்கள். உண்ணவோ, உறங்கவோ இடமில்லை : ஒளிப்படங்கள்

Image033Image014Image023

 

 

 

Image000Image001Image005கடந்த மூன்று தினங்களாக வன்னியில் பெய்து வரும் கடும் மழையினால் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் முகாம்கள் மூழ்கியுள்ளது. சூழ்ந்துள்ள செம்மண் கலந்த மழை நீருக்கு மத்தியில் கொட்டகைக்குள் உடகாரக் கூட இடமில்லாமல் கடந்த இரு நாட்களாக மக்கள் வெள்ளம் வடிந்துள்ள இடங்களில் அமர்ந்துள்ளனர். ஆனால் மழைச்சூழலில் சமைத்துண்ணும் சூழல் பாதிப்படைந்துள்ள நிலையில் மிக மிக சொற்பமான உணவுகளே அவர்களுக்கு கிடைப்பதாகவும். குழந்தைகளை வைத்துக் கொண்டு மழை வெள்ளத்திற்குள் சிக்கியிருக்கும் அவர்களின் நிலை பரிதாபகரமானது என்றும் அங்கிருந்து வரும் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன. இக்கட்டான இந்த இந்த நிலையிலாவது இராணுவம மக்களை சுதந்திரமாக நடமாட அனுமதி மறுத்து கடும் காவல் காப்பது வேதனையானது என்று வருத்தம் தோய்ந்த குரல்கள் ஈனஸ்வரத்தில் குமுறுகின்றன.யாராவ்து இந்த மக்களின் பிரச்சனைகளைப் பேசுங்களேன்.

One thought on “மழை வெள்ளத்தில் முகாம் மக்கள். உண்ணவோ, உறங்கவோ இடமில்லை : ஒளிப்படங்கள்”

  1. நண்பர்களே,

    இலங்கையில் யுத்தம் உக்கிரமடைந்த காலங்களின்போது உலகமே சனங்கள் சனங்கள் என்று ஓலமிட்டுக் கொண்டிருந்தது.. இப்போது யுத்தம் முடிவடைந்து விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பிறகான காலத்திலும்‌ அந்தச் சனங்களின் வாழ்நிலையில் மாற்றமேதும் வந்துவிடவில்லை – சாவின் கரங்கள் மூர்க்கமான எறிக்ணைகளாகத் தம்மைத் தாக்கிச் சிதைக்கும் என்ற பயத்தில் மருளத் தேவையில்லை என்பதைத் தவிர்த்துப்பார்த்தால்.. ஆனால் போரின் கடைசிக் கணம்வரை பெருங்குரலெடுத்துக் கதறிக் கொண்டிருந்த உலகு சட்டென்று மௌனமாகிக் கிடப்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை…. இதைப்பற்றிப் பேசுபவர்கள் அதற்குக் கபடத்தனமான அரசியற் சாயம் பூசியே அதைச் செய்கிறார்கள்..

    260, 000க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் செட்டிக்குளம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை நிலைமையைப் படுமோசமாக்கியிருப்பதாகக் கண்டு வந்தவர்கள் சொல்கிறார்கள்.. (இணைக்கப் பட்டிருக்கும் படங்கள் சாட்சி)… தற்காலிகமாக அமைக்கப்பட்ட‌ மலக்குழிகளில் பல நிரம்பி வழிந்தபடியிருப்ப‌தாகவும் பல முற்றாகச் சீர்கெட்டு விட்டதாகவும் சொல்கிறார்கள்.. எங்கும் தாங்க முடியாத‌ துர்நாற்றம்.. இது பெருத்த சுகதாரச் சீர்கேட்டுக்கும் நோய்களுக்கும் வழிவகுக்கும் என்பது திண்ணம்… இணைக்கப்பட்டிருக்கும் படங்களில் மனிதக் கழிவின் மீது நெளியும் புழுக்களைக் காணலாம்.. (அரசாங்கம் நெடுநாளைக்கு மக்களை இந்த முகாம்களில் வைத்திருக்கக் கூடாது என்பதற்காகவே ஐ.நா தற்காலிக மலசலக் குழிகளை அமைத்துக் கொடுத்திருந்தது… ஆனால் அரசாங்கத்துக்கு அவர்களை இப்போதைக்கு மீளக் குடியேற்றும் எண்ணம் சற்றேனும் இருப்பதாகத் தோன்றவில்லை… குறைந்த பட்சம் வெளியே உறவினர்களோடு சென்று தங்கி வாழக்கூடிய நிலையிலுள்ள குடும்பங்களையாவது சோதனைகளை முடித்து விட்டுச் செல்ல அனுமதிப்பதாயில்லை.. அப்படிச் செய்வது முகாம்களில் நிலவும் மிகுந்த சனநெரிசலை வெகுவாகக் குறைக்கும்) இங்கே இலங்கையில் ஜனநாயகம் நாளுக்கு நாள் சீர் கெட்டுக் கொண்டிருக்கிறது… அனைவரும் ஒரேகுரலில் ஒரேதொனியில் ஒரேபொருளையே உரைக்க வேண்டுமென்று நிர்ப்பந்திருக்கிறது ஒரு சில பேரால் மட்டுமே இயக்கப்படும் அரச யந்திரம்..பெருத்த மௌனம் சனங்கள் மீது ஒரு கரும்போர்வையாகப் படர்ந்திருக்கிறது… ஆனால் வெளியுலகிலும் அப்படியா? இலங்கை அரசுக்கெதிரான குரல் விடுதலைப் புலிகள் அழியும் மட்டும் தான் ஒலித்தென்றால், அவ்வளவும் புலிகளுக்கு ஆதரவாக ஒலித்த குரல் மட்டும் தானா? சனங்களைப் பற்றிய கரிசனை..? இனியான எதிர்காலம் என்ன?

    நண்பர்களே, இப்பிரச்சனை குறித்து நான் பணிபுரியும் பத்திரிகைக்காக எழுதிய செய்தியில் எனது பெயரைப் போடுவதற்கே திராணியற்ற நிலையில், அரச சார்பற்ற நிறுவனங்களில் வேலை செய்யும் நபரொருவர் அனுப்பி வைத்த இப்படங்களை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்… இவற்றை உங்களின் வலைத்தளங்களில் பிரசுரிப்பதன் மூலமும், வெகுஜன ஊடகங்களில் பணிபுரிபவர்கள் தத்தமது ஊடகங்களில் வெளியிடுவதன் மூலமும் பரந்தவொரு சனத்திரளின் பார்வைக்கு இந்தப் பிரச்சனையைக் கொண்டு செல்லலாம் என்ற நம்பிக்கையில்…

Comments are closed.