மலேஷியாவில் கைதுசெய்யப்பட்டிருந்த இலங்கைச் சட்ட விரோதக் குடியேற்றவாசிகள் 62 பேர் விடுதலை

மலேஷியாவில் கைதுசெய்யப்பட்டிருந்த இலங்கைச் சட்ட விரோதக் குடியேற்றவாசிகள் 62 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்குப் படகொன்றில் சென்றுகொண்டிருந்தபோது 75 சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை மலேஷிய பாதுகாப்புப் பிரிவினர் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தனர்.

இவர்களுள் 62 பேர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மலேஷியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் டீ டீ ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இவர்களுடன் கைதுசெய்யப்பட்ட ஏனைய 13 பேரும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லையென அறிவிக்கப்படுகிறது.

இந்த வார இறுதியில் இவர்களும் விடுதலை செய்யப்படுவார்களென மலேஷியாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்களாகிய இவர்களைப் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக மலேஷிய அதிகாரிகள் விடுதலை செய்துள்ளதாக அவர் கூறினார்.

இவர்களை விடுதலை செய்யுமாறு மலேஷியாவிலுள்ள சில அமைப்புகளும் ஐக்கிய நாடுகள் சபையும் அழுத்தம் கொடுத்துவந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா அல்லது கனடாவில் குடியேறும் எதிர்பார்ப்புடனேயே அந்தநாட்டிற்கு இவர்கள் வந்திருந்ததாக மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

மலேஷியாவில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் அந்த நாட்டில் அகதிகள் அந்தஸ்துடன் வாழ்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது