மன்னார் ஆயரின் “அப்பாவித்தனமான” புலிகள் மீதான அதிருப்தி!

14.08.2008.

ஜெர்மனியில் சில வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு வைபவம் எனக்கு இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது.
மேடையில் மன்னார் ஆயர் பேரருட்திரு ராயப்பு யோசப் ஆண்டகை அவர்கள், யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை உட்பட்ட பலர் அமர்ந்திருந்தனர்.
தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த கத்தோலிக்க குருவானவர் சின்னத்துரை அடிகளார் உரையாற்றினார். தமிழகத்தில் முதல்வர் கருணாநிதியை எந்தவித முன்அனுமதியுமின்றி சந்திக்குமளவிற்கு அரசியல் செல்வாக்குள்ளவர். தமிழக சிறுபான்மை கமிட்டியின் தலைவர்.
அவர் பேசிக்கொண்டிருக்கும்போது மண்டபம் அதிரும்படியாக கைதட்டல்கள்.
தமிழீழ மக்களுக்காக அவர் குரல்கொடுப்பதைக் கேட்ட புலம்பெயர் தமிழர்கள் மகிழ்ச்சியில் கதிரையில் இருக்கமுடியாது துள்ளிக்குதித்தனர்.
கை தட்டல்களை பார்த்த சின்னத்துரை சாமியார் இன்னும் வேகமாக பேசத் தொடங்கினார்.
மண்டபத்தில் கூடியிருந்தவர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் இருக்க மேடையில் இருந்த மன்னார் ஆயர் ராயப்பு யோசேப் ஆண்டகை மட்டும் முகத்தை கடுப்பாக்கி அவரையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.
சின்னத்துரை அடிகளார் பேசி முடிந்தபின்னர் அடுத்து பேச வந்தவர் மன்னார் ஆயர்தான்.
மைக் முன்னால் வந்தவர், திரும்பி சின்னத்துரை அடிகளாராப் பார்த்தார்.
‘நீர் எல்லாம் ஒரு கத்தோலிக்க பாதிரியாரா? இவ்வளவு மோசமாகப் பொய் பேசுகின்றீரே? கை தட்டு வேண்டும் என்பதற்காக இப்படிப் பேசுவதா? என்று கேட்டவர்.
உமக்கு ஞாபகம் இருக்கிறதா சில மாதங்களுக்கு முன்னர் சென்னையிலுள்ள உமது அலுவலகத்திற்கு வந்திருந்தேனே…..
ஈழத்தில் தமிழ் மக்கள் படும் இன்னல்களை தமிழக முதல்வரைச் சந்தித்து எடுத்துக்கூறுவதற்கு உமது உதவியை நாடி நான் வந்திருந்தபோது என்னை நீர் கண்டுகொள்ளவே இல்லை. இப்போது என்னடா என்றால் கைதட்டு வாங்குவதற்காக எப்படி எல்லாம் பொய் பேசுகிறீர்”…….
முகத்துக்கு நேரே தான் சந்தித்த ஒரு போலிக்கு எதிராக எந்தவித தயக்கமும் இன்றி ராயப்பு யோசேப் ஆண்டகை அன்று பேசியபோது அவரது நேர்மை என்னை அவர் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்தது.
சிறிலங்கா அரச படைகள் தமிழ்மக்கள் மீது தாக்குதல்கள் நடாத்துகின்ற வேளைகளில் எல்லாம் அவர்; குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்கவே செய்தன.
அவர் எப்;போது அரசபடைகளின் நடவடிக்கைகளை கண்டிக்கின்றாரோ அவற்றை புலிகள் தமது பிரச்சார யுத்தத்திற்கு நன்றாக பயன்படுத்தினர்கள்.
இதனால் அவர் புலிகளின் பிரச்சாரகர் போலவே வெளியுலகிற்கு அறியப்பட்டார்.
அநீதிகளுக்கு எதிராக எந்தவித தயக்கமும் இன்றி குரல்கொடுக்கும் அவரது பேர்க்குணத்தை புலிகள் வழக்கம்போல மிக நன்றாகவே பயன்படுத்திக்கொண்டனர்.
அநீதிகளுக்கு எதிராக அவர் குரல்கொத்தவர் என்றால் ஏன் அவர் புலிகள் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடும் அட்டூழியங்களுக்கு எதிராக அவர் குரல்கொடுக்கவில்லை என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்கமுடியாதுதான்.
புலிகளின் அராஜகங்களுக்கு எதிராக அவர் குரல்கொடுக்கவில்லை என்று யாராவது நினைத்தால் அதுவும் தவறான ஒன்றே.
மன்னாரில் மடுக்கோயிலில் தஞ்சமடைந்திருந்த சில நுர்று குடும்பங்களை சுற்றிவளைத்த புலிகள் அங்கிருந்து இளைஞர்- யுவதிகளை பலவந்தமாக அழைத்துச் சென்ற போது புலிகளின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலைக் கண்டிக்க அவர் தவறவில்லை.
புலிகளுக்கு எதிராக அவர் குரல்கொடுத்தபோது அதனை எவரும் பெரிதுபடுத்தவில்லை. பிபிசி தமிழோசை மாத்திரம் தனது செய்தி அறிக்கையில் அவரது பேட்டியை ஒலிபரப்பியது.
இதற்குப்பின்னர் புலிகள் அவருக்கு எத்தகைய நெருக்கடிகளைக் கொடுத்திருப்பார்கள் என்பது இங்கே எழுதித்தான் தெரியவேண்டும் என்பதல்ல.
மடு தேவாலயத்தை அண்மையில் படையினர் கைப்பற்றியபோது, மடு மாதா திருச்சுரூபம் தேவாலயத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டபோதும், அது தேவன்பிட்டியில் வைக்கப்பட்டபோதும் பலரும் மன்னார் ஆயரின் நடவடிக்கையை விமர்சித்தனர்.
எத்தகைய ஒரு நெருக்கடியில் அவர் அதனைச் செய்திருப்பார் என்பதை புரிந்துகொள்ளக்கூடியவர்கள் நிச்சயம் புரிந்துகொண்டிருப்பார்கள்.
அந்தச் சம்பவத்தின் போது அவருக்குள் ஏற்பட்டிருந்த கோபத்தின் வெளிப்பாடாகக்கூட அண்மைய அவரது பேட்டியை நாம் நோக்கலாம்.
கடந்த வாரம் அவர் சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில், கடந்த 25 வருட வரலாற்றில் தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு புலிகளே பொறுப்புக்கூறவேண்டும் என்ற அவரது பேட்டி பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருப்பது தெரிகின்றது.
அப்பாவித் தமிழ்மக்கள் புலிகள் மீதும் பிரபாகரன்மீதும் அதிருப்தியடைந்திருக்கின்றனர். அவர்களைப்போலவே நானும் அதிருப்தியடைந்திருக்கின்றேன் என்றும் ஆயர் தனது பேட்டியில் குறிப்பிட்டிருக்கின்றார்.
புலிகள் தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற கருத்திலும் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் ஆயர் தெரிவித்திருக்கிறார்.
இந்தக் கேள்வியை இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்னரும் யாரும் கேட்டிருந்தால் அவர் அப்படித்தான் பதில் அழித்திருப்பார்.
யேசு மட்டுமே இறைதுதன், அவன் ஒருவனே கடவுளால் அனுப்பப்பட்ட இரட்சகன் என்று வேண்டுமானால் அவர் கூறலாம். அதற்காக புலிகள்தான் தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று அவர் எப்படிக் கூற முடியும்?
பிரபாகரன்மீதும் புலிகள்இயக்கத்தின் மீதும் அப்பாவி தமிழ்மக்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவர்களைப்போலவே பாவம் ஆயரும் இதுகாலவரை நம்பிக்கை வைத்திருந்திருக்கிறார்.
ஆனால் இந்த நம்பிக்கை தளர்ந்து இப்போது அப்பாவித் தமிழர்கள் அதிருப்திநிலைக்கு வந்திருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் மன்னார் ஆயர் இதுபோன்று தொடர்ச்சியாக தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்த முடியுமா? அதற்கெல்லாம் புலிகள் அனுமதியளிப்பர்களா என்பதை காலம்தான் பதில்சொல்ல வேண்டும்.
– இளைய காவலூரான்

One thought on “மன்னார் ஆயரின் “அப்பாவித்தனமான” புலிகள் மீதான அதிருப்தி!”

  1. மன்னார் புலிகளின் கட்டுபாட்டை விட்டுபோனாலும் வழக்கமாக கொடுக்கும் பரிசு
    ஆயருக்காக காத்திருக்கிறது “புலிகளின் தமிழ்ழீழக் கிளமோர்”.

Comments are closed.