மனித உடலிலிருந்து ஒளிக்கதிர்கள் வெளிவருவது கண்டுபிடிப்பு!

மனித உடலிலிருந்து கண்ணுக்குத் தெரியாத அளவில் ஒளி வெளிவருவதாக ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் உடலில் இருந்தும் மிகக் குறைந்த அளவு ஒளி வெளிவருகிறது.

மனித உடலிலும் இதுபோன்ற ஒளிக் கதிர்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன, என ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானின் கியோடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஹிட்டோஷி ஓகமுரா கூறியதாவது;

நம் கண்ணால் பார்க்கும் திறனை விட ஆயிரம் மடங்கு குறைந்த அளவில் உடலில் இருந்து வெளிச்சம் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

காலை 10 மணி அளவில் இந்த வெளிச்சம் மிக குறைவாக உள்ளது. மாலை 4 மணிக்கு வெளிச்சத்தின் அளவு அதிகமாகி, பின்னர் மெதுவாக குறைந்துவிடுகிறது.

நம் உடலிலேயே முகத்தில் தான் வெளிச்சத்தின் பிரகாசம் அதிகமாக உள்ளது. சூரிய வெளிச்சத்தினால், முகத்தின் தோல் பதப்பட்டு இருப்பதால், அங்கு மட்டும் பிரகாசம் அதிகரிக்கிறது.

ஆரோக்கியமான ஐந்து இளைஞர்களை இருட்டான அறையில் வைத்து, விசேடி கமராக்கள் மூலம் அவர்கள் உடலில் இருந்து வெளிவரும் வெளிச்ச கதிர்களை கண்டறிந்தோம். இந்த ஒளிக்கதிர்களின் ஏற்றத்தாழ்வை வைத்து ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை கணக்கிட முடியும். உடல் இயக்கத்தினால் ஏற்படக்கூடிய இரசாயன மாற்றங்களால் தான் இந்த ஒளிக்கசிவு ஏற்படுவதெனத் தெரிவித்தார்.