மத்திய வங்கி தங்க ஆபரண வர்த்தகத்தின் இடைத் தரகர்கள் கொழும்பில்!

இலங்கை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள தங்க ஆபரணங்களை இரகசியமாக விற்பனை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதற்கு இடைத் தரகர்களாக செயற்படுவதற்காக வெளிநாட்டு தரகர்கள் சிலர் கொழும்பிற்கு வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஷசெட்கோ கென்ஸ்ட்ரக்ஷன்| என்ற கட்டிட நிர்மாணத்துறை நிறுவனத்தின் உரியாளர் ருவன் பத்திரன என்பவரின் அனுசரணையிலேயே இந்தத் தரகர்கள் இலங்கை வந்துள்ளதாக தெரியவருகிறது.
ருவன் பத்திரன என்பவர் ஜனாதிபதிக்கு நெருங்கிய நபர் என்பதுடன் இவரது நிறுவனத்தின் ஊடாகவே ஜனாதிபதிக்குத் தேவையான நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
 ருவன் பத்திரனவின் வேண்டுகோளுக்கமைய தங்க ஆபரணங்களின் விற்பனையில் இடைத்தரகராக செயற்படுவதற்காக கொழும்பு வந்துள்ள மாலைதீவைச் சேர்ந்த மொஹமட் யூசுப், பக்காஸ் ஆகியோர் தற்போது கொழும்பு ஹொலிடே இன் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ருவன் பத்திரனவின் சார்பில் இந்தக் கொடுக்கல் வாங்கல்களில் சர்வதேச வர்த்தகர்களுக்கிடையிலான இணைப்பு நடவடிக்கைகளை சித்தார என்ற பெண்ணே மேற்கொண்டு வருகிறார்.

அமைச்சரவையின் அனுமதி மற்றும் அமைச்சரவைக்கு அறிவிக்காமல் இலங்கை மத்திய வங்கியில் இருக்கும் 14 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான 38 தொன் தங்கத்தை தனியார் நிறுவனமொன்றுக்கு விற்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும், எதிர்க்கட்சித் தலைவரின் கருத்திற்கு பதிலளித்திருந்த அமைச்சரவையின் பேச்சாளர், அரசாங்கம் அவ்வாறான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லையெனக் கூறியிருந்தார்.

அமைச்சரவைப் பேச்சாளர் அவ்வாறு தெரிவித்திருந்த போதிலும், தங்கத்தை விற்பது தொடர்பாக மத்திய வங்கி முனைப்புக்களை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதிக்கு நெருக்கமான ருவன் பத்திரன என்பவரும் அரசாங்கத்திற்கு நெருக்கமான சிலரும் இந்த நடவடிக்கையில் அக்கறையுடன் செயற்பட்டு வருவதாகவும் மத்திய வங்கியைச் சேர்ந்த சிரேஷ;ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.