மட்டு.மேயர் சிவகீதா மீது சட்ட நடவடிக்கை ஆளும் கட்சி பொதுச்செயலாளர் அறிவிப்பு!

மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன் எதிர்க்கட்சிப் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள நிலையில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நேற்று சனிக்கிழமை தெரிவித்தது.

கொழும்பிலுள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஆளும் கூட்டமைப்பின் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பான கேள்விக்குப் பதில் அளிக்கையில் ஐ.ம.சு. கூ.வின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த சிவகீதாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் கூறியதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றாக பிளவுபட்டுள்ளது. ஒரு குழுவினர் சுயாதீனமாக செயற்படுகையில் மறு பிரிவினர் அரசின் வடக்கு வசந்தம், கிழக்கு உதயம் தொடர்பான அபிவிருத்தி தொடர்பில் இணைந்து செயற்பட்டு ஆதரவளிக்கின்றனர்.

பொதுத் தேர்தலில் போட்டியிட்டு புலிகள் சார்பில் வந்தவர்களே பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குகின்றனர். அவர்களில் சிறு பிரிவினரின் ஆதரவே பொது வேட்பாளருக்கு கிடைத்துள்ளது. இவர்கள் எம்முடன் நான்கு சுற்றுக்கு மேற்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர். அதுபோல் பொதுவேட்பாளருடனும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எம்முடனான பேச்சுவார்த்தையில் பண்டா செல்வா முதல் ஒஸ்லோ வரையான பேச்சுவார்த்தையை முன்வைத்து கதைத்த போது எக்காரணத்தைக் கொண்டும் பிரிவினை இடமில்லையென தெரிவித்தோம். பொதுமக்கள் படையினர் என 40 ஆயிரத்துக்கு மேல் பலியாகி பொருளாதாரத்துக்கு நஷ்டம் ஏற்பட்டு பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டுள்ளோம். ஒன்றை மட்டும் உறுதி செய்தோம். தமிழ் மக்கள் உரிமை தொடர்பில் பிரச்சினையில்லை.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் ஏனைய சலுகைகளையும் வழங்குவோமென தெரிவித்தோம். இந்த நிலையில் அவர்கள் வடக்கு, கிழக்கு இணைப்பு, உயர் பாதுகாப்பு வலயம், இராணுவ முகாம் அகற்றல், சமஷ்டி தொடர்பில் நிபந்தனையாக முன்வைத்து உடன்படிக்கையை பொது வேட்பாளருடன் செய்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மேயராகியுள்ள சிவகீதா பிரபாகரன் பொது வேட்பாளரை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஐ.ம.சு.கூ. சட்டப்படியான நடவடிக்கையை அவருக்கு எதிராக எடுக்குமென்றார்.

2 thoughts on “மட்டு.மேயர் சிவகீதா மீது சட்ட நடவடிக்கை ஆளும் கட்சி பொதுச்செயலாளர் அறிவிப்பு!”

    1. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமே ஒழியச் சட்ட நடவடிக்கைக்கு இடமில்லை.
      நாட்டில் சட்டமோ ஒழுங்கோ இல்லாத போது எல்லா நடவடிக்கைகளும் ஒரே மாதிரியானவை தான்.

Comments are closed.