மக்கள் தொண்டர்களுக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு!

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் உள்ளதாக அரசாங்கத்தினால் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழ் அரசியல் வாதிகள் சிலருக்கும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு 30 விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு அண்மையில் முன்னாள் விடுதலைப் புலிகள் சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாகவும், அவரது பாதுகாப்புக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு, அவருக்கு அரசாங்கத்தினால் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர்களின் பின்னர் தற்போது உள்ளூராட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசனுக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவிக்கையில், தனக்கு மாத்திரம் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்படவில்லையெனவும், வேறுபல அமைச்சர்களுக்கும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளதுடன், தனக்கு மக்களினால் உயிரச்சுறுத்தல் ஏற்படவில்லையெனவும், கொழும்பிலுள்ள அரசியல்வாதிகளாலேயே உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மக்களுக்கு தொண்டு செய்வதற்கு இதயசுத்தியுடன் செயற்படும் எந்தவொரு அரசியல்வாதியும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பைக் கோரமாட்டார்கள் என்பதே நிதர்சனம். இலங்கையைப் பொறுத்தமட்டில், எந்தவொரு அரசியல்வாதியும் மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கில் பதவிக்கு வருவதில்லை. மாறாக தம்மையும், தமது குடும்பத்தினரினதும் நலன் கருதி, பணம், புகழுக்காக மாத்திரமே அரசியலுக்கு வருகின்றமை கண்கூடே.

Leave a Reply