மக்கள் கேட்டதும் மகிந்தவின் முகத்திரையும் : விஜிதா

இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் நிறுத்த உடன் படிக்கை நடைமுறைக்கு வந்த 2002 முற்பகுதி தொடக்கம் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட 2009 மே நடுப்பகுதி வரையான காலப்பகுதி தொடர்பான சம்பவங்கள் குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

நடந்துமுடிந்த ஒவ்வொரு சம்பவங்களிலும் இன அழிப்பு, இனச் சுத்திகரிப்பு, போர்க்குற்றம் என்று அனைத்து உச்சபட்சக் குற்றச் செயல்கள் அனைத்திலும் பிரதான எதிராளியான மகிந்த ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட ஆணைக்குழு என்ற வகையில் இது வேடிக்கையானது.

யுத்தம் முடிவடைந்த நிலையில் யுத்தம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஒரு ஆணைக்குழுவினை நியமிக்க வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ‘இது இனங்களுக்கிடையே பழைய விடயங்களைக் கிளறி இனங்களுக்கிடையே வெறுப்பை அதிகரிக்கும்” எனக் கூறி அரசாங்கம் அதனை நிராகரித்திருந்தது. ஆனால் பின்னர் அத்தகையதொரு ஆணைக்குழுவினை நிறுவியிருக்கிறது.

சர்வதேச அளவில் இந்தியா, சீனா போன்ற ஆசியப் பொருளாதார நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையேயான அரசியல் சதுரங்கம் யுத்தக் குற்றத்திற்கான சர்வதேச விசாரணைகளை புறந்தள்ளியிருந்தது. சரவதேச அளவில், நிறுவன மட்டத்திலான எதிர்ப்புக்களை எதிர்காலத்தில் எதிர்கொள்வதற்காகவும், இலங்கை அரசின் எதிர்கால குற்றச் செயல்களை நியாயப்படுத்துவதற்காகவும் விசாரணை என்ற பெயரில் உருவாக்கப்பட்டதே இந்த ஆணைக்குழு.

ஆணைக்குழு கொழும்பில் தனது அமர்வுகளை நடத்திய வேளை, பலரும் எதிர்பார்த்ததற்கு அப்பாலான விடயங்கள் குறித்தே சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டன. அதிகமாக 2002 போர் நிறுத்தம் தொடர்பான சாட்சியங்களே அளிக்கப்பட்டன. மேலும் ஒரு படி மேலே சென்று வட கிழக்கில் இராணுவத்தினைத் தொடர்ச்சியாகவும் பலமாகவும் வைத்திருக்க வேண்டியதற்கான காரணங்கள் குறித்தும் சாட்சியங்கள் அரச தரப்பினரால் முன்வைக்கப்பட்டன. தென்னிலங்கை பிரமுகர்கள் வட கிழக்கில் வர்த்தக நடவடிக்கைகளை விரிவாக்குவதற்கான கட்டமைப்புக்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தனர்.

தென்னிலங்கையில் நடைபெற்ற அமர்வுகளில் சாட்சியமளிக்கச் சென்ற தமிழ் பிரமுகர்கள் தமது சாட்சியங்களை வழங்குவதற்கான முறையான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை.

அமர்வுகளை நடாத்த முற்பட்ட வேளை ஆணைக்குழு எதற்காக உருவாக்கப்பட்டது என்பதுவும் அதனுடைய பணி, ஏற்கனவே திட்டமிட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதுதான் என்பதனையும் உணரமுடிந்தது.

வன்னி அமர்வுகளுக்குச் சென்று செய்தி சேகரிப்பதற்கு வெளிநாட்டு ஊடகங்களுக்கு தடைவிதிக்கப்படவில்லை எனக்கூறப்பட்டாலும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை !
அமர்வுகள் நடைபெற்ற இடங்களில் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலமாக இருந்ததுடன், புலனாய்வுப் பிரிவினரின் நடமாட்டங்களும் தாராளமாக இருந்திருக்கிறது. இந்த நிலைமைகளால் வன்னி புத்திசீவிகள் – பிரமுகர்கள் எவரும் சாட்சியமளிக்க முன்வரவில்லை.

முதல் நாள் அமர்வில் 10 பேர் வரையிலே சாட்சியமளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஏனையோர்களின் பிரச்சினைகளை சுருக்கமாக எழுதித் தருமாறு கேட்டு எழுதிப்பெறப்பட்டன.

இழப்புக்களை தாங்கி நின்று யுத்தத்தின் கோரத்துள் வாழ்ந்து வரும் மக்கள் எல்லாத் தடைகளையும் மீறி ஆணைக்குழுமுன் சாட்சியமளித்தனர். தமக்கு நேர்ந்த அநியாயங்களை, தமக்கு ஏற்பட்ட இழப்புக்களை, தாம் அனுபவித்த சொல்லொணாத் துன்பங்களை அவர்கள் கண்ணீருடன் ஆணைக்குழு முன் விபரித்தனர்.

தங்கள் கண்ணீருடன் சாட்சியமளிக்க வந்த வன்னி மக்களின் சாட்சியங்களைப் பதிவு செய்து கொள்வதில் ஆணைக்குழு பக்கச்சார்பாக நடந்து கொண்டுள்ளது என்பது பலரின் குற்றச்சாட்டு.

இராணுவத்தினரால் தாம் தாக்கப்பட்டதை விளக்கிய போது, ஆணைக்குழவினர்; துருவித்துருவி அச்சந்தர்ப்பத்தில் புலிகள் அங்கிருந்தார்களா? என விசாரித்திருக்கின்றனர். படகு மூலம் சரணடைய சென்ற தங்களை, தாம் பொது மக்கள் சுடாதீர்கள் எனக்கத்திய போதும் இராணுவத்தினர் செல்தாக்குதல் வீசியதாகவும் அதில் பலர் கொல்லப்பட்டதாக விபரித்த போது, ஆணைக்குழுவினர் அந்த நேரத்தில் இராணுவம் உங்களை எவ்வாறு பொது மக்கள் என அடையாளம் கண்டு கொள்ள முடியும் எனக்கேட்டிருக்கின்றனர். சரணடையச் சென்ற நேரம் அதிகாலை 3.00 மணி என்பதனால் இவ்வாறு கேட்டிருப்பார்கள் போலும்.

இங்கு சாட்சியமளித்த பலர் இராணுவத்தினரிடம் சரணடைந்த பலரின் நிலை பற்றி இதுவரை தகவல் எதுவம் தெரியாதுள்ளது, அவர்களை மீட்டுத்தருமாறு கேட்டிருக்கிறார்கள். ஆனால் இராணுவமோ அவ்வாறான தகவல்களைப் பொய்யானவை என மறுத்துள்ளது.

பலருடைய சாட்சியங்களைப் பதிவு செய்யாது எழுதி அனுபப்புமாறு கூறிவிட்டுச் ஆணைக்குழவினர் சென்றிருக்கிறார்கள். கொழும்பில் பல நாட்கள் சாட்சியங்களைப் பதிவு செய்து, இப்போதும் பதிவு செய்து வருகிற ஆணைக்குழு வன்னி மக்களின் சாட்சியங்களைப் பெற்றுக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை.

அதே வேளை புலிகளின் கொடுமைகள் பற்றிய சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதில் ஆணைக்குழுவினர் அதிகம் அக்கறை காட்டியதாகவும், அவ்வாறான சிலரிடம் இருந்து இரகசியமாக சாட்சியங்களைப் பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் கொடுமை குறித்தே மக்கள் பேசுகிறார்கள் என்றும் அரசு குறித்து அதிகம் பேசுவதில்லை என்ற விம்பத்தைக் கட்டமைப்பதே அரசினதும் அரச சார் ஊடகங்களதும் பிரச்சார யுக்தியாகக் கடைப்பிடிக்கப்பட்ட்டு வரப்படுகிறது என்பது இங்கு சுட்டத்தக்கது. இவர்களின் பிரச்சாரத்தின் இரண்டாவது படிநிலையாக மக்கள் உரிமை கேட்கவில்லை உணவைத்தான் கேட்கிறார்கள் என்றனர்.

ஆணைக்குழு மூலம் சிறுபாண்மையினருக்கு நியாயம் கிடைக்குமென்ற நம்பிக்கையில்லை எனவும், யுத்தத்தின் இறுதி நாட்களில் ஏற்பட்ட உயிரழப்புக்கள் தொடர்பில் ஐ.நா.சபை நியமித்த நிபுணர் குழுவினை முறியடிப்பதற்கான ஒரு நடவடிக்கையே இதுவெனவும், இதுவொரு கண்துடைப்பு நடவடிக்கை எனவும் ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் தெரிவித்திருக்கிறார்.

வன்னியில் ஆணைக்குழுவின் தலைவர் ‘இரண்டு இனங்களுக்கிடையிலும் நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும் என்றால் கற்றறிந்த பாடங்கள் தொடர்பான தெளிவான மீளாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த வகையில் மக்களுடைய கருத்துக்களை அறிய இங்கு வந்துள்ளோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

ஆணைக்குழுவின் தலைவரே தெளிவைப் பெறவேண்டிய முதலாவது நபர் என்பதனை அவரது கருத்து தெரிவித்திருக்கிறது. வன்னியில் இறுதி யுத்தத்தின் போது நடைபெற்றவை ‘இரு இனங்களுக்கிடையிலான கசப்பணர்வு” சார் விடயங்கள் அல்ல என்பதை அவர் தெளிவுறப் புரிந்து கொள்ளாமல் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார் !!

இதற்கிடையில் கடந்த கால அநீதிகளைக் கண்டறிய முயலுகையில் இப்போதும் அநீதிகள் நடக்கின்றனவே என்ற கேள்வியும் முன்னெழாமல் இல்லை.

இதற்கு முன் கொழும்பில் சாட்சியமளித்த டக்ளஸ் தேவானந்தா, வன்னி யுத்த்தினை நடாத்தி புலிகளை அழித்த அரசுக்கும் இராணுவத்தினருக்கும் நன்றிகளைத் தெரிவித்து இனி புத்த தர்மம் நிலை நாட்டப்படவேண்டும் என்று வேண்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயம். அவர் இங்கு ஆணைக்குழுவிற்குத் தேவையற்ற பல விடயங்கள் பற்றியும் பேசியிருந்தார்.

ஐ.நா சபை பொதுக்கூட்டத் தொடரில் பான் கீ மூனிற்கும் ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பின் பின்னர் வெளியிடப்பட்ட சுருக்க அறிக்கையில், ‘பான் கீ முன் அமைத்த நிபுணர் குழு பற்றிய குறிப்புக்கள் எதுவும் இடம்பெறாததுடன் நல்லிணக்க ஆணைக்குழு பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது” என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம்.

எல்லாவற்றிற்கும் மேலாக அடக்குமுறையாளர்களும், மக்கள் சேவகர்களும் கற்றறிய வேண்டிய படிப்பினை, வன்னியில் இழப்புக்களைச் சுமந்த மக்கள் எல்லாத் தடைகளையும் தாண்டி தெளிவாக எந்தப்பக்கச் சார்புமின்றிச் சாட்சியமளித்திருக்கின்றனர் என்பதையே. கிடைக்கின்ற ஒவ்வொரு இடைவெளியையும் தமது உரிமைகளைக் கோருவதற்கே மக்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதை இங்கு தெளிவாகக் காணலாம்.

3 thoughts on “மக்கள் கேட்டதும் மகிந்தவின் முகத்திரையும் : விஜிதா”

  1. //எல்லாவற்றிற்கும் மேலாக அடக்குமுறையாளர்களும், மக்கள் சேவகர்களும் கற்றறிய வேண்டிய படிப்பினை, வன்னியில் இழப்புக்களைச் சுமந்த மக்கள் எல்லாத் தடைகளையும் தாண்டி தெளிவாக எந்தப்பக்கச் சார்புமின்றிச் சாட்சியமளித்திருக்கின்றனர் என்பதையே. கிடைக்கின்ற ஒவ்வொரு இடைவெளியையும் தமது உரிமைகளைக் கோருவதற்கே மக்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதை இங்கு தெளிவாகக் காணலாம்.//

    தமது வேதனைகளை , இழப்புகளை சொல்ல எவரும் தயங்குவதில்லை. இங்கே சாட்சியம் அளிப்போர் குறித்த வேதனைகளை அச்சமின்றி சொல்லியே ஆக வேண்டும். புலத்தில் வாழ்வோரிடம் ஒரு கேள்வி, நாம் வாழ்வது வெள்ளையர்களது நாட்டில் , அவனால் ஒரு தீங்கு நேரிடுமானால் நாம் அதை சொல்லத் தயங்கியதில்லை. காவல்துறைக்கொ , அல்லது அது குறித்து தெரிவிக்க வேண்டிய இடத்தில் புகபர் செய்கிறோம். அதை விட கொடுமையான விடயங்கள் நடந்துள்ள ஒரு கொடிய போர் குறித்து மக்கள் தமது பிரச்சனைகளை சொல்லியே தீருவார்கள். இது  புலிக்கு ஆதரவாக மக்கள் , இன்னும் இருக்கிறார்கள் என கட்டுரையாக்க முற்பட வேண்டாம். அந்த மக்கள் வெகு தெளிவோடு இப்பொது இருக்கிறார்கள். இது மட்டும் உண்மை.

    1. புலிக்கு ஆதரவாக மக்கள் இருக்கிறார்கள் என்று கட்டுரையில் சொல்லப்படவில்லை. வன்னியிலிருந்து வரும் தகவல்கள் மக்கள் புலிகளின் கொடுமைகள் பற்றியும் விபரித்துள்ளதாகவே தொpவிக்கிறது. புலிகள் தொடர்பான மக்களிடையே இன்று சுதந்திரமான கருத்துக்கள் உருவாகி வருகிறது. அது புலிகளை விமர்சிக்கின்ற ஒதுக்குகின்ற ஒரு போக்காக தொpகிறது

  2. இந்த உண்மையை மறைக்கும் ஆணைக்குழுவென்பது சிங்கள கொலைகார காடையர் கூட்டத்தின் கைக்க்கூலிக்ள், இவங்கள் எல்லாம் போடுவது நாடகம், இதைபற்றி விஜிதா, சரியான விளக்கம் கொடுத்துள்ளார் , மிக்க நன்றி.

Comments are closed.