மக்களை விடுவிக்குமாறு கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டம்!

வடக்கில் மூன்று லட்சம் தமிழ் மக்கள் பலவந்தமாக தடுத்துவைத்திருப்பதைக் கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை வெற்றிகொள்ளும் அமைப்பினால் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்பாட்டமொன்று இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், வடக்கில் மூன்று லட்சம் தமிழ் மக்களை சிறைவைத்துள்ள முகாம்களிலிருந்து அவர்களை விடுவிக்குமாறும், ஊடக ஒடுக்குமுறை உள்ளிட்ட கட்டளைச் சட்டங்களை தோற்கடிக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், 13வது அரசியல் சாசனத்திருத்தத்திற்கு அப்பால் சென்ற தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்குமாறும் ஆர்ப்பாட்டக்கார்கள் கோரினர். தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 500 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமெனக் கோரியுள்ள அவர்கள், அரச தனியார் தோட்ட ஊழியர்களதும் சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களதும் சம்பளத்தை அதிகரிக்குமாறும் கேட்டுள்ளனர். தற்போது அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவைக் குறைக்குமாறும் கோசங்களை எழுப்பினர்.

 மக்கள் முகாம்களில், காணிகள் கம்பனிகளுக்கு  ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்தை உடனே விடுதலை செய் ,  வடக்கு கிழக்கில் காணிக்கொள்ளைகளை நிறுத்து  ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். அத்துடன், அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான கோசங்களையும் எழுப்பினர். இதனைத்தவிர காணாமல் போனவர்களின் புகைப்படங்களையும் ஏந்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரி முன்னணி, சோசலிசக் கட்சி ஆகிய இடதுசாரிகள், பீப்பள்ஸ் மார்ச் அமைப்பு, உலக சமாதான ஒத்துழைப்பிற்கான அமைப்பு ஆகிய சிவில் அமைப்புக்கள், உணவு நெருக்கடிக்குத் தீர்வுக்கான மக்கள் செயற்பாட்டுக்குழு, தேசிய காணி விவசாய மறுசீரமைப்பு அமைப்பு, காணாமல் போனவர்களைத் தேடி அறியும் அமைப்பு உள்ளிட்ட வெகுஜன அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.