மக்களின் விடுதலைக்காகப் போராடுகிறோம்! : த.தே.கூட்டமைப்பு

நாம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை உள்ளடக்கமாகக் கொண்டு தீhவுத்திட்டம் ஒன்றைத் தயாரித்துள்ளோம். அரசிடம் அதனைச் சமர்ப்பிக்கவில்லை எனினும் இராஜதந்திரிகளுடன் அது குறித்துப் பேசிவருகிறோம் என்று த.தே.கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கூறியிருக்கிறார். காரைதீவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே இதனை அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அங்கு உரையாற்றிய மாவை சேனாதிராஜா, கொள்கைக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்துள்ள பொது மக்களின் தீர்ப்பின் அடிப்படையில் அரசுடன் பேச வேண்டிய பலவிடயங்கள் உள்ளன. எமது அடிப்படைக் கோட்பாட்டை விட்டுக்கொடுக்காது அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான பேச்சுவார்த்தைக்கு நாம் தயாராக உள்ளோம். இந்திய அரசும் அடிப்படைக் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் அரசுடன் பேசுமாறு எமக்குக் கூறியுள்ளது. ஜனநாயகத்தின் ஒளிக்கீற்றுக்கள் தெரியத் தொடங்கியுள்ள இக்கால கட்டத்தில் இராஜதந்திரப் போராட்டம், உளவியல் போராட்டம், மக்கள் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தோல்வி மனப்பாண்மை கொண்டவர்களாக நாமிருக்காது கொள்கை, கோட்பாட்டுக்காக எம் மக்கள் இன்று எழுச்சி கொண்டவர்களாக திகழ்கின்றனர். தந்திரம், யுக்தி, ராஜதந்திரம் கொண்ட போராட்டத்திலேயே நாமின்று ஈடுபட்டுள்ளோம். தேவைப்பட்டால் அஹிம்சை வழியில் ஜனநாயக ரீதியில் தீர்வுக்காகப் போராடவும் தயாராகவுள்ளோம் எனக் கூறியிருக்கிறார்.

இக்கூட்டத்தில் பேசிய பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்திரணியுமான சுமந்திரன், அரசு இன்று சர்வதேசத்தில் சங்கட நிலைமைகளுக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு தமிழ் மக்களின் கொள்கைப் பிடிப்பும் வாக்குப் பலமுமே காரணம். தமிழ் மக்களின் உண்மையான நிலைமையை இன்று சர்வதேச சமூகம் உணர்ந்துள்ளது. இதனால் தான் தமிழத் தேசியக் கூட்டமைப்புடன் பேசுமாறு இந்தியா போன்ற நாடுகள் அரசுக்கு அழுத்தத்தை கொடுத்து வருகின்றன எனக்கூறியிருக்கிறார்.

இக்கூட்டத்தில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், தமிழ் மக்களாகிய நாம் இனிமேல் அறிவு பூர்வமாகத்தான் நமது போராட்டத்தை நடத்த வேண்டும். வெறுமனே உணர்ச்சிப் பேச்சுக்களைப் பேசுவதன் மூலம் தீர்வுகளை எட்டமுடியாது. இராஜதந்திர ரீதியாக நாம் நமது நகர்வுகளைச் செய்ய வேண்டும். இதற்கமைய நமது தலைவர்களும் இராஜதந்திரிகளுடன் பேசி வருகின்றனரெனினும் பேசும் விபரங்களையெல்லாம் பகிரங்கப்படுத்த முடியாது ஆனாலும் நம் சிரேஷ்ட தலைவர்கள் வடக்கு. கிழக்கு இணைந்த நிரந்தர தீர்வுக்காக முடிந்தளவு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோர்கள் எனக்கூறியிருக்கிறார். அங்கு பல்வேறு அரசியல் விடயங்களைப் பேசிய சிறீதரன், இன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் நாம் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். மெல்ல மெல்ல எம்மிடமுள்ள தந்திரோபாய திட்டத்தின் கீழ் குறைந்தது மூன்று நான்கு வருடங்களுக்குள் எமக்கான ஒரு தீர்வக்காக முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
இணக்க்க அரசியலுக்கு வர முடியாமலும் மக்கள் மத்தியில் குறைந்த பட்சப் போராட்டங்களைக் கூடநடத்த முடியானமலும் இன்னமும் இந்தியாவை நம்பியிருக்கும் கூட்டமைப்பிற்கு வெளியால் புதிய சக்திகள் உருவாக வேண்டும்