மக்களின் பணத்தைக் கொள்ளையிட்டே மஹிந்த ராஜபக்சவின் இரகசிய மாளிகை நிர்மாணிக்கப்பட்டுள்ளது!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரி ஒருவரின் பெயரில் மாத்தறை – தெனியாய பிரதேசத்தில் முழுமையான வசதிகளுடன் கூடிய சொகுசு மாளிகையொன்று நிர்மாணிப்பதற்காகவும், அந்தக் காணியை கொள்வனவு செய்வதற்காகவும் அரசாங்கம் கோடிக்கணக்கான பணத்தையும், வளங்களையும் வழங்கியமை தொடர்பாக முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த மாளிகை நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னர், 50 ஏக்கர் தேயிலைத் தோட்டமொன்று கொள்வனவு செய்யப்பட்டதாகவும் இந்தக் காணிக்குச் செல்லும் வீதியை அமைப்பதற்காக மாத்திரம் 95 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
   எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில்  09.09.2009  அன்று   நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் கருத்துக்களை வெளியிட்ட சாகல ரத்னாயக்க, காணிக் கொள்வனவு செய்யவும், மாளிகையை அமைக்கவும் அதற்கு செல்லும் வீதியை நிர்மாணிப்பதற்காகவும் மக்களின் பணமே செலவிடப்பட்டதாகக் கூறியுள்ளார்.

மாளிகைக்குச் செல்லும் மூன்று கிலோமீற்றர் தூரமுள்ள வீதியின் நிர்மாணப் பணிகளுக்காக மகநெகும திட்டத்தின் வாகனங்களும் ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டதாகவும் சாகல ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.