மக்களின் தேவைகளை உள்ளடக்கி அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றனவா?:கிழக்கு ஊடக இல்லப் பணிப்பாளர் .

06.08.2008.

இன்று எமது நாட்டில் பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அபிவிருத்தி என்னும் போது கட்டிடங்கள் கட்டுவது மட்டும் அபிவிருத்தியாக கருதப்பட மாட்டாது சமூக அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி, மக்களின் மனோநிலையில் அபிவிருத்தி என்று பல்வேறுபட்ட குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஒட்டுமொத்தமான ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்ற ஒரு விடயம் தான் அபிவிருத்தியாகும்

ஆனால், நமது பிராந்தியத்திலும் மாவட்டத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் இடம்பெறுகின்ற அபிவிருத்திகளும், அபிவிருத்தி தொடர்பான கொள்கைகளும் சரியான முறையில் மக்களின் அபிப்பிராயங்களையும் தேவைகளையும் அடிப்படையாக வைத்து எல்லாவற்றையும் உள்ளடக்கி அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றனவா என்பது தான் இன்று எழுந்துள்ள பாரியதொரு கேள்வியாகும்.

இவ்வாறு கிழக்கு ஊடக இல்லம் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மூவின ஊடகவியலாளர்களுக்குமாக சாய்ந்தமருது, பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்த “”அபிவிருத்தியும் மக்களின் பங்களிப்பும்’ என்ற தலைப்பிலான கலந்துரையாடலில் உரையாற்றிய கிழக்கு ஊடக இல்ல பணிப்பாளர் எம்.ஐ.எம். சதாத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணம் யுத்தத்தினால் 20 வருடங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்ட ஒரு மாகாணம். அதேபோல் இயற்கை அனர்த்தத்தினால் பாரிய அழிவுகளை சந்தித்த ஒரு மாகாணமும் கூட இந்த மாகாணம் துரித கதியில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒரே குறிக்கோளாக இருந்து வருகின்றது. அதிலிருந்து உதித்தது தான் “”கிழக்கின் உதயம்’ வேலைத்திட்டம்.

ஒரே இரவில், சமூகங்களுக்கிடையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று எந்தவொரு உதவி வழங்கும் நிறுவனத்தினதோ அல்லது அரசாங்கத்தினதோ இலக்கு வகுக்கப்படுமாக இருந்தால் அது சரியானதொரு இலக்காக அமையாது.

எந்தவொரு அபிவிருத்தித் திட்டமாக இருந்தாலும் ஒரு சமூகத்திற்கு எதிர்காலத்தில் நீண்ட நாட்களுக்கு பயன்படத்தக்கதாக அமைய வேண்டும் என்று குறிப்பிட்டார்.