மகாத்மா காந்தி புலமைப்பரிசில் வழங்குவதில் மலையக மாணவர்கள் புறக்கணிப்பு: கணபதி கனகராஜ்

Kanapathy_Kanagaraj மகாத்மா காந்தி புலமைப்பரிசு வழங்கப்பட்டவர்களில் இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மாணவர்கள் எவரும் தெரிவு செய்யப்படவில்லை என்ற தகவல் மலையக கல்வி சமூகத்தை கவலையடையச் செய்துள்ளது என்று இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பிரதித் தலைவரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இந்திய உயர் ஸ்தானிகர் அலோக் பிரசாத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

“இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தின் கல்விப்பின்னணி தொடர்பில் இந்திய தூதரகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை அவசியமற்றது. ஏனெனில் இது தொடர்பான முழுமையான வரலாற்று ரீதியான தரவுகளை அறிந்தவர்களில் இந்திய தூதரகத்தைவிட வேறு எவரும் இருக்கமுடியாது.

இந்த நிலையில் 2009-2011ஆம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி புலமைப்பரிசு வழங்கப்பட்ட 100 பேரில் எந்தவொரு இந்திய வம்சாவளி மலையக மாணவனும் இடம்பெறவில்லை என்ற செய்தி மலையக கல்வி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாத்மா காந்தியடிகள் இந்திய சுதந்திரத்திற்காக மட்டுமல்லாமல், அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களினதும், ஏழை எளிய மக்களினதும் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். தென்னாபிரிக்காவில் இந்திய கரும்புத்தோட்டத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை தட்டிக்கேட்க தொடங்கியதிலிருந்தே மகாத்மாவின் அரசியல் ஆரம்பமானது.

அவ்வாறான தியாகியின் பெயரால் வழங்கப்பட்ட கல்விக்கான புலமைப்பரிசில் கல்வியில் பின்தள்ளப்பட்ட இந்திய பூர்வீகத்தை கொண்ட மக்கள் பிரிவினர் புறக்கணிக்கப்பட்டிருப்பதை இந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்ற வகையில் சுட்டிக்காட்ட வேண்டிய கடமை எமக்கு இருக்கிறது.

மகாத்மா காந்தி புலமை பரிசு வழங்குவதில் இந்திய வம்சாவளி மாணவர்களும் உள்ளடங்கும் வகையில் 2009-2011 ஆண்டுக்கான பெயர்பட்டியலில் திருத்தம் செய்து மலையக மாணவர்களின் நியாயமான கோரிக்கையை இந்திய தூதரகம் நிறைவேற்ற வேண்டும்” எனக் கோரியுள்ளார்.