மகளிர் இட ஒதுக்கீடு: வஞ்சிக்கப்படும் அடித்தள பெண்கள்! : முருக சிவகுமார்

அடித்தளத்தில் வாழ்கிறவ்ர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், வாழ்வு மறுக்கப்பட்டவர்கள் ஆகியோரின் குரல் இந்திய சமுதாயத்தில் செவிசாய்க்கப்படாது; வெற்றிபெறாது என்பது மகளிர் மசோதா மூலம் மீண்டுமொரு முறை நிரூபிக்கப்படவிருக்கிறது. கடந்த 13 ஆண்டுகளாக என்ன காரணத்துக்காக பலராலும் எதிர்க்கப்பட்டதோ, அந்த எதிர்ப்புக்கு கிஞ்சித்தும் சுணங்காத பெரும்பான்மை அதிகாரச் சமூகம் அதே நிலையில் மகளிர் மசோதாவை செயல்படுத்தவிருப்பது வேதனையானது.

2009 ஜூன் மாதம் 4-ஆம் தேதி நடைபெற்ற அன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்ற போது பேசிய ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், ‘மகளிர் மசோதாவை இதே வடிவில் கொண்டுவந்தால் இதை எதிர்க்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை எங்கள் கட்சிக்கு இல்லாமல் இருக்கலாம்; ஆனால், இந்த அவையிலேயே நான் விஷம் குடித்து இறப்பேன், மசோதாவை நிறைவேற்ற விடமாட்டேன்’ என்றார்.அதோடு நில்லாமல், காங்கிரஸ் கட்சி எதையுமே உளப்பூர்வமாகச் செய்வதில்லை என்றும் வெறும் சம்பிரதாயத்துக்கு மட்டும் செய்கிறது என்றும் குறிப்பிட்டார்.

ஏழை சொல் அம்பலத்தில் ஏறாது

இப்படியாக மகளிர் மசோதாவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் நிறைவேற்றப்படாமலே இருந்தது. இனியாவது நிறைவேற்றப்படுவதற்கு அனைவரும் கருத்தொற்றுமை காண்பது அவசியம். இந்த மசோதாவில் சில திருத்தங்களை செய்து பின்னர் அமல்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது மகளிர் உரிமை நாளாக மார்ச் 8 அன்று இந்திய பெண்களுக்கான பரிசாக அளிக்கப்பட இருக்கிறது.இந்த சட்ட மசோதாவை மேட்டுக்குடி மனோபாவம் கொண்டவர்களால் நிருவகிக்கப்படுகிற பாஜக, இடதுசாரிகள் கட்சிகள் ஆதரிக்கின்றன. அதேசமயம், லாலு பிரசாத், முலாயம் சிங் யாதவ், மாயாவதி ஆகியோரின் கட்சிகள் எதிர்கின்றன. அவர்கள் எதிர்த்தாலும் மசோதா நிறைவேறப் போவது உறுதி. ஆனால், இந்த நிலை தொடரக் கூடாது என்பதுதான் சமூக ஆர்வலர்களின் எண்ணம். சிற்றூர்ப்புறங்களில் சொல்லப்படும் ஏழை சொல் அம்பலத்தில் ஏறாது என்ற சொலவடை உறுதியாகியிருப்பது வருந்தத்தக்கது.

இந்நிலையில் மகளிர் மசோதவை தடுத்து நிறுத்துபவர்கள் அனைவரும் ஆணாதிக்கவாதிகள் – சமூகநலனுக்கு எதிரானவர்கள் என்ற கருத்தை பெண்ணியவாதிகளும், மசோதாவை ஆதரிப்பவர்களும் பரப்பிவருகின்றனர்.

ஜூன் 16, 2009 அன்று தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவும், யுஎன்டிஇஎப் நிறுவனமும் இணைந்து ‘ஜனநாயகத்தை பலப்படுத்துவதில் பெண்களின் பங்கை அதிகரித்தல்’ என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தியது. இந்த கருத்தரங்கை திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி துவக்கி வைத்து பேசுகையில், “நாடாளுமன்றத்தில் பெண்கள் மசோதாவை நிறைவேற்றினால் சிலர் விஷம் குடிப்பேன் என்கிறார்கள். இந்த சமுதாயத்தில் அந்தளவுக்கு ஆணாதிக்கம் இருக்கிறது. அரசியல் உட்பட அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு போக மீதியுள்ள இடங்களை பெண்களுக்கு தரலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். அரசியல் ஆண்களின் வசதிகளுக்காக உருவாக்கப்பட்டதாக இருக்கிறது. அதில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை போராடி பெற வேண்டும். அனைத்து பெண்களும் கட்சி வேறுபாடில்லாமல் ஒன்றிணைந்து போராட வேண்டும். பெண்கள் மசோதாவை எதிர்க்கும் கட்சிகளுக்கு ஓட்டுப்போட கூடாது என உறுதியாக சொல்ல வேண்டும். அப்போது தான் இந்த மசோதா கண்டிப்பாக நிறைவேறும்” என்று அரைவேக்காட்டுத்தனமாக சொல்லியிருக்கிறார்.

இப்படியான கருத்தை பரப்பியதும் பரப்பி வருவதும் கேடுகெட்ட அரசியல் வித்தை என்ற நிலையில் மகளிர் மசோதா குறித்தும், எதிர் – ஆதரவு கருத்து குறித்தும் விவாதிக்கலாம் என்று தோன்றுகிறது.

ஒரு அரசியல் தலைவரின் மகளாக பிறந்து, முதலமைச்சரின் குமரியாக வளர்ந்து, வசதியாக மாப்பிளைக்கு மனைவியாகி சுகபோக வாழ்க்கை நடத்திய பின்னர் திடீரென்று எம்.பியாக அவதாரமெடுத்து நாடாளும் மன்ற கட்டடத்தில் நுழைந்த அரசிளங்குமரி கனிமொழி சரத் யாதவை ஆணாதிக்கவாதி என்று திட்டியதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. பாவம், அவர் வளர்ந்த சூழல் அப்படி. சரத் யாதவின் கருத்தில் இருக்கும் நியாயத்தை புரிந்துகொள்ளும் திராணியற்றவர் கனிமொழி என்பதுதான் உண்மை.

இத்தருணத்தில் மகளிர் மசோதா பற்றி அரைவேக்காட்டுத்தனமாக பேசாமல் ஒரு கருத்தை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். மசோதாவை எதிர்ப்பவர்கள் பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படக் கூடாது என்ற கேடுகெட்ட எண்ணத்தால் எதிர்க்கவில்லை. மாறாக, ஒடுக்கப்பட்ட – பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை அளிக்க வகை செய்துவிட்டு, அந்த மசோதாவை நிறைவேற்றுங்கள் என்றுதான் வலியுறுத்துகிறார்கள். அவர்கள் எண்ணமும், செயல்பாடும் தவறா? அதை தவறென்று நினைப்பவர்கள் அனைவரும் அடித்தளத்தில் வாழ்பவர்களை பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத ஆதிக்கவாதிகள் என்று பழியை சுமக்க வேண்டியவர்கள். சமூகத்தை முழுவதுமாக அறியாத பலரும் மகளிர் மசோதா பற்றி பேசுவது வேதனையானது.

உள் இட ஒதுகீடு ஏன் தேவை?

சாதிகளாலும், பொருளாதார படிநிலையாலும் பிரிந்து கிடக்கிற இந்திய சமூகத்தில் வாழ்கிற பெண்கள் எல்லோரும் ஒரே நிலையில் வாழ்கிறார்களா? என்ற கேள்விக்கு இல்லைவே இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். இந்த 21 ஆம் நூற்றாண்டிலும், எத்தனையோ இலட்சம் பெண்கள் இந்தியாவில் அரவமற்று வாழ்கை தேடிக்கொண்டே கிடக்கிறார்கள்.

சாதி, பணம், மதம், சடங்கு, ஆண் உள்ளிட்ட கருத்தியல்களின் கீழ் பெண்கள் மண்டியிட்டு கிடக்கும் அளவுக்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அதே சமயத்தில் எல்லா பெண்களையும், ஒரே அளவுகோலில் வைத்து பார்க்கலாமா? அப்படி பார்க்கும் பார்வை சரியானதா? என்றால், அது நிச்சயமாக சிறந்த பார்வையாக இருக்க முடியாது.

ஆதிக்கசாதிகளின் தெருவில்கூட தலித் நடக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிற ஊர்களும், அன்றாடங்காய்ச்சி கூலி தலித்துகள் சாதிகளின் நெருக்குதல்களில் சிக்குண்டு மூச்சுதிணற முழிபிதுங்கி கிடக்கிற ஊர்களும் இந்தியாவில் ஏராளமாக காணப்படுகின்றன. இப்படிப்பட்ட நம் சமூகத்தில் வாழ்கிற பெண்களை (1) கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, அடித்தள பெண்கள்; (2) பொருளாதாரத்தில் உயர்ந்த குடும்பத்தை சேர்ந்த பெண்கள்; (3)சாதியால் ஒடுக்கப்பட்ட இன பெண்கள் என்று மூன்று வகையாக பகுக்கலாம். உயர்குடியில் பிறந்த பெண்களுக்கு, இந்த சமூகத்தில் விரவிக்கிடக்கிற வாய்ப்பும் வசதிகளும் கிராமப்புறத்தில் வாழ்கிற பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு கிடைத்ததில்லை. அந்த கிராமப்புற பிற்படுத்தப்பட்ட பெண்களை காட்டிலும், சாதியால் காலம்காலமாக வஞ்சிக்கப்பட்ட தலித் பெண்களின் இருப்பு ஒவ்வொரு நாளும் அச்சத்திலும் வேதனையிலும் உறைந்து கிடக்கிறது.

தலித் பெண்கள்: ஓலைகுடிசையில் சாணித் தரையில் பிறந்து, செங்காட்டு மண்ணில் புரண்டு, ஆசிரியர்கள் இல்லாத பள்ளியில் வெறுமனே உட்கார்ந்துவிட்டு வந்து, ஒரு பண்ணையாரிடம் அடிமை ஆளாக இருக்கிற ஆணுக்கு வாக்கப்பட்டு, புள்ளக்குட்டிகளோடு, வானம்பார்த்த நிலத்தை மொட்ட களைவெட்டியால் கொத்திக்கொண்டும், மொன்ன அரிவாளால் அறுப்பு அறுத்துக் கொண்டும் அரை வயிறு கஞ்ச குடித்து வாழ்நாளை கழித்து மடிந்துபோகிறார்கள்.

தலித் அல்லாத பெண்கள்: ஒடுக்கப்பட்டவர்களின் உழைப்பை உறிஞ்சி காசுகளாகவும், நகைகளாகவும் குவித்துள்ள வீட்டில் பிறந்து கான்கிரீட் தரையிலும், தொட்டிலிலும் வளர்ந்து, பொம்மைகளோடு விளையாடி, பத்து ஊரை கடந்து சென்றாவது நல்ல பள்ளியில் படித்துவிட்டு, அப்பா – அண்ணண்கள் கடைக்கண் கருணையோடு பணம் படைத்தவனுக்கு வாக்கப்பட்டு, வேலையாட்களை மெய்க்கும் பொறுப்பை ஏற்று, பஞ்சு மெத்தையில் தூங்கி பாலும் சோறும் தின்று, உழைக்காமலே உடலை வளர்த்து, பணத்தால் இறப்பு நாளை தள்ளி போட்டு வாழ்கிறவர்கள்.

வசதிபடைத்த குடும்ப பெண்கள்: சுகத்தில் வளர்ந்து, பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதற்காக மட்டுமே பணம் கட்டியாவது பட்டப் படிப்பை முடித்துவிட்டு, வீட்டில் உறங்கும் நேரம், தொலைக்காட்சி பார்க்கும் நேரம் போக, மீதி பொழுதை போக்க உதட்டு சாயத்துடன் மகளிர் மன்றங்களிலும், கட்சிகளிலும் வலம் வந்து வாழ்கிறவர்கள்.

இம்மூன்று தரப்பினரையும் ஒருசேர பார்ப்பவர்கள் மனநோயாளிகளாகதான் இருப்பார்கள்.

ஆதிக்கசாதி குடியில் பிறந்த பெண்களுக்கு அவர்களின் அப்பா, அண்ணன்கள் உறுதுணையாக இருந்து பலரது உழைப்பை சுரண்டியாவது வாழ்நாள் முழுவதும் வசதியாகவே வாழ வகை செய்வார்கள். ஆனால், உழைத்தும் அதற்கேற்ப கூலி வழங்கப்படாத இந்த சாதிய – முதலாளிய சமுதாயத்தில் அடிமைகளாக வாழ்க்கை நடத்துகிற அப்பா, அண்ணண்கள் இருக்கும்போதும், தான் வாழ்வதற்கான வகையை தானே தேடி நிலக்கிழார்களின் கொல்லைகளில் வயிறுகூட நிரப்ப போதாத கூலிக்கு வாழ்நாளை ஒப்புகொடுத்துவிட்டு, பிள்ளை, குட்டிகளோடும், உறவுகளோடும் இழுபடுகிற தலித் பெண்களுக்கு யாரும் துணை வருவதில்லை.

“ஊர் குருவி ஒசர பறந்தாலும், பருந்தாகாது” என்று சாதியவாதிகளால் கட்டமைக்கப்பட்ட மொழியை போல, இத்தடைகளையெல்லாம் மீறி அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தின் பயனால் வாழ்வின் பற்றுக்கோடென படிப்பை எண்ணி படித்துவிட்டு வெளியே வரும் தலித் பெண்கள், வேலை செய்கிற இடங்களில் சாதிய மனநோயாளிகளிடம் சிக்குண்டு மன உளைச்சலில் கிடக்கிறார்கள். வேலை செய்கிற இடங்களில் தலித் பெண்களை உளைச்சலில் ஆழ்த்துகிற ஆதிக்கசாதி ஆண்களுக்கு சளைக்காதவர்களாக ஆதிக்கச்சாதி பெண்களும் இருந்து வருகின்றனர் என்பதை யாராவது மறுக்க முடியுமா?

ஆதிக்கசாதி இனத்திலும், பொருளாதார வசதிபடைத்த இனத்திலும் பிறந்த பெண்களுக்கு ஆணாதிக்க சமுதாயத்தில் பல கொடுமைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. அதை எதிர்கிற முற்போக்காளர்களில் பலர் அதனினும் கீழாக வாழ்கிற தலித் பெண்களை, ஆதிக்க சாதி பெண்கள் நடத்துகிற விதத்தை கண்டிப்பதே இல்லை.

இந்நிலையில், ஒரு தலித் பெண்ணையும், ஒரு பிற்படுத்தப்பட்ட பெண்ணையும், ஒரு மேட்டுக்குடி பெண்ணையும் ஒரு தளத்தில் வைத்து பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைவிட பெரிய முட்டாள்தனத்தை பணம் படைத்தவர்களும், மேட்டுக்குடிகளும் நிரம்பிக்கிடக்கிற நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதாவை நிறைவேற்றி செய்யவிருக்கிறார்கள்.

கருணாநிதியின் கருத்து

இதனை எதிர்க்க வேண்டிய இடத்தில் இருக்கிற முதலமைச்சர் கருணாநிதி, இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது, பெரும்பான்மையோர் கருத்து எதுவோ அதைதான் பொதுக்கருத்தென ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறி, “மகளிர் மசோதா சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பெரும்பாமையோரின் கருத்தை பொதுக்கருத்தாக ஏற்றுக்கொள்ள சொல்கிற கருணாநிதியின் கருத்து பெரும் ஆபத்தானது. இதே நிலைப்பாட்டை சாதியிலும், ஆன்மீகத்திலும் பொருத்தி பார்த்து பெரும்பான்மையோரின் கருத்தை பொதுக்கருத்தை ஏற்றுக்கொள்ளலாமா? என்பதையும் அவர் விளக்கினால் குழப்பம் விலகும். பதவியையும் சொத்துக்களையும் நிலைநிறுத்திகொள்ள எதை வேண்டுமானாலும் பேசும் நிலைக்கு திராவிட தலைவர் கலைஞர் தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரியது.

மகளிருக்கு இடங்களை ஒதுக்குவதற்காக மசோதாவைக் கொண்டு வருகிறபோது, அந்த இடங்களை யாரெல்லாம் கைப்பற்றுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அரசியல்வாதிகளின் வாரிசுகளுக்கும், உதட்டுசாயம் பூசிக் கொண்டு கிளப்புகளில் வலம் வருகிற மேட்டுக்குடி பெண்களுக்கும், வசதியான குடும்ப பெண்களுக்கும் 33% இட ஒதுக்கீடு பயன்பட போகிறது. இவர்களை கடந்து, கிராமப்புறத்தில் வாழ்கிற பிற்படுத்தப்பட்ட பெண்களோ, அதனினும் கீழாக வாழ்கிற தலித் பெண்களும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கேற்கவே முடியாது என்பதுதா உண்மை.

இந்த நிலை ஏற்பட்டுவிட கூடாது என்பதால்தான் தலித் பெண்களுக்கும், பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கும், சிறுபான்மையின பெண்களுக்கும், கிராமப்புற பெண்களுக்கும் தனித் தனி உள் இட ஒதுக்கீட்டை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் அடித்தள பெண்கள் மீது மேட்டுக்குடி சமூகம் கட்டவிழ்த்துவிடும் வன்முறையின் வடிவமாக மகளிர் மசோதாவை பார்க்கலாம்.

எதிர்காலத்திலாவது அடித்தளத்தில் வாழ்கிற ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க அதிகார வர்க்கத்தினர் முன்வரும் வரை தொடர்ந்து இது குறித்து தொடர்ந்து விவாதிப்பது தேவையாகிறது.

3 thoughts on “மகளிர் இட ஒதுக்கீடு: வஞ்சிக்கப்படும் அடித்தள பெண்கள்! : முருக சிவகுமார்”

 1. லோக்சபா மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, ராஜ்யசபாவில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதாவுக்கு சமாஜ்வாடி மற்றும் ராஜ்ய ஜனதா தள் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ராஜ்ய சபா 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது. மசோதாவுக்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இம்மசோதாவை நிறைவேற்றி 13 ஆண்டு கனவை நனவாக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. மேலும், சர்வதேச பெண்கள் தினமான இன்று, இம்மசோதா தாக்கல் செய்யப்படுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

  ராஜ்ய சபா 2 முறை ஒத்திவைப்பு : ராஜ்யசபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு ஒரு புறமும், எதிர்ப்பு ஒரு புறமும் இருந்தது. ராஷ்டிரிய ஜனதாதளம்ல சமாஜ்வாடி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். பா.ஜ., மற்றும் இடதுசாரி, தி,மு,க,, திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு தெரிவி்த்து கோஷம் எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல் நிலவியது. இதனையடுத்து சபையை 12 மணி வரை ஒரு முறையும் பின்னர் 2 மணி வரை ஒரு முறையும் சபாநாயகர் அன்சாரி ஒத்தி வைத்தார்,. தொடர்ந்து. பா.ஜ., மற்றும் இடதுசாரி கட்சியை சேர்ந்த பெண் எம். பி.,க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  “பெண்களுக்கு ஆட்சி நிர்வாகத்தில் பங்களிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்’ என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. இருந்தாலும், இந்தியாவில் பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற முடியாத சூழல் நிலவியது.முதல் முதலாக, 1996ல் தேவ கவுடா பிரதமராக இருந்தபோது, இந்த மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அம்முயற்சி நிறைவேறவில்லை.

  இந்நிலையில், தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இந்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியுடன் காய் நகர்த்தியது. ஜனாதிபதி, லோக்சபா சபாநாயகர், ஆளும் கட்சி கூட்டணித் தலைவர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் என, நாட்டின் அதிகார முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் தற்போது பெண்களே உள்ளனர். மசோதாவை நிறைவேற்ற இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது தான் நல்லது என, காங்கிரஸ் முடிவு செய்தது.

  இதன்படி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதா, சர்வதேச பெண்கள் தினமான இன்று, ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. ராஜ்யசபாவில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ., இந்த தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளதால், காங்கிரஸ் தரப்பு உற்சாகம் அடைந்துள்ளது.மசோதா நிறைவேறும்போது, அனைத்து எம்.பி.,க்களும் சபையில் இருந்து, அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும், என, பா.ஜ.,சார்பில் கொறடா உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இடதுசாரி கட்சிகளும் மசோதாவை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

  அதே நேரத்தில், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி, லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற முக்கிய கட்சிகள், மசோதாவை எதிர்க்கப்போவதாக அறிவித்துள்ளன. “பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்’ என்று, இந்தக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, இன்னும் இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை.

  சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறுகையில்,”இந்த மசோதா மிகவும் அபாயகரமானது. தலித், முஸ்லிம் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள், பார்லிமென்டுக்கு தேர்வு செய்யப்படுவதை தவிர்க்கும் நடவடிக்கை இது’ என்றார்.

  ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் பிரேம் சந்த் குப்தா கூறுகையில்,”ராஜ்யசபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்போது, எங்கள் எம்.பி.,க்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பர். இதற்கான கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்றார்.மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும் விஷயத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.

  ஆதரவு: பெண்கள் மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேறுவதற்கு 156 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதில், காங்கிரசுக்கு 71 உறுப்பினர்களும், பா.ஜ.,வுக்கு 45 உறுப்பினர்களும், இடதுசாரி கட்சிகளுக்கு 20 பேரும் உள்ளனர். இவர்கள் அனைவரும் மசோதாவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளனர். இதுதவிர, தேசியவாத காங்., – தி.மு.க., – திரிணமுல் காங்கிரஸ், தேசிய மாநாடு உள்ளிட்ட ஆளும் கூட்டணிக் கட்சிகளும், அ.தி.மு.க., – பிஜு ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளும் மசோதாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளன. இதனால், இந்த மசோதா எளிதில் நிறைவேறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
  http://www.dinamalar.com

 2. பார்ப்பணப் பத்திரிகைப் பார்வையில், “மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்கா”.

  மேலும் வாசிக்க:
  http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=208545&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

  மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் அரசியல் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

  ஆனால் இந்த மசோதாவை விவாதத்துக்கே எடுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

  முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சி உறுப்பினர்கள், லாலு தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதள உறுப்பினர்கள் இந்த மசோதாவை மிகவும் ஆக்ரோஷமாக எதிர்த்தனர்.

  அவைத் தலைவர் ஹமீத் அன்சாரியை தாக்குவதைப் போல் அவரது இருக்கையை நோக்கி பாய்ந்ததோடு, இருக்கைக்கு முன் இருக்கும் மைக்கை பிடுங்கி அவர்கள் எறிந்தனர். இதனால் அவையில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது
  இந்த இரு கட்சிகளையும் சேர்ந்த 25 உறுப்பினர்களின் நடவடிக்கைகளால் அவையே ஸ்தம்பித்தது. கடும் அமளி காரணமாக அவை 5 முறை ஒத்திவைக்கப்பட்டது.
  மசோதாவை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள அவர்கள் இறுதி வரை அனுமதிக்கவில்லை. இதனால் மசோதா மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  ஆதரவு வாபஸ்:÷முஸ்லிம்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு உள் ஒதுக்கீடு அளிக்காமல் இந்த மசோதாவை நிறைவேற்ற முயற்சிப்பதால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக முலாயம் மற்றும் லாலு கூட்டாக அறிவித்துள்ளதால் மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு காட்டி வந்த வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

  இந்த அறிவிப்பை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங், மூத்த அமைச்சர்கள் முக்கியத் தலைவர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். மேலும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சித் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

  இந்த ஆலோசனைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் அனைத்துக் கட்சி கூட்டத்தை செவ்வாய்க்கிழமை கூட்டி, மசோதாவை சுமுகமாக நிறைவேற்றுவது குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  “இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் அரசு போதிய அக்கறை செலுத்தாதே அவையில் அமளி ஏற்பட காரணம். முன்கூட்டியே இது குறித்து ஆலோசனை நடத்தி, தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம்’ என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டி உள்ளது. மேலும் “அரசியல் சட்டத் திருத்த மசோதாவை விவாதம் இல்லாமல் நிறைவேற்றக் கூடாது’ என்றும் பாஜக போர்க்கொடி தூக்கி உள்ளது.

  சமாஜவாதி மற்றும் ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சிகள் தங்களது கோரிக்கையில் உறுதியாக இருப்பதால் மசோதா நிறைவேறுவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
  காங்கிரஸ், பாஜக, இடதுசாரி கட்சிகள், அ.தி.மு.க., தி.மு.க., தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ், அகாலி தளம், திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவை ஆதரிக்கின்றன.
  சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.

  பிரதான கட்சிகள் இந்த மசோதாவை ஆதரிப்பதால் விவாதத்துக்குப் பின் நடைபெறும் வாக்கெடுப்பில் மசோதா நிறைவேறுவது உறுதி என்று கருதப்பட்டது. ஆனால் முலாயம்,லாலு கட்சியின் 25 உறுப்பினர்கள் அவையை முடக்கிவிட்டனர்.

  திங்கள்கிழமை அவை தொடங்கிய உடன் சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் எம்.வீரப்ப மொய்லி மசோதாவை தாக்கல் செய்தார். அப்போதே லாலு, முலாயம் கட்சியினர் அமளியையும் தொடங்கிவிட்டனர்.

  இதனால் அவை இரு முறை ஒத்திவைக்கப்பட்டது. மூன்றாவது முறையாக அவை பிற்பகல் 2 மணிக்கு கூடியபோது, சமாஜவாதி கட்சி உறுப்பினர் நந்த கிஷோர் யாதவ், கமால் அக்தர் ஆகியோர் குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஹமீத் அன்சாரியை தாக்குவதைப் போல் அவரது மேடையை நோக்கி பாய்ந்தனர். அன்சாரி மேஜையில் இருந்த மைக்கை யாதவ் பிடுங்கி எறிந்தார். மேலும் சில உறுப்பினர்கள் அன்சாரியின் இருக்கையை நோக்கி பாய்ந்தனர். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த அவைக் காவலர்கள் அன்சாரிக்கு அரணாக நின்று பாதுகாப்பு அளித்தனர். உறுப்பினர்கள் அன்சாரியின் மேடையை நோக்கி முன்னேறுவதையும் தடுத்தனர்.

  அன்சாரியின் மேடை அருகே உள்ள மாநிலங்களவை நிருபர்கள் மேடையில் ஏறி நின்று மசோதாவுக்கு எதிராக முழக்கம் எழுப்பினார் அக்தர். பின்னர் அவரும் ராஜ்நீதி பிரசாரத்தும் மசோதா நகலை கிழித்து அன்சாரியை நோக்கி வீசி எறிந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவைத் தலைவர் அன்சாரி அவையை 3 மணி வரை ஒத்தி வைத்தார்.

  அவை ஒத்திவைக்கப்பட்டதும் என்ஜினீயர்கள் அன்சாரி மேஜையில் மைக்கை பொருத்தினர். ஆனால்
  முன்னெச்சரிகையாக அவை பொதுச் செயலாளர் மேஜையில் இருந்த பொருள்கள் அப்புறப்படுத்தப்பட்டன. எலக்ட்ரானிக் கடிகாரமும் அப்புறப்படுத்தப்பட்டது. அதுபோல் அவை நிருபர்கள் மேஜையில் இருந்த பேனா பொருத்திகள், பேப்பர் வெயிட் போன்றவையும் அப்புறப்படுத்தப்பட்டன.

  அவை மீண்டும் 4 மணிக்கு கூடியதுபோதும் அதே நிகழ்ச்சிகள் மீண்டும் அரங்கேறின. இதையடுத்து அவை மாலை 6 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கும் வரை அவைத் தலைவருக்கு, காவலர்கள் அரணாக நின்று பாதுகாப்பு அளித்தனர்.

  http://www.dinamani.com

 3. இந்திய நாடாளுமன்ற மேலவையில் பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேறியது

  இந்திய நாடாளுமன்றத்திலும், மாநில சட்ட சபைகளிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை உறுதி செய்யும் மசோதா இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையாகிய மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது.

  நாட்டில் பெண்களின் நிலையை வலுப்படுத்தும் திசையிலான நடவடிக்கைகளில் இந்த நகர்வு ஒரு முக்கிய முன்னேற்றம் இது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விபரித்துள்ளார்.

  தற்போது இந்த மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவைக்குச் செல்கிறது. அங்கு அது இலகுவாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்த நகர்வுக்கு எதிராக முறையற்ற விதத்தில் எதிர்ப்புத் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

  இந்தியாவின் முக்கிய கட்சிகள் இந்தச் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தன. ஆனால், இது சிறுபான்மையினர் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய குழுக்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் என்று சில சோஷலிஸ கட்சிகள் அஞ்சுகின்றன.

  BBC

Comments are closed.