போலி ஜனநாயகத்தின் மீது எனது உள்ளக் குமுறல் : பொன் சிவகுமார்

யாருக்கும் எந்த ஜீவராசிக்கும் தீங்கும் இழைக்காத எனது பாசம் கொண்ட அண்ணனை ஈசியாக சிம்பிளாக கொன்றுவிட்டு இருக்கிறார்கள். ஒரு அண்ணனாக, ஒரு நண்பனாக, ஒரு ஆசாணாக, எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு கடவுளாக நானும் எனது குடும்பமும் மதித்தவரை கொன்றுவிட்டார்கள். எத்தனை குடும்பங்களில் இழப்புகள் ஏற்பட்டு உள்ளது. ஏன் இப்படிச் செய்கிறார்கள்? வெளியே இருந்து பார்க்கும் போது அரசியல்வாதி தலைவன். ஆனால் எனக்கு சகோதரன் ஒரு உறவின் இழப்பு அதன் வலியும் அதிகம். நாங்கள் இன்னமும் இதிலிருந்து மீள முடியவில்லை. எப்படி இந்த இழப்புகளில் இருந்து மீளப் போகின்றோம் என்பதும் தெரியவில்லை.
எனது அண்ணனின் 10வது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு என்னுடுன் துயரில் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இவ்வாறான சம்பவங்கள் இழப்புகள் நடந்துவிடக் கூடாது அதற்கு அடையாள எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கலந்து கொண்டவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நிற்க.
ஆனால் இந்நிகழ்வை தடுக்க சில முயற்சிகள் செய்யப்பட்டு இருக்கிறது. அவற்றை நண்பர்களாக இருந்தவர்களும் நான் மதிப்பளித்தவர்களுமே செய்தார்கள் என்பது மிகவும் வேதனையானது.
இணையத் தளங்களில் நாமும் எமது சோகமும் சிக்கித் தவிக்கிறது. எனது அண்ணனின் மறைவையொட்டி நினைவு நிகழ்வை ஒழுங்கு செய்து மனித உரிமைபற்றிப் பேசி எங்கள் உறவுகளுடன், எங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது தவறா? ஜனநாயகத்தின் காவலர்கள் தாங்கள் என கங்கணம் கட்டி நிற்பவர்களே!!! நீங்கள் எனது சகோதரனின் நினைவு நிகழ்வில் சாக்கடை அரசியல் நடத்துவது நியாயமா? உங்களுக்கு உறவுகளை இழந்த துயர், வலி, வேதனை தெரியாதா? இழப்புகள் என்பது உங்களுக்குப் புதியதா? உங்களுக்கு ஓர் இழப்பு ஏற்படும் போதும் இவ்வாறா நடந்து கொள்வீர்கள்? உங்களுக்கு மட்டும் சோகம். எமக்கு சோதணையா? எனது அண்ணன் உங்களுக்கு செய்த கொடுமைதான் என்ன?
ஜனாநாயக அரசியலில் தன்னை ஈடுபடுத்தியவன். அந்த ஜனநாயக அரசியலுக்காக தன்னுயிரையும் இழந்த ஒருவனை நினைவுகொள்ளும் ஒரு மகத்தான நாளை செம்ரம்பர் 14 அன்று, நாம் ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கையில் அதற்கு இருபத்தி நான்கு மணிநேரத்திற்கு முன் கையெழுத்து வேட்டை நடத்தி பெட்டிசம் அடித்த உங்கள் ஜனநாயகத்தை என்ன என்பது. நிகழ்ச்சியில் பேச இருந்தவர்களைத் தடுத்து, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்தவர்களுக்கு போன் பண்ணி தடுத்து, என்னென்ன கீழ்த்தரமான முறைகளையெல்லாம் நீங்கள் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தீர்கள். நீங்கள் எல்லாம் அரசியல் ஜனநாயக சக்திகள் என்று கூறுவது எவ்வளவு பொருத்தமானது என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்.
விமர்சனங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத நீங்கள் எப்படி மற்றவர்களைப் பற்றி விமர்சிக்க முடியும். இதுவரை காலமும் ஜனநாயகம் என்ற போர்வையில் உங்கள் கருத்துக்களைத் திணித்தீர்கள். உங்கள் செயல்கள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டதும் எப்படியாகி விட்டிர்கள் என்று எண்ணிப் பாருங்கள்.
ராகவன் அண்ணா! உங்கள் மேல் எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருந்தது. இந்நினைவு நிகழ்வில் நீங்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். நீங்கள் எனக்கு வருவதற்கு விருப்பம் ஆனால் தேசம் நடத்துவதால் வரமாட்டேன் என்று சொன்னீர்கள். அதனை நான் மதிக்கிறேன். ஆனால் எனக்கு தெரிந்தவர்களையும் வரவிடாமல் தடுப்பேன் என்று நீங்கள் சொன்ன போது, அந்த நேர கோபத்தில் தான் அப்படிச் சொல்கிறீர்கள் என்று நினைத்தேன். ஆனால் நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் உண்மையாகவே தடுக்க முயற்சித்ததையும் தடுத்ததையும் அறிந்த போது உண்மையிலேயே வேதனைப்பட்டேன்.
மற்றையவர்களின் உறவுகள் படுகொலை செய்யப்பட்ட போது அதற்கு எதிராக உரக்கவே குரல் கொடுத்தோம். நினைவு நிகழ்வுகள் நடத்தப்பட்ட போதும் அதற்கும் முழு ஒத்துழைப்பையும் வழங்கினோம். அது கேதீஸ் லோகநாதனுடையதாக இருந்தாலென்ன, மகேஸ்வரி வேலாயுதமாக இருந்தாலென்ன, அதனை ராஜேஸ்பாலா நடத்தினாலென்ன எஸ்எல்டிஎப் நடத்தினாலென்ன. ஆனால் அந்த இழப்பு எனது குடும்பத்தில் நடந்த போது ஜனநாயக சக்திகள் என்று சொல்லிக் கொண்டவர்கள் நடந்து கொண்டதை என்னால் மறக்க முடியவில்லை. ஏன் உங்களால் பிரிவின் வலியை உணர முடியவில்லை. ஏனெனில் நீங்கள் எங்களில் மக்களில் இருந்து அந்நியமாகவே நிற்கிறீர்கள். அதனால் உங்களால் அவ்வலியை உணர முடியாது.
எனக்கு தெரிந்தவர்கள் பலர் கையொப்பமிட்டு ஒரு பெட்டிசம் வெளிவந்தது. அதனை நான் பிழையானது என்று சொல்வதற்கு முன்னால் இது திட்டமிட்டு எனது அண்ணனின் நினைவு நிகழ்வுக்கு முதல் நாள் வெளியிடப்பட்டு உள்ளது. இயன்ற அளவு யாரையும் நினைவு நிகழ்வுக்கு வராமல் தடுப்பதைத் தவிர அந்த நேரத்தில் அவ்வறிக்யை வெளியிடுவதற்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. தயவு செய்து, யார் அந்த அறிக்கையை அந்த நேரத்தில் வெளியிடுவதற்கு முடிவெடுத்தது என்பதனை அதில் கையெழுத்திட்டவர்கள் எனக்கு அடையாளம் காட்ட வேண்டும். ஏனென்றால் அவர்களிடம் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது.
உங்களுக்கும் தேசம் நண்பர்களுக்கும் முரண்பாடுகள் இருக்கலாம் ஆனால் அதனைத் தீர்த்துக் கொள்வதற்கு எனது அண்ணனின் நினைவு தினத்தை எதற்காக ஆடுகளம் ஆக்கினீர்கள்.
இந்த நினைவு நிகழ்வை சென்ற ஆண்டு நடத்த முயற்சித்தேன். அப்போது நண்பன் ஜெயபாலன் ஆண்டு தோறும் நினைவு நிகழ்வு நடத்தப்படாததால் இது 9வது ஆண்டு என்பதாலும் 10வது ஆண்டு நினைவு தினத்தை சிறப்புற நடத்துவோம் என்று என்னிடம் கூறி இருந்தான். அதற்கு அமைய இவ்வாண்டு இந்நிகழ்வை நடத்த தீர்மானித்தோம். மேலும் ஜெயபாலனது சகோதரனும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்தவர். அதனால் எனது சகோதரனின் நினைவு நிகழ்வை அரசியலுக்கும் அப்பால் ஜெயபாலன் ஒழுங்கமைப்பதே பொருத்தமாயும் இருந்தது. இதிலென்ன தவறு கண்டிர்கள்?
அது ஜனநாயக விரோதப் படுகொலைகளின் நினைவு நிகழ்வாக இருந்தாலென்ன, மாவீரர் தின நிகழ்வாக இருந்தாலென்ன, அவற்றை சுயநல காரணங்களுகாக கொச்சைப்படுத்தாதீர்கள். இவ்வாறான சம்பவங்களுக்கு இதுவே ஒரு முற்றுப் புள்ளியாகட்டும்.
நாம் படித்த மேதாவிகள், புத்திஜீவிகள் எங்களுக்குத் தான் எல்லாம் தெரியும், நாங்கள் மட்டும்தான் எல்லாம் படைப்போம் என்றுதான் நீங்கள் இனியும் மார்தட்டிக் கொண்டு இருக்கப் போகிறீர்களா? ஒன்றை மட்டும் விளங்குவோம் இந்த நிகழ்வை தடுத்து நிறுத்திவிட்டு வீறு நடைபோட நினைத்த நீங்கள், எப்படி ஒரு அரசியலை நடாத்த முடியும்? இது உங்களுக்கு கேவலமாகத் தெரியவில்லையா?
எனது அண்ணனை அன்று புலிகள் சாகடித்தார்கள். அவன் நினைவு தினத்தன்று நீங்கள் அவரை இன்னுமொரு தடவை சாகடித்துவிட்டிர்கள். உண்மையில் உங்கள் ஜனநாயகம் நன்றாகத்தான் புலப்படுகிறது.
ஒருவேளை நீங்கள் தடுக்காவிட்டால் இவ்வளவு பேர் வந்திருப்பார்களோ எனக்குத் தெரியாது. இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியிலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் எனது குடும்பத்தின் சார்பில் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பெட்டிசங்களைக் கண்டு ஆடிப் போகாமல் இந்த நிகழ்வை ஒழுங்கமைத்த தேசம் நண்பர்களுக்கும், அதன் வாசக உள்ளங்களுக்கும் ஒரு சபாஸ்!! வாழ்க உனது ஜனநாயகப் பணி!!!

நன்றி: தேசம்னெற் | http://thesamnet.co.uk/?p=2757