போர் ஒத்திகை நடத்தினால் எதிர்த்தாக்குதல்: வட கொரியா எச்சரிக்கை.

ஆசியாவில் பதட்டத்தை உருவாக்கும் நோக்குடனும், 

தனது இராணுவ வல்லமையை நிறுவும் நோக்குடனும் அமெரிக்கா தென் கொரியாவுக்கு ஆதரவாக போர் ஒத்திகை ஒன்றை நடத்திவருகிறது. இந்நிலையில் வட கொரியா போர் ஒத்திகை தொடர்பாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.மஞ்சள் கடல் பகுதியில் தென் கொரியா போர் ஒத்திகை நடத்தினால் எதிர்த்தாக்குதல் நடத்துவோம் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.வரும்

5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை மஞ்சள் கடல் பகுதியில் தென் கொரியா போர் ஒத்திகை நடத்த முடிவு செய்துள்ளது. தென் கொரியாவின் ராணுவம், கப்பல் படை, விமானப் படை ஆகியவை இந்த போர் ஒத்திகையில் ஈடுபடுத்தப்பட உள்ளது.இந்நிலையில் தென் கொரிய படைகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.வடகொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் தென்கொரியா மற்றும் அமெரிக்கப் படைகள் கடந்த வாரம் கிழக்கு ஜப்பானின் கடல் பகுதியில் ஒத்திகை நடத்தின.தென் கொரியா மீண்டும் போர் ஒத்திகை நடத்த முடிவுசெய்திருப்பது வடகொரியா மீது நேரடி தாக்குதல் நடத்துவதற்கு முற்படுவதையே காட்டுகிறது என அந்நாட்டின் மேற்கு படைப்பிரிவின் கமாண்டர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. தென் கொரியாவின் எவ்வித தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கமாண்டர் தெரிவித்துள்ளார்.தென் கொரியா போர் ஒத்திகை நடத்தவிருக்கும் கடல் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்று தங்கள் நாட்டு பயணிகள் கப்பல் மற்றும் மீனவர்களை வட கொரிய ராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது

. எல்லைப் பகுதியில் இருக்கும் தீவுகளில் வசிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் ராணுவம் கூறியுள்ளது.இதற்கு முன்னதாக மஞ்சள் கடல் பகுதியில் பல முறை தாக்குதல் நடைபெற்றுள்ளன. கடந்த மார்ச் மாதம் இப்பகுதியில் தென் கொரிய கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 46 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய பன்னாட்டு விசாரணைக்குழு, தென்கொரியா கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறியது.இதையடுத்து இத்தாக்குதலை வட கொரியாவே நிகழ்த்தியிருக்க வேண்டும் என அமெரிக்காவும், தென் கொரியாவும் கூறின. இந்த புகாரை முற்றிலும் மறுத்து வட கொரியா, அமெரிக்கா மற்றும் தென் கொரியா தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியது.