போர்க்குற்றங்கள் : யோலாண்டா,கருணா,கீரன்,லூட்ஸ்

29.09.2009 அன்று லண்டன் கொன்வே மண்டபத்தில் தமிழ் சட்ட genocide1வலுவாக்க அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் உரையாற்றிய சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்த கலாநிதி யொலாண்டா fபொஸ்டர், இலங்கை அரசு முகாம்களில் மக்களைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டியதுடன் சர்வதேச சமூகம் இது குறித்துப் போதிய கவனம் செலுத்தவில்லை எனவும் கவலை தெரிவித்தார். தனது தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து சர்வதேசச் சட்டங்கள் அரசியலுடனும் தொடர்புற்று இருப்பதால் ஒவ்வொரு தனிமனிதனும் இலங்கை அரசின் குற்றச் செயல்களை அம்பலப்படுத்த முன்வரவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இது தவிர, துணைப் படைக் குழுக்கள் பெருந்தொகையான பணத்தைக் கையூட்டாகப் பெற்றுக்கொண்டு முகாம்களிலிருந்து சிலரை விடுவிப்பதாகவும் இதனால் தனக்குத் தெரிந்த பல முகாம் வாசிகளின் உறவினர்கள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் பணம் திரட்டுவதில் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை பிரித்தானியாவில் முன்னர் இலங்கை அரச அடக்கு முறைகளைக் காரணம் கூறி அகதி அந்தஸ்துக் கோரியவரும் முன்னாள் ரெலோ உறுப்பினருமான மாணிக்கம் நகுலேந்திரன் என்ற கீரன் என்பவரும் துணை இரணுவக்குழுக்களுடன் இணைந்து தொழிற்படுவதாகவும் மேலும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதே வேளை கலாநிதி லூட்ஸ் ஒட்டேட் உரையாற்றும் போது பிரித்தானியா போன்ற நாடுகள் போர்க் குற்றவாளிகள் அந்த நாடுகளுள் பயணிக்கும் போது அவர்களைக் சட்டத்தின் முன் நிறுத்தும் சட்டமூலங்கள் அமுலில் உள்ளபோதும் அவற்றை சரியாகப் பயன்படுத்தும் தயாரிப்புக்கள் மேற்கொள்ளப்படாமையால் கருணா போன்ற மனித உரிமை மீறல்களைப் புரிந்தவர்களை சட்டத்தின் பிடியில் முறையாக நிறுத்தவில்லை எனத் தெரிவித்தார்.

இனிமேலும் இவ்வாறான தவறுகளை மனித உரிமைவாதிகள் மேற்கொள்ளாது அவதானமாக நடந்துகொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினார்.