போபால் -முடிந்து போன விஷயமாம்.

அணு உலை இழப்பீட்டு மசோதாவை அமெரிக்க அதிபரின் இந்திய வருகைக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்பித்து ஓபாமாவுக்கு இந்திய உயிர்களை பணையம் வைக்கத் மன்மோகன் துடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இருபதாயிரம் மக்கள் நிராதரவான முறையில் கொல்லப்பட்ட போபால் தொடர்பாக மீண்டும் அமெரிக்கா கருத்துத் தெர்வித்துள்ளது. மத்திய பிரதேச தலைநகர் போபாலில் 1984-ம் ஆண்டு நிகழ்ந்த விஷவாயுக் கசிவு சம்பவம் முடிந்து போன வழக்கு என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்குச் சொந்தமான யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து 1984-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மீதைல் ஐசோ சயனைடு எனும் நச்சு வாயு வெளியானது. இதில் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். லட்சக் கணக்கானோர் இன்னும் நச்சு வாயு பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கில் பிரதான குற்றவாளியான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சன்தலை மறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். விபத்து நிகழ்ந்து மூன்று நாள்களுக்கு பிறகு கைது செய்யப்பட்ட ஆண்டர்சன் 2 ஆயிரம் டாலர் ஜாமீனில் சென்றார். இந்த வழக்குக்கு எப்போது வேண்டுமானாலும் வந்து ஒத்துழைப்பதாகக் கூறிச் சென்ற அவர் 26 ஆண்டுகளாகியும் இந்தியாவுக்குத் திரும்பி வரவில்லை. இந்நிலையில் போபால் நீதிமன்றம் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஜாமீன் பெறக் கூடிய வகையில் 2 ஆண்டு சிறைத் தண்டனை அளித்து சமீபத்தில் தீர்ப்பளித்தது. இது பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. வாரன் ஆண்டர்சன் இந்தியாவிலிருந்து தப்பிச் செல்வதற்கு உறுதுணையாக இருந்தது மத்திய அரசா? அல்லது மாநில அரசா? என்ற கேள்விகள் ஒருபுறம் இருந்தாலும், வாரன் ஆண்டர்சனை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் இந்நிறுவனத்தை வாங்கிய டோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தை இந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு இந்தியாவை அமெரிக்கா நிர்பந்திப்பதாக பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம் சாட்டின. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பி.ஜே. குரோலி இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில், அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் இது முடிந்து போன வழக்கு என்று கூறினார். போபால் நச்சு வாயுக் கசிவு தொடர்பாக இந்திய அரசுடன் பேசியதாகவும், பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சோகமான சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்ததாகவும் குரோலி கூறினார். இதனிடையே திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் மைக் ஃபுரோமெனுக்கு எழுதிய இணையதள கடிதத்தில் விஷவாயு சம்பவம் குறித்து கருத்து பரிமாறியதாகக் கூறப்படுவதை தெளிவுபடுத்த குரோலி விரும்பவில்லை. சர்வதேச அளவில் பரிமாறிக் கொள்ளப்படும் இணையதள விவரங்களை பொதுவாக வெளியிடுவதில்லை என்றும் அவர் கூறினார். இருப்பினும் இருவரும் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் வேறு விவகாரம் குறித்ததாகும் என்றும் குரோலி கூறினார்.