பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்கா:மேலாதிக்கம் தகர்கிறது.

18.10.2008.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை ஐரோப்பிய கூட்டணி நாடுகளும் விமர்சிக்கின்றன. ஏகாதிபத்தியக் கொள்கைகளைத் திணிக்க அமெரிக்கா ஆயுதமாகப் பயன்படுத்தும் உலக வங்கியையும், ஐஎம்எப்-ஐயும் திருத்தி அமைக்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் கார்ட்டன் பிரவுனும், பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸியும், ஜெர்மன் அதிபர் ஆங்கலா மெர்க்கெலும் வெவ்வேறு இடங்களில் பேசுகையில் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்க ஏகாதிபத்திய யுகம் முடிவை நோக்கிச் செல்கிறது என்று அரசியல் நோக்கர்கள் பலரும் கருத்துக்கள் வெளியிட்டுள்ளனர். ரஷ்யாவோ ஒருபடி மேலே சென்று ஒரு துருவ உலகின் காலம் முடிந்து விட்டது என்று பறை சாற்றியுள்ளது. இதையேதான் ஐரோப்பிய நாடுகள் சுருதி மாற்றிக் கூறுகின்றன. அமெரிக்காவின் உலகளாவிய தலைமை என்ற ஒரு யுகம் முடிந்து விட்டது என்று லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் நிறுவனத்திலிருந்து அண்மையில் ஓய்வு பெற்ற ஜோகிரே கூறுகிறார்.

சக்திகளின் பலாபலத்தில் ஏற்பட்ட இந்த வரலாற்று முக்கியத்துவமான அரசியல் மாற்றத்தை இனி தடுக்க முடியாது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். அமெரிக்க நிதித்துறை அமைச்சர் பொருளாதார நெருக்கடியில் தலைகுப்புற கவிழ்ந்து கொண்டிருக்க சீனா, விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி சாதனை நிகழ்த்தியது எவ்வளவு பிரமிப்பூட்டும் சம்பவமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரெட்டன்வுட் நிறுவனங்கள் என்று அழைக்கப்படும் உலக வங்கி மற்றும் ஐஎம்எப்பின் கொள்கையை வகுப்பதில் அமெரிக்கா செலுத்தும் மேலாதிக்கத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்றே ஐரோப்பிய கூட்டணி நாடுகள் வலியுறுத்துகின்றன.

ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளின் தலைவர்கள் கடந்த புதன்கிழமை பிரஸ்ஸல்ஸில் உச்சி மாநாட்டில் கூடினர். சர்வதேச நிதி நிறுவனத்தை (ஐஎம்எப்) காலத்திற்கு ஏற்ற வகையில் திருத்தி அமைக்க வேண்டும் என்று கார்டன் பிரவுன் பிரஸ்ஸல்ஸில் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் கூறினார்.

உலகப் பொருளாதாரக் கட்டமைப்புக்கு ஏற்படப் போகும் ஆபத்துக்கள் குறித்து முன் கூட்டி எச்சரிக்கை செய்ய அமைப்பு ஒன்றை உருவாக்குவது அவசியமாகும் என்றும் அவர் கூறினார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்படுத்தப்பட்ட நிதியமைப்புகள் இனி செல்லுபடியாகாது என்று பிரவுனும், சர்கோஸியும் கருத்து தெரிவித்தனர். தற்போதுள்ள சர்வதேச முறைமையை திருத்தியமைக்க சர்வதேச மாநாடு கூட்டப்பட வேண்டும் என்று தற்போது ஐரோப்பிய யூனியனின் தலைவராக உள்ள சர்கோஸி வலியுறுத்தினார். இதற்காக மற்ற உறுப்பு நாடுகளின் ஆதரவை அவர் நாடினார். ஐஎம்எப்-புக்கு புதிய சர்வதேச நிதிச்சட்டங்கள் அவசியமாகும் என்று ஜெர்மன் நாடாளுமன்றத்தில் ஆங்கலா மெர்க்கெல் கூறினார்.