பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கற்பனை வணிகம்: என்ன நடக்கிறது?-ரஃபேல்

பங்குச் சந்தையையும் அதன் பின்னணிகளையும் எளிய மொழியில் பார்க்கலாம். ஒரு ஆட்டின் தற்போதைய விலை 300 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். இந்த ஆட்டை 1000 ரூபாய்க்கு விற்க முடியுமா? ஆயிரம் ரூபாய்க்கு என்ன 3000 ரூபாய்க்குக்கூட விற்கலாம். பங்குச் சந்தை என்பது சுருக்கமாகச் சொன்னால் இதுதான். இப்படிப் பொய்யான வியாபாரம்தான் பங்குச் சந்தை.
 
ஆட்டை வெட்டிப் பங்கு போடாமல் ஒரு கதைக்ககாக ஆட்டின் விலையைப் பிரித்து வைத்துக்கொண்டு பேசுவோம். பத்துப் பங்காகப்போட்டால் ஒரு பங்கின் விலை 30 ரூபாய்;. இன்னும் ஆடு வெட்டப்படவில்லை. ஆளாளுக்கு பங்குகளை எடுக்க வெளிக்கிடுகிறார்கள்.
 
சிலர் ஆளாளுக்கு பங்குகளை எடுக்கிறார்கள். ஒருவரிடம் மட்டும் 4 பங்கு இருக்கிறது. வேறு ஒருவர் ஓடிவருகிறார்.
‘அங்க ஒரு கலியாண வீட்டுக்கு ஆட்டுறைச்சி தேவை. வேற இடத்தில ஆடுகளும் தட்டுப்பாடாக்கிடக்கு இந்தப் பங்கை எனக்கு தாறிங்களா?”
 
4 பங்கு வைச்சிருப்பவர் சொல்கிறார் ‘எனக்கும் கடைக்கு கொத்துரொட்டி போட ஆட்டிறைச்சி தேவை தரமாட்டடேன்.” மற்ற ஆட்களிடம் போகிறார் வந்தவர்.
 
‘நீங்கள் வைச்சிருக்கும் பங்குகளை எனக்கு தருவீங்களா? நல்ல விலை தருவேன்.”
 
‘எவ்வளவு தருவீங்கள்.?”
 
‘ஒரு பங்குக்கு 50 ரூபாய்; தருவேன்.” அனைவரும் அவரிடம் ஆட்டுப் பங்குகளை விற்று விட்டு கோழி வாங்கப் போய்விடுகின்றனர்.
 
இப்ப 6 பங்குகளையும் வைத்திருப்பவரி;டம் வேறு ஒருவர் ஓடி வாறார்.
 
‘எனக்கு தெரிஞ்ச ஒராளுக்கு காசு நிறைய இருக்கு. கொஞ்ச ஆட்டுப்பங்கு வாங்கவேணுமாம். உங்கட பங்கைத் தருவீங்களோ.?”
 
‘எவ்வளவு தருவீங்கள்.?”
 
‘ஒரு பங்குக்கு 100 ரூபாய் வரைக்கும் கொடுக்கலாம் என்று அவர் சொன்னவர்.”
 
‘ம்…சரி.” பங்கு கைமாறுகிறது.
 
ஆறு ஆட்டுப் பங்குகள் மட்டும் 600 ரூபாயாகிறது. 
மற்றவரிடம் 4 பங்குகள் இருக்கிறது. கொத்துரொட்டி போட்டு வாற லாபத்தவிட இது நல்லாயிருக்கே எண்டு அவரும் பங்குகளை விற்கிறார். அதுவும் நாலு பங்குக்கு 400 ரூபாய் கொடுக்க கைமாறுகிறது பங்கு.
 
இப்ப ஆட்டின்ரை மொத்த விலை 1000 ரூபாயாகிவிட்டது. இன்னும் ஆடு வெட்டப்படவில்லை. ஒரு ஆடுதான் இருக்கிறது. எல்லாப் பங்குக்கும் உரிமை  ஒரு ஆளிட்ட இருக்கு. இவர் என்ன முழு ஆட்டையும் சாப்பிடவா போகிறார்? அவர் செய்வதைப் பாருங்கள்…
 
‘வெளியில ஒரு இடத்திலயும் ஆடு இல்லை.  என்னட்ட ஆட்டுப்பங்கு பத்து இருக்கு. வேற ஆட்டுப்பங்கு கிடைக்கிறதுக்கு இப்போதைக்கு வழியே இல்லை.
ஆட்டுப்பங்கு வேணுமா? ஆட்டுப்பங்கு.?” கூவிக்கூவி விற்கிறார்.
 
இல்லாத பொருளுக்கு மவுசுதானே?
 
‘பங்கு என்னவிலை.?”
 
‘200 ரூபாய்;.”
 
‘இதுகொஞ்சம் கூடவாயிருக்கே.?”
 
‘வெளியில எங்கியாவது ஆட்டுப்பங்கு இருக்கோ? இப்போதைக்கு வேற ஆடு வந்து வெட்டுப்படும் சாதியமிருக்கோ? அதுவுமில்லை.”
 
‘சரி..கொஞ்சம் குறைச்சு கொடுங்கள். 180 எண்டால் வாங்கலாம்.”
 
‘190க்கு தாருங்கள்.”
 
பங்கு கைமாறுகிறது. 10ரூபாய் பங்கு 190ரூபாயாகி ஆட்டுப்பங்கின் மொத்தவிலை 1900 ரூபாயாகிவிட்டது. 
 
என்ன யோசிக்கிறீர்கள்? பங்குச் சந்தை என்ற இடத்தில் உங்களிடமிருக்கும் ஆட்டையோ மாட்டையோ தெருநாயையோ கொண்டு போய் விற்பனைக்கு விடவேண்டியதுதான் பாக்கி. மிச்சமெல்லாம் அங்கிருக்கும் தரகர்களும் அவர்களை வழிநடத்தும் நாடுகளும் அவற்றின் கொம்பனிகளும் பாத்துக்கொள்ளும்.
 
எண்ணைப் பங்கு மட்டும் விலை குறைஞ்சுகொண்டு போகிறதா? என்ன செய்யலாம். எண்ணை தோண்டி எடுப்பதை குறைக்கலாம். அப்ப எண்ணை தட்டுப்பாடு வரும் என்பதனால் எண்ணைப் பங்கு விலை கூடும். பங்குகளை வைச்சிருப்பவர் அதிக விலைக்கு விற்கலாம்.
எண்ணை தோண்டி எடுப்பதை ஈராக் நிறுத்தவில்லையா? ஏதாவது ஒரு சாட்டைச் சொல்லி ஈராக்குடன் போரைத் தொடுக்கலாம். இப்ப என்ன நடந்திச்சு? ஈராக்கில எண்ணை உற்பத்தியே நிண்டு போச்சு. பிறகு சதாமையும் மற்றவரையும் சாக்காட்டிப்போட்டு இப்ப ஈராக்கின் எண்ணைக் கொம்பனியை அமெரிக்க நிறுவனங்களே எடுத்தாச்சு. இப்ப என்ன செய்யலாம். விருப்பின நேரம் எண்ணைத் தட்டுப்பாட்டை வரவவைக்கலாம். விருப்பின நேரம் பங்குகளின்ர விலையைக் கூட்டலாம். குறைக்கலாம். (ஆனால் எதிர்பாராத விதமாக அதற்கு ஆகும் செலவைக்கணக்கிடும் திறன்கூடாத புஸ் அரசு போரைச் செய்தது. ஆப்கானிஸ்தானுக்கு படை அனுப்பியதால் கடந்த ஆண்டு ஒரு கனடியப் பொதுமகன் தலையில் 1500 டொலர்கள் கடன்சுமை ஏறியிருக்கிறது. போர்வெறியாலும் பணவெறியாலும் பேரரசுகள் செய்யும் அடாவடிகளால் தீமை என்னவோ பொது மக்களுக்குதான். இன்றிக்கும் நிலையில் இந்தப பங்குச சந்தைச் சரிவின் விளைவுக்கு யாரும் தப்பமுடியாது. எவ்வாறு ஆப்கானிஸ்தானின் போர் கனடியரின் தலையில் 1500-இது ஒருவரின் சராசரிச் சம்பளத்தில் 80 வீதம்- டொலரை ஏற்றியதோ அதுபோல. எங்காவது  ஓர் மூலையில் காட்டுக்குள் வெளியுலகிலிருந்து தப்பி வாழும் பழங்குடியினர் மட்டுமே இதிலிருந்து தப்புவார்கள். தப்ப முடியும். )
 
எண்ணை விலை – எண்ணைப் பங்கின் விலை கூடினால் மற்றதுகளும் தானாகக் கூடும்தானே. கூடினால் பொருட்களுக்கெல்லாம் எப்பவாவது திரும்பவம் குறையுமா …இல்லவே இல்லை. இதில ஒவ்வொரு நாளும் எண்ணைவிலையிலிருந்து தெருநாய் சொறிநாய் பங்குகள் விலை வரை ஏறி இறங்குகிறது.
 
இதையெல்லாம் விற்று வாங்கும் நிலையில் இருக்கும் சாதாரண மனிசருக்கு என்ன சம்பளம்? ஆறுமாசத்துகு;கு ஒருதடiவை 50 சதம் கூடும். அதுவும் எல்லாருக்கும் அல்ல. 6 மாசத்துக்குள் பெற்றோல் எவ்வளவு விலை கூடியிருக்கு?
 
சுத்துமாத்திறுது எப்பிடி எண்டதுதான் பொருளாதாரம் எண்ட பெரிய சொல்லால் தற்போது குறிக்கப்படுவது.
 
பங்குச் சந்தையில் தாங்கள் அதிகச் சம்பளத்துக்கு வேலை செய்த காசுகளைப் போட்டவர்கள் பலருக்கும் பிறசர் எகிறியிருக்கிறது. நிம்மதியில்லாமல் இருக்கினம். தற்போது பேசப்படும் பங்குச் சந்தைச் சரிவு என்பதனால் தங்களிடம் இருக்கும் பங்குகளை விற்க முடியாமல் இருக்கினம். ஒரேயடியாக விழுந்தால் நிலை என்ன?
 
இப்ப கதைக்கு வருவம்.
ஒரு ஆடு இருந்த ஊரிலை ஒரு பட்டி ஆடுகளைக் கொண்டு வந்து அவுத்துவிட்டால் நிலை என்ன? எப்பிடி ஆட்டுறைச்சிப் பங்கு 5 ரூபாய் 3 ரூபாய் எண்டு மாறிப்போகுமோ அந்த நிலை வரும். முதலுக்கே மோசம்.
 
நினைவில் வைச்சுக் கொள்ளவேணும் முதலில் சொன்ன ஆடே இன்னும் வெட்டிப் பங்குபோடப்படவில்லை. ஆனால் பங்கின்ர விலை மட்டும்தான் மாறி மாறிக் கூட்டிக் கூட்டி விக்கப்பட்டிருக்கு.
 
ஒரு ஆட்டிலையே இவ்ளவு காசு சுத்துமாத்தப்படுகிறது எண்டால் 100 லட்சம் பெறுமதியான ஒரு கொம்பனியை பங்கு போட்டு வித்தால் எவ்வளவு சுத்துமாத்து நடக்கும். 100 லட்சம் உண்மை விலையுள்ள கொம்பனி ஒன்று பங்கின் விலையில் 1000 லட்சமாக இருக்கும்.
 
இதைத்தான் தற்போதைய பொருளாதாரம் என்கிறார்கள். ‘வளர்ந்த” முதலாளித்துவம் என்கிறார். போலியாகவும் பெய்யாகவும் அனைத்தும் தென்படும் வகையில் வைத்து உண்மையை மறைத்துக் கொண்டிருப்பாரக்ள். மக்களை ஏமாற்றி பங்குகளை விற்று மக்கள் காசிலேயே வாழ்ந்து… அப்படியே தொடர்ந்து போகிறது கதை.
 
அமெரி;க்காவில் வங்கி நட்டத்தில் விற்கப்படுகிறது என்றால் என்ன பொருள்?
முதலுக்கு மோசம் வருமுன்னர் 10 ரூபாய்; பங்கு 5 ரூபாய்; ஆகுமுன்னர் ஆற்றையேன் தலையில் கட்டுவது அல்லது நட்டம் எண்டு இருக்கிறதைச் சுருட்டிக்கொண்டு ஒடுறது எண்டுதான் அதற்கு பொருள்.
 
இப்ப அதையேன் அமெரிக்க அரசு 700 பில்லின் (7000லட்சம்) கடனானக் கொடுத்து காப்பாற் இருக்கிறது? அமெரிக்க அரசுதான் பெரிய கற்பனை வங்கி. சின்ன சின்னதாக பல வங்கிகள் விழுந்தால் கடைசியாக (வளை விழுந்து விழுந்து கோப்பிசம் கடைசியா விழுகிறமாதிரி) பெரிய வங்கியான அமெரிக்கா விழுந்துபோகும். அமெரிக்க மட்டுமல்ல. அதைப்போன்ற நடவடிக்கையில் இருக்கும் அனைத்து நாடுகளும் ஆட்டம் காணும். தன்னிறைவப் பொருளாதாரச் செயற்பாடுகளில் வாழும் மக்களை மட்டுமே இந்த பாதிப்பு எட்டாமல்விடும்.
 
எங்க போனது அமெரிக்காவின்ற அவ்வளவு காசும்? சுருக்கமாக மாத்திச் சொன்னால் எங்க இருந்தது அமெரிக்காவிட்ட காசு? அமெரிக்கா கடந்த பல வரவு செலவுத் திட்டங்களில் மறைமுகமாக (300000 லட்சம் டொலர் அளவுக்கு) கடன் கணக்கெல்லோ காட்டிக்கொண்டிருக்கு. கற்பனையா இருக்கிற காசை எடுத்து கற்பனையா இருக்கிற வங்கிகளைக் காப்பாற்ற அமெரிக்கா கொடுக்கப்போகுது. இப்ப லண்டனும் 50 பில்லியன் பவுண்ட்ஸ் கொடுக்கப்போகிறது என்கிறது.
 
தவிரவும் தற்போது வெற்றிடத்தில் இருந்து இந்த நாடுகள் எடுத்துவிடும் பணமும் நடைமுறைக்கு வருகையில் அந்தந்த நாடுகளில் பண வீக்கம் பெருமளவில் கூடும். பணவீக்கத்தின் விளைவுகள் தொடரும். இன்னும் சில ஆண்டுகளுக்கு மறைமுகமாகவும் குறைந்தது இன்னும் ஓராண்டுக்காவது நேரடியான பாரிய விளைவுகளும் இருக்கும்.
 
இந்த பொருளாதாரச் சீர்குலைவைகுறித்த மக்களின் கவனத்தை திசைதிருப்பி போக்கு காட்ட போரிலிருந்து  வேறு வகையான தகிடுதித்தங்கள் நடத்த இப்பெரிய நாடுகளின் உளவு நிறுவனங்களும் பொருளாதாரக் கையாடல் செய்வோரும் சிந்தித்துக்கொண்டிருப்பார்கள். அந்தக் காட்சிகளும் அரங்கேற்றப்படுவதை விரைவில் பார்க்கலாம்.
 
முந்திப் பெருசுகள் தத்துவம் சொல்லுமே! எல்லாம் பொய். எல்லாம் மாயை எண்டு அதுதான்.

(கனடாவின் தாய்வீடு மாத இதழில் வந்த கட்டுரை இனியொருவிற்காக மாற்றங்கள் திருத்தங்களுடன் பெரிதாக்கப்பட்டுள்ளது–ரஃபேல்)

One thought on “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கற்பனை வணிகம்: என்ன நடக்கிறது?-ரஃபேல்”

  1. இது நன்றாக இருக்கிறது ………….. இந்த உண்மையே புரிந்துகொள்ள எனக்கு பல நாட்கள் ஆகிவிட்டது 

Comments are closed.