பேச்சு மூலம் தீர்வுக்கான வாய்ப்புகள் தென்படவில்லை : கொழும்பு மறைமாவட்ட ஆயர்

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல்கள் பேச்சுவார்த்தைகளுக்கு சந்தர்ப்பம் இல்லாத ஒரு நிலையை எட்டியிருப்பதாக கொழும்பு மறைமாவட்ட ஆயர் ஒஸ்வோல்ட் கோமிஸ் ஆண்டகைகள் தெரிவித்துள்ளார்.

மோதல்கள் மூலமே பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்பதை நிரூபிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வத்திக்கான் வானொலிக்கு வழங்கியிருக்கும் செவ்வியில் அவர் கூறியுள்ளார்.

“சிலர் இன்னமும் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவாகப் பேசிவருகின்றபோதும், தீர்வுக்கு இதுதான் வழியென மேலும் ஒருசாரார் கருதுகின்றனர்” என்றார் அவர்.

“இரண்டு தரப்பினரும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதே சிறந்தது என்று நான் கருதுகின்றேன். ஆனால், விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் பேச்சுக்குத் தயார் என அரசாங்கம் உறுதிபடக் கூறியுள்ளது. விடுதலைப் புலிகளோ ஆயுதங்களைக் கைவிடமுயாது எனக் கூறியுள்ளனர். இதனால் அங்கு முட்டுக்கட்டைநிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது” என்றார் கொழும்பு மறைமாவட்ட ஆயர்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் ஆரம்பமாகவிருக்கும் 15வது சார்க் உச்சிமாநட்டை முன்னிட்டு இம்மாதம் 26ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதிவரை ஒருதலைப்பட்ட போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

எனினும், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்கு வந்தால்தவிர, அவர்களின் ஒருதலைப்பட்ச போர்நிறுத்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்குப் பின்னடைவு’

கடந்த மூன்று தினங்களுக்கு மேலாக வடபகுதியில் தொடர்ந்துவரும் மோதல்களில் 100ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக இராணுவத் தரப்பில் அறிவிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதை கொழும்பு மாவட்ட ஆயர் ஒஸ்வோல்ட் கோமிஸ் ஆண்டகை உறுதிப்படுத்தியிருப்பதாக வத்திக்கான் வானொலி தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களுக்கும், போராளிக் குழுவினருக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதாகவும், இவர்கள் இருவரும் வௌ;வேறுபட்டவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார். “தனியான ஒரு குழுவே மோதல்களில் ஈடுபடுவதாக அவர்கள் கூறுகின்றனர். எனினும் பல தமிழர்கள் சிறைப்பிடிக்கப்படுகின்றனர்” என அவர் சுட்டிக்காட்டினார்.

“‘சமாதானத் தீர்வொன்று தேவையாயின் முதலில் அவர்களை ஒழிக்கவேண்டும்’ என்ற நிலைப்பாட்டையே பெரும்பாலான மக்கள் கொண்டுள்ளனர். இதுவே பொதுமக்களின் பொதுவான கருத்தாக அமைந்துள்ளது. எனினும், இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை” எனவும் கொழும்பு மறைமாவட்ட ஆயர் ஒஸ்வோல்ட் கோமிஸ் ஆண்டகைகள் தெரிவித்தார்.

ஐஎன்லங்கா இணையம்