பொலிஸாரின் விரோதப் போக்கை கண்டித்து செங்கல்பட்டு அகதிகள் 10ஆவது நாளாக உண்ணாவிரதம்!

chngal30செங்கல்பட்டு இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 42 பேர் 10ஆவது நாளாக தமது உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

 இலங்கைஅரசாங்கக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடந்த கடும்போரின்போது ஏராளமான தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்தனர்.

இவர்களில் பலரை தமிழ்நாட்டு ‘கியூபிரான்ஸ்’ பொலிஸார் கைது செய்து சிறப்பு முகாம் என்னும் பெயரில் செங்கல்பட்டு பூந்தமல்லி உட்பட தமிழகத்தில் பல இடங்களில் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவற்றில் செங்கல்பட்டிலுள்ள சிறப்பு முகாம் அகதிகள் மீது பொலிஸார் எந்த வழக்கையும் பதிவு செய்யாமலும், சிலர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் தொடர்ந்து நடத்தாமலும் பொலிஸார் அலைக்கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பொலிஸாரின் இந்த விரோதப் போக்கை கண்டித்து இவர்கள் கடந்த ஜூலையில் சாகும்வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். இவர்களோடு பேச்சு நடத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யாமலிருந்த 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அதன்பிறகு உண்ணாவிரதத்தை அகதிகள் கைவிட்டனர்.

ஆனால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நபர்கள் விவகாரத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. பொலிஸார் கேட்டிருந்த 45 நாட்கள் அவகாசம் முடிந்த பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சிறப்பு முகாம் அகதிகள் 42 பேர் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 20ஆம் திகதி தொடக்கம் மேற்கொண்டுள்ளனர்.

அவர்களின் கோரிக்கைள் இவை:

* இலங்கை அகதிகளை உடனடியாக வேறு முகாமுக்கு மாற்றவேண்டும்.

* எங்கள் உறவினர்கள் உள்ள முகாமுக்கு எம்மை மாற்றவேண்டும்.

* வழக்கு விசாரணைகளை விரைவாக முடிக்க வேண்டும்.

* திறந்த வெளி முகாமுக்கு மாற்றவேண்டும்.

* உறவினர்களுடன் சேர்ந்து நாம் வாழ வேண்டும்.

* எல்லா நாட்டவரைப்போல வெளியிலிருந்து எமது வழக்குகளை முடிப்பதற்கு அனுமதிக்கவேண்டும்.

-இவை போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரதத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர்.

10ஆவது நாளாக உண்ணாவிரதம் தொடர்கிறது. இவர்களில் ரமேஷ், விஜய் ஆகியோர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் உடனடியாக அவர்களைப் பொலிஸார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையின் பின் அவர்கள் மீண்டும் முகாமுக்குத் திரும்பியுள்ளனர்.

எனவே இவர்களது உண்ணாவிரத பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழ ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.