புளட் அமைப்பினரின் வீர மக்கள் தினம் :நேற்று (16.07.20008) இறுதி நாள்

வவுனியாவில் வீரமக்கள் தின இறுதிநாள் நிகழ்வுகள்- புளொட் அமைப்பினர் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் இன்றாகும். இதனை முன்னிட்டு இன்று முற்பகல் மன்னார்வீதி வேப்பங்குளத்திலிருந்து ஆரம்பித்த அமைதிப்பேரணி கோவில்குளம் உமாமகேஸ்வரன் சமாதியை சென்றடைந்தது. மறைந்த புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படங்களை ஏந்திவாறு பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இப்பேரணியில் கலந்துகொண்டனர். இதனையடுத்து பேரணியில் கலந்து கொண்டோர் மற்றும் வீரமக்கள்தின நிகழ்வுகளில் கலந்துகொண்டோர்க்கு கோவில்குளம் சிவன்கோவிலில் இன்றுபகல் புளொட் அமைப்பினரால் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உமாமகேஸ்வரன் சமாதியில் மௌனஅஞ்சலி மற்றும் மலராஞ்சலி நிகழ்வு என்பன இடம்பெற்றது. செயலதிபர் உமாமகேஸ்வரன் சமாதி வளாகத்தில் மறைந்த புளொட் உறுப்பினர்களின் உருவப்படங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அஞ்சலிக்கூட்டமும் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் புளொட் தலைவர் திரு. சித்தார்த்தன் அவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், புளொட் உறுப்பினர்கள், முன்னாள் புளொட் உறுப்பினர்கள், புளொட் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பில் வீரமக்கள் தின நிகழ்வுகள்- புளொட் அமைப்பினரால் அனுஷ்டிக்கப்படும் வீரமக்கள் தின இறுதிநாளான இன்று மட்டக்களப்பு புளொட் அலுவலகத்தில் மங்கள விளக்கேற்றல், மலராஞ்சலி, மௌனஅஞ்சலி நிகழ்வுகள் என்பன இடம்பெற்றது. இதில் புளொட் உறுப்பினர்கள், முன்னாள் புளொட் உறுப்பினர்கள், புளொட் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பின் லேக்வீதி இலக்கம் 02, வவுணதீவு மற்றும் செங்கலடி ஆகிய இடங்களில் புளொட் அமைப்பினரால் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. வவுணதீவில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டதுடன், மட்டக்களப்பு வைத்தியசாலையில் 15ற்கும் மேற்பட்ட புளொட் உறுப்பினர்கள் இரத்ததானமும் வழங்கினர். அதேவேளை வீரமக்கள் தினத்தை முன்னிட்டு களுவேப்பங்கேணியில் நடத்தப்பட்ட செயலதிபர் தோழர் உமாமகேஸ்வரன் நினைவுக்கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிச்சுற்று இன்று மட்டக்களப்பு மாநகரசபை வௌர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நாவற்குடா ஜீவஒளி அணி வெற்றிபெற்றது. 2ம் இடத்தினை மட்டக்களப்பு சென்ரல் லைட் அணியும், 3ம் இடத்தினை கறுவேப்பங்கேணி கோல்டன் ஈகிள் அணியும் பெற்றுக்கொண்டு பரிசில்களை பெற்றன. இதில் சிறந்த ஆட்டநாயகனாகவும், சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் ஜீவஒளி அணியைச் சேர்ந்த புரோட்சன் தெரிவானார். இதில் தொடர் ஆட்ட நாயகனாக ஜீவஒளி அணியின் டினேஸ்குமாரும், சிறந்த பந்து வீச்சாளராக ஜீவஒளி அணியின் டிலக்சனும் தெரிவானார்கள்.

வீரமக்கள் தினத்தை முன்னிட்டு புத்தளத்தில் நிகழ்வுகள்- புளொட் 19வது வீரமக்கள் தினத்தின் இறுதிநாளான இன்று புளொட்டின் மறைந்த கிழக்குப் பிராந்திய பொறுப்பாளர் தோழர் ராஜ்மாமா மற்றும் சிரேஸ்ட உறுப்பினர் கரிகாலன் அவர்களின் நினைவாக மாமாகரிகாலன் நினைவுக்கிண்ண கிரிக்கட்போட்டி இன்று புத்தளம் செம்மந்தளுவௌ கிராமத்தில் நடாத்தப்பட்டது. இப்போட்டியில் மணற்குண்டு சென்ற் செபஸ்டியான் ஏ விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று மாமாகரிகாலன் நினைவுக் கிண்ணத்தை பெற்றுக்கொண்டது. 2ம் பரிசினை மணற்குண்டு மெட்ரோ விளையாட்டுக் கழகமும், 3ம் பரிசினை செம்மந்தழுவ டிலனதரு விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டன. அத்துடன் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு தோழர் ராஜ்மாமா மற்றும் சிரேஸ்ட உறுப்பினர் கரிகாலன் அவர்களின் நினைவாக மாமாகரிகாலன் நினைவுக்கிண்ண சைக்கிள் ஓட்டப்போட்டி செம்மந்தளுவௌவில் இன்று நடத்தப்பட்டது. இதில் செம்மந்தளுவௌவைச் சேர்ந்த சன்ன என்பவர் முதலாமிட்டத்தைப் பெற்று கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டார். அத்துடன் தோழர் ராஜ்மாமா கரிகாலன் நினைவாக செம்மண்தழுவௌ பாடசாலை மாணவ, மாணவியருக்கு ஐநூறுக்கும் மேற்பட்ட அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட உபகரணங்களும் இன்று புளொட் அமைப்பினரால் வழங்கப்பட்டுள்ளன.

கொழும்பு, யாழ்ப்பாணம், திருமலை, மன்னார் வீரமக்கள் தின இறுதிநாள் நிகழ்வுகள்- கொழும்பு, யாழ்ப்பாணம், திருமலை, மன்னார் ஆகிய மாவட்டங்களிலுள்ள புளொட் அலுவலகங்களிலும் இன்று இறுதிநாள் வீரமக்கள் தின நிகழ்வுகள் இடம்பெற்றன. மங்கல விளக்கேற்றல், மலராஞ்சலி, மௌன அஞ்சலி நிகழ்வுகளும் அஞ்சலிக் கூட்டங்களும் இன்றுமுற்பகல் இடம்பெற்றன. மற்றும் யாழ்ப்பாணம், மன்னார், திருமலை புளொட் அலுவலகங்களில் மறைந்த புளொட் உறுப்பினர்களின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன. மற்றும் திருமலை புளொட் உறுப்பினர்களால் இன்று அன்னதானமும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு திருமலை பத்திரகாளி அம்பாள் கோவிலில் இன்றுமாலை விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெற்றுள்ளன.