புலி உறுப்பினர் ஒருவர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈழத் தமிழர்களை, இந்தியா வழியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வந்த முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி ஒருவர் கொல்லத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கை தமிழர்களை படகு மூலம் அனுப்பி வைக்க இருந்த போது அவர்கள் அங்குள்ள தனியார் விடுதியில் பிடிபட்டனர். இவ்வழக்கில் சிவக்குமார் என்ற சிவாவை கொல்லம் போலீசார் தேடி வந்தனர். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை ஆட்களை அனுப்பி வைத்த வழக்கிலும் இவரை தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று கொல்லத்தில் இவர் தங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து மாவட்ட காவல்துறை, உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது முக்கிய பகுதி ஓன்றில் சிவக்குமார் பிடிப்பட்டார்.பிடிபட்ட அவரிடம் கொல்லம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் 1980 முதல் விடுதலை புலிகள் இயக்கத்தில் பணியாற்றியதும் பின்னர் தமிழ்நாட்டுக்கு அகதியாக வந்ததும், தமிழக அகதிகள் முகாமில் தங்கியிருந்த இவர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதும், இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தொடர்ந்து இவர் தமிழகத்தில் இருந்து கேரளாவில் பதுங்கியிருந்து இலங்கை தமிழர்களிடம் பணம் வசூல் செய்து அகதிகளை ஆஸ்திரேலியா நாட்டுக்கு படகுகள் மூலம் அனுப்பி வைப்பதும் தெரிய வந்தது. மேலும் கேரளாவில் குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. மத்திய, மாநில போலீசார் சிவக்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறிதது கொல்லம் மாவட்ட எஸ்பி ஹர்சிதா நிருபர்களிடம் கூறுகையில், இலங்கை தமிழர்களை ஆஸ்திரேலியாவுக்கு கடத்தி வந்த இவரை கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தார்.