புலி உறுப்பினர்கள் மற்றும் மக்களை களவாக வெளியேற்றியதில் அரசியல்வாதி ஒருவருக்கு 200 கோடி ரூபா வருமானம்!

ltte003 வவுனியா இடம்பெயர்  முகாம்களிலிருந்து மக்களை சட்டவிரோதமாக வெளியேற்றும்  செயற்பாட்டிற்காக  பணம் அறவீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கையின் மூலம் அரசியல்வாதி ஒருவர் 200 கோடி ரூபா பணத்தை வருமானமாக ஈட்டியுள்ளார் எனவும் பிரபல வார இறுதி சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு இடம்பெயர் முகாம்களிலிருந்து இதுவரையில் சுமார் 20,000 பேர் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இடம்பெயர் முகாம்களிலிருந்து மக்களை சட்டவிரோதமான முறையில் வெளியேற்றும் செயற்பாடுகளுடன் பிரபல அரசியல்வாதி ஒருவரும் அவரது சகோதரரும் தொடர்புபட்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
இந்த நடவடிக்கையின் மூலம் குறித்த அரசியல்வாதி 200 கோடி ரூபா பணத்தை வருமானமாக ஈட்டியுள்ளார்.
 
முகாம்களிலிருந்து மக்களை வெளியேற்றி அவர்களை வவுனியா அல்லது கொழும்பிற்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகளுக்காக இந்தப் பணம் அறவீடு செய்யப்பட்டுள்ளது.
 
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இவ்வாறு பணத்தைக் கொடுத்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
எவ்வாறெனினும், நினைத்தவாறு இடம்பெயர் முகாமிலிருந்து எவராலும் வெளியேறிச் செல்ல முடியாது என அனர்த்த நிவாரண மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.