“புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலருக்கு அரசில் முக்கிய வசதிகள்;ஆனால் நாம் சந்தேகத்தின் அடிப்படையில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறோம்!”

தமக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரி அநுராதபுரம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் 43 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனக்கு அவர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளுடனான போர் முடிவடைந்து, அந்த அமைப்பைச் சேர்ந்த பல மூத்த உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், வெறுமனே சந்தேகத்தின் அடிப்படையில் மாத்திரம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை தொடர்ந்து அடைத்து வைத்திருக்காது விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியே அந்த கைதிகள் உண்ணாவிரதம் இருப்பதாக அவர் கூறுகிறார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலருக்கு அரசில் முக்கிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக கூறும் அந்த கைதிகள், இதுவரை விசாரணையின்றி பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தம்மை விடுதலை செய்ய வேண்டுமென்று கோரி நீர் மாத்திரம் அருந்தி இந்த உண்ணாவிரதத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளதாகவும் சிவசக்தி ஆனந்தன் கூறியுள்ளார்.