புலிகளின் முக்கிய தளமாகிய துணுக்காய் சுற்றிவளைப்பு!:இலங்கை இராணுவம் தெரிவிப்பு!

21.08.2008
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தளமாகிய துணுக்காய் நகரப்பகுதியை புதன் அதிகாலை முதல் இராணுவத்தினர் சுற்றிவளைத்து தாக்குதல்களை நடத்தி வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.

துணுக்காய் நகரத்தின் வடக்கு மற்றும் மேற்குத் திசைகளில் இருந்து நகர்ந்துள்ள படையினர், புதன் காலை இடம்பெற்ற மோதல்களில் 2 விடுதலைப் புலிகளின் சடலங்களைக் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

மாங்குளம் – வெள்ளாங்குளம் வீதியில் அமைந்துள்ள துணுக்காய் நகர் விடுதலைப் புலிகளின் அதிமுக்கிய இடமாகக் கடந்த 25 வருடங்களாகத் திகழ்ந்து வந்துள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையத்தள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது விமானப்படையினர் தொடர்ச்சியாக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், ஓமந்தை பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் அடையாளம் காணப்பட்ட இலக்குகள் மீது உலங்கு வானூர்தி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

ஓமந்தைக்கு வடமேற்கே 7 கிலோ மீற்றர் தொலைவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா பகுதியில் புதன்கிழமை விடுதலைப் புலிகளின் நான்கு இலக்குகள் மீது விமானப்படையினர் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக வன்னிப் பிரதேசத்தில் இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் நேற்றைய சண்டைகளில் 14 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையதள அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் போர்முனைகளிலும், வெலிஓயா மற்றும் யாழ்ப்பாணம் கிளாலி பகுதிகளிலும் இந்த மோதல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.