புலம் பெயர் பிழைப்புவாதிகளின் பகல் கனவுகள் : விஜயகுமாரன்

daydreamஉலக வரலாறுகளில் ஆளும்வர்க்கங்கள், மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்தன என்பதற்கு ஒரு சான்றைக் கூடகாட்டமுடியாது. போராட்டங்களை மக்களின் அரசியல், பொருளாதாரகோரிக்கைகளை வெண்றெடுக்கவைத்தன. அமெரிக்கத் தொழிலாளர்களின் எட்டுமணி நேர வேலை, காலனித்துவத்திற்கு எதிரான தேசியவிடுதலைகள்,பொதுவுடமைக்கட்சிகளின் போராட்டங்கள் என்பவற்றை வரலாறு காட்டுகிறது.

புலிகளின் பின்னடைவிற்குப்பிற்கான அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு புகலிடத்தில் உள்ள பல குழுக்கள் போட்டி போடுகின்ற்ன.ஆனால் தமிழ் மக்களின் பிணங்களை மிதித்துக்கொண்டு உயிர் பிழைத்த தமிழனை காட்டிக்கொடுக்கிறார்கள்.

புலிகளின் வலதுசாரி அரசியல்,ஜனநாயகமறுப்பு ஆயுதமோகம், மக்களின் பிரச்சனைகளை முன்வைக்காமல் தமது குழுநலன் சார்ந்து பிரச்சனைகளை அணுகியமைபோன்றவை, இன்றையபின்னடைவுகளிற்கான பிரதான காரணிகளாகும். எந்தவீழ்ச்சியில் இருந்து தமிழ் மக்களை மீட்கப்புறப்பட்டு இருக்கும், தம்மை தமிழ் ஜநாயகவாதிகள் என்று கூறிக்கொள்ளும் பிழைப்புவாதிகள், இலங்கையின் மிகப்பெரிய கொலைகாரன்,ஊழல்,குடும்ப அரசியல்,ஜனநாயமறுப்பு என்பவற்றின் மொத்தவியாபாரியான மகிந்தாவின் கால்களை கழுவுவதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுத்தருவார்களாம் என மற்றவர்களை நம்பச்சொல்கிறார்கள்.

வன்னி முகாம்களை பார்வையிடச்சென்ற இக்குழுக்களில் ஒன்றினது அறிக்கை, இலங்கைஅரசின் பச்சைப்பொய்களை விட பல மடங்கு பொய் பேசுகிறது. மரணித்த மக்கள், நோயாளிகள், வண்புணர்ச்சிக்கு உள்ளான பெண்கள்,போதிய உணவு , இருப்பிட சுகாதார வசதிகள் வழங்கப்படாமை போன்ற எதுவுமே இந்த மேட்டுக்குடி வாழ்வு வாழ நினைக்கும் கும்பலுக்குத் தெரியவில்லை.

தேசம் நெற் இணையத் தளத்தில் மகிந்தாவின் நாட்டிற்காக உயிரையே விடுவேன் என்ற புல்லரிக்க வைக்கும் வீர வசனங்களை -இவ்வசனங்களை தமிழ் நாட்டு முதிய வியாபாரி கருணாநிதி தான் எழுதிக் கொடுத்தாரோ என்று எனக்கு ஒரு சந்தேகம்- வெளியிட்டு பாதம் பணிகின்றனர். தேசத்தில் வெளிவந்த கிலாரி கிளிங்டன் வன் புணர்ச்சியை இலங்கை ராணுவம் ஆயுதமாகப் பயன்படுத்தியது என்ற குற்றச்சாட்டு குறித்த கட்டுரைக்குப் பின்னூட்டமிட்ட அனைவருமே இலங்கை அரசைக் காப்பாற்றவே முனைப்புக் காட்டினார்கள். ‘அமரிக்க ராணுவம் பாலியல் வன்முறைகளில் ஈடுபடவில்லையா’, ‘எந்த நாட்டு ராணுவம் செய்யவில்லை’ என்ற அடிப்படையிலேயே இவர்களின் வாதம் அமைந்திருந்தது.

இவர்களுக்கு எல்லாம் தமிழ்ப் பெண்களின் அழுகுரல்கள் கேட்பதில்லை. அவர்களுக்கு நிகழ்ந்த பயங்கரங்கள், அவர்களின் அவலக் குரல்கள், இலத்திரனியல் கொலைக்கு உட்படுத்தப்படுகிறது. பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகளிற்காக தேசத்தை ஏன் குற்றம் சாட்டவேண்டும் என யாராவது நினைத்தால், இலங்கை அரசையோ,மகிந்தாவையோ விமர்சித்து நேரத்திற்கு எழுதிப்பாருங்கள் தேசம் அதனைபிரசுரிக்காது. இது பலருடைய அனுபவம்.

தமிழருவிமணியனின் சந்திப்பு பற்றிய ஒரு கட்டுரையில் தேசம் ஆசிரியர் அக்கூட்டத்திற்கு வந்த புலி ஆதரவாளர்கள் இன்னமும் பகல் கனவில் மிதப்பதாகக் கவலை கொள்கிறார். பெரும்பாலன புலிஆதரவாளர்கள் அரசியல்ரீதியாக வளர்ந்தவர்கள் அல்ல, அவர்கள் தமிழ்தேசியம், இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பவற்றிற்காகவே புலிகளை ஆதரிக்கிரார்கள். ஆனால் இவர் போன்ற அரசியல் மேதைகள், நரபலி வேட்டையாடும் மகிந்தாவிற்கு ஊடாக தமிழ் ளிற்கு விடுதலை பெற்று தந்து விடப்போகிறார்களாம்.

நுண்ணரசியல், அடையாள அரசியல் போன்றவற்றின் முலம் தமிழ் மக்களின் போராட்டத்தை சிதைக்கபேரினவாதிகள் முயல்கிறாகள்.இதன் ஒரு வெளிப்பாடுதான் பின்நவீனத்துவவாதி சுகன்,இலங்கை தேசியகீதம் தமிழில் இருப்பதாக கூறிப் பாடிக்காட்டியது. சமயக் குப்பைகள், வணிக தமிழ் சினிமாப்படங்கள், தமிழககாங்கிரஸ்கோமாளிகளின் பேச்சுக்கள்,வணிகசஞ்சிகைகள் M.G. இன் அண்ணாயிசம் பற்றிய அரும் பெரும் விளக்கம் எல்லாம் தமிழில் தான் இருக்கிறது. பின்நவீனத்துவ வாதிகள் இவற்றை எல்லாம் அருத்த கூட்டங்களில் பாடிப்பயன்பெறலாம்.

மரம் சும்மா இருக்க நினைத்தாலும் காற்று அதை விடுவதில்லை என்ற மாவோவின் வரிகளிற்கு ஏற்ப பேரினவாதத்ற்கு எதிரான ஈழமக்களின் போராட்டம் மீண்டும்வீறுகொண்டு எழும் போது ஈழமண்ணில் இருந்தே அதன் தலைமைசக்திகளும் எழப் போகின்றன இப்புலம்பெயர் பிழைப்புவாதிகளின் தலைமைக்கனவுகள் ஒரு நாளும் பலிக்கப்போவதில்லை.

16 thoughts on “புலம் பெயர் பிழைப்புவாதிகளின் பகல் கனவுகள் : விஜயகுமாரன்

 1. உண்மையான கருத்து. தொடருங்கள்.

 2. விஜயகுமாரன் மிகவும் அவசியமான ஒரு விடயத்தை தொட்டிருக்கிறார்.இதை ஆதாரங்களுடன் இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.அடுத்தடுத்த கட்டுரைகளில் இதனை கவனத்தில் கொள்வார் என நம்புகிறேன்.பரந்துபட்ட மக்களுக்காக போராடுவதாக கூறிக்கொண்டு அந்த மக்களுக்கு துரோகம் இழைத்து வரும் பலரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவது காலத்தின் கட்டாயம் ஆகும்.அந்தப்பணியை மேற்கொள்ளும் கட்டுரையாளருக்கு என் வாழ்த்துக்கள்.

 3. தாங்கள் கூறியதெல்லாம் சரிதான். அதென்ன தாங்களும் புலிகளின் மீது எல்லோரும் சொல்லும் அந்த வழமையான சனநாயக மறுப்பு, ஆயுத மோகம், குழு நலன் சார்ந்து இப்படியே அடுக்குகிறீர்களே, புலிகள் என்ன அகிம்சாவாதியோடும், மானிதாபிமானியோடுமா சண்டையிட்டார்கள். மேலும் இவ்வளவு கட்டுப்பாடுகள் நிறைந்து நின்றபோதே பேரினவாதம் கருணா போன்றோரை அமைப்பிற்குள்ளிருந்து தத்தெடுத்துக்கொண்டார்களே, ஆயுதம் தூக்கி ஓர் அரக்க, இனவாத, இதயமற்ற கும்பல்களோடு மோதுகிறபோது அங்கே சனநாயகம் பேசுவதில் அர்த்தமில்லை. சீனப் புரட்சியில் தோழர் மாவோ அவர்களுக்கு எதிராக எத்தனைவிதமான தொந்தரவுகள், யுத்தக்குழுவின் பொருப்பிலிருந்து வெளியேற்றம், சகத் தோழர்களாலே அவமானம் இப்படி நிறைய சோதனைகளை கட்ந்துதான் அவரால் மாவோயிசம் என்னும் ஒரு புதிய சொல்லாடலையும், ஒரு மிகப்பெரும் தேசத்தையும் கட்டியெழுப்ப முடிந்தது. இவரும் சனநாயகம் பேசியிருந்தால் அவரின் நெடும்பயணத்திலேயே அவரை முடித்திருப்பார்கள். அங்கேயும் அவரின் சக தோழர் வேரு மார்க்கமாக பயணித்த யுத்தக்குழுவின் தள்பதி மாவோவின் எதிரியாகி கடைசியில் நாட்டைவிட்டெ ஓடிப்போனார் இது ஏனெனில் மக்களை அணி திரட்ட அன்றைய சூழலக்கும்,  9/11 பிறகான இன்றைய சூழலுக்கும் நிறைய வேறுபாடு விஜயகுமாரன். இன்றைய கையறு நிலை எமக்கும் புரிகிறது, இது 7 நாடுகளின் போர் வெற்றி என்று குறிப்பிடுங்கள் மாறாக புலிகளின் அரசியல் சார் தோல்வி என்று கருத வேண்டாம். போரில் தனது தள்பதிகளை அனுப்பி ஆலோசித்த அந்த 7 நாடுகளும் இன்றைக்கு எம் மக்களின் ம்னிதாபி மான பிரச்சினைகளை பேச மறுப்பதேன். அல்லது மவுனமானதேன். புவிசார் அரசியலின் புதிய கூட்டாளிகள் இவர்கள். மனித்ம் மரத்துப்போன அயோக்கிய அரசுகள். இங்கே மேலும் இதையே பயன் படுத்தி சிலர் பிழைக்கிறார்கள் என்பதும் உண்மையே அதையே தக்க சான்றுகளோடு தோலுரிப்பீர்கள் என நம்புகிறேன்.

 4. உங்கள் விமர்சனம் சரியல்ல

 5. மாஓவை வைத்து விடுதலைப் புலிகளை எப்படி நியாயப்படுத்த முடியும்?
  மாஓ தனிமனிதப் படுகொலைகளை என்றுமே ஏற்றவரல்ல. வன்முறையைத் தன்னளவிலேயே நியாயப்படுத்துவது மார்க்சியமுமல்ல.
  மாஓவின் போர் மக்கள் போர்.

  விடுதலைப் புலிகள் நடத்தியது மக்கள் போரல்ல.
  இறுதி மாதங்களில் மக்களை அவர்கள் மிகவும் தவறாகவே நடத்தினார்கள்.

  மாஓவின் மேற்கோள்களிலேயே மக்கள் யுத்த அணுகுமுறை பற்றி போதியளவு தெளிவாக்கப்பட்டுள்ளது.

  கருணாவைத் தத்தெடுக்க ஏன் இயலுமானது? இந்தத் துரோகம் ஏன் முந்திய பலவற்றை விடப் பெரிய கேடானது? கிழக்கில் விடுதலைப் புலிகளின் ஆதரவுத் தளத்திற்கு என்ன நடந்தது?
  இங்கே மக்கள் அரசியலும் மக்கள் போரும் ஏன் முக்கியமானவை என்று விளங்கும்.

  அழிவு அனைத்திற்தும் புலிகள் காரணமல்ல. தேசியவாதிகள் அனைவருமே பதில் கூறுவேண்டும்.

 6. உங்களுக்கு இப்ப என்ன தான் பிரச்சனை?
  என்னமோ இந்தியா பெரிய அகிம்சை தேசம் மாதிரி கதைக்கிறியள்.

  எனக்கு ஒன்டு மட்டும் விளங்கேலை. புலிகள் இருக்கும் போதும் அவங்களை குறை சொன்னீங்கள். இல்லாத போதும் அவங்களை குறை சொல்றியள். எங்கட நோக்கம் தான் என்ன?
  இந்தப் பிளைப்பு பிளைக்கிறத விட உங்கட அ… வச்சு தொழில் செய்யலாம்.

 7. வணக்கம்
  இதில் பின்னூட்டமிட்டிருப்பது தமிழகத்தின் பேராசிரியர் தமிழவனா?

  இணையத்தினர் அதை தெளிவு படுத்துங்கள். அறியப்பட்டவர்களின் பெயர்களில் பின்னூட்டம் வருகையில் அதைச் சற்று வேறுபடுத்திக் காட்டலாம்.

  ( மார்க்ஸ் என்று சொல்லாமல் முன்னால் ‘அ’ போட்டு எவ்வாறு மற்றொருவரைச் சொல்கிறார்களோ அதே போல…(அதற்காக அல்-மார்க்ஸ் என்று பொருள் கொள்ளவேண்டாம்.))

 8. தமிழன் தனக்குத் தெரிந்த பிழைப்பைத் தன்னோடு வைத்துக் கொள்ளட்டும். விவாதங்கள் கொஞ்சம் பண்பாக நடத்தப்படாவிட்டால் இந்த இணையத்தளமும் இயக்கங்களின் அரசியல் மாதிரித் தான் சீரழிந்து போகும்.

  புலிகளின் தவறுகளை மட்டுமல்லாது முழு விடுதலைப் போராட்டத்தின் சரி-பிழைகளையும் வெளிவெளியாகப் பேச நாம் ஆயத்தமில்லை என்றால் இனிப் போராட எதுவுமே இராது போகும்.

 9. வணக்கம்,
  நண்பர் ராபெல் தங்களுக்கு ஏன்? இது போன்ற ஒரு சந்தேகம், நாம் இங்கு குறிப்பிடப்படுகிற விடயங்கள் குறித்து விவாதிப்போம் மற்றவை ஆட்கள் தெரிந்து இங்கு ஏதேனும் தனித்த விமர்சனங்கள் எமக்குத்தேவையா? என்ன? ஆக்கப்பூர்வமாக அவசியமானதை பேசுவோம் தோழரே!
  நன்றி!

 10. தமிழவன்,
  //தாங்கள் கூறியதெல்லாம் சரிதான். அதென்ன தாங்களும் புலிகளின் மீது எல்லோரும் சொல்லும் அந்த வழமையான சனநாயக மறுப்பு, ஆயுத மோகம், குழு நலன் சார்ந்து இப்படியே அடுக்குகிறீர்களே, புலிகள் என்ன அகிம்சாவாதியோடும், மானிதாபிமானியோடுமா சண்டையிட்டார்கள்.//

  கட்டுரையாளர் புலிகளின் அரசியல் குறித்துத் தான் பேசுகிறார். அந்த அரசியலை நீங்கள் ஏற்றுக்கொண்டால் காரணதை முன்வையுங்கள். தவிர புலிகளை வெறுமனே நியாயப்படுத்தாதீர்கள். புலிகளால் காத்தான் குடியிலும் யாழ்ப்பாணத்திலும் கொல்லப்பட்ட முஸ்லீம்களின் ஆவியும் வன்னியில் புலிகளால் மடுமல்ல அரசால் கொல்லப்பட்டவர்களின் ஆவியும் உங்களை உறக்கத்தில் வந்து உலுப்பும்.

 11. புலிகளின் மீது குற்றச்சாட்டுகள் இருப்பது உண்மையே. மறுக்கவில்லை ஆயினும் இத்தகைதோர் இழிநிலைக்கு, மக்களின் அவல்ங்களுக்கும், தன்னெழுச்சியான ஓர் ஆயுதப்போராட்டத்திற்கும் உந்துதலாய் இருந்து இன்றளவிலும், ஒரு சார் மக்களின் உரிமைகளை மறுத்து பேரினவாதம் பேசி தொடர்ந்து வரும் அரசுகள்தான் முதல் குற்றவாளி என்பது என் வாதம்.

 12. THAMILAVAN MAKING A POINT AND HE HAS A POINT.WHY CANT WE THINK LIKE HIM.WHEN THINKS HAPPEN AGAINST OUR WILL WE CANT CHANGE THE CIRCUMSTANCE DONT WE?SAY SOMETHING THAT NEED TO BE CONTRIBUTE AND HELP FOR TAMILS.NOT JUST SOMETHING YOU WANT TO SAY.

 13. அரசு குற்றவாளியா இல்லையா என்ற விவாதம் இங்கு நடக்கவில்லை. அதற்கானவர்கள் அரசாங்கத் தரப்புக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அவர்கட்கான ஏடுகள் உள்ளன (புதுவிசை உட்பட). அவர்களே இணையத்தளங்கள் நடத்துகிறார்கள். அரசங்கக் காசில் பலதும் செய்கிறார்கள்.

  இது வேறு விடயம்.

  விடுதலைப் போராட்டம் என்ற பேரில் தமிழ் மக்கள் படுகுழியில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அது ஏன் எப்படி என விசாரிப்பதைத் தடுக்கிற விதமாகவே சில குறுக்கீடுகள் உள்ளன.

  தவறு புலிகளுடையது மட்டுமல்ல. அது தமிழ்த் தேசியவாதத்தின் வரலாற்றிலிருந்து தொடங்குகிறது.
  இதைப் புலி ஆதரவு – புலி எதிர்ப்பு என்ற விதமாகக் குறுக்குவது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிய ஆக்கமான சிந்தனைகட்கு உதவாது.

 14. தோழமையுடன் சிவா,
  உங்கள் கருத்துக்கள் உண்மையானவையே ஆனால், இன்று நாம் வாழ்ந்து கொண்டிருப்பது தேசியங்களுக்கான காலகட்டமா? இனக்குழுக்களின் அடையாளங்கள் குறித்த அடையாளம் என்பது வேறொரு அடிப்படையில் ஆராயப்பட வேண்டுமா என்பதெல்லாம் புதிய கேள்விகள். ஸ்டாலினின் புகழ் பெற்ற வரைவிலக்கணத்தைப் பாருங்கள் அவர் அந்த வரையறைக்கான முடிபிற்கு வரவதற்கு முன்னதாக ஒரு தர்கீக ஆய்வை முன்வைக்கிறார். அவ்வாய்வானது இன்றைய சூழலின் சமூக சக்திகளுடனும், வர்க்க ஒழுங்குடனும் எங்காவது பொருந்துகிறதா? ஆக, அவரால் தெளிவாக முன்வைக்கப்பட்டிருக்கும் ஒரு வர்க்க ஆய்வானது இன்று எவ்வகையிலும் பொருந்துவதாய் இல்லை. எனவே தேசியம் என்றால் என்ன? முதலாளித்துவம் உருவான போது உருவான தேசியச் சூழலா இன்று காணப்படுகிறது? அப்போதெல்லாம் நிகழ்ந்தவற்றைப் பாருங்கள், அச்சூழலில் மக்களின் நகர்வுகளும் இடப்பெயர்வுகளும் நகரங்களை நோக்கியதாக அமைய, மக்களிடையே மறுதலையான ஒரு இணைப்பு உருவாகிறது அதுவே தேசியம் எனப் பெயரிடப்பட்டது. அத்தேசியம் தேசங்களை உருவாக்க, அத் தேசங்களின் ஆதிக்க சக்திகளாக தேசிய முதலாளிகள் உருவாகினர். இன்று அத்தேசங்களை உருவாக்கும் தேசிய முதலாளிகளும் இல்லை. ஆக, தேசியம் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள். இன்று தேசியம் என்பதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன?

 15. நாதன்:
  தேசிய இனப்பிரச்சனை ஐரோப்பியச் சூழலிலும் கொலனிய உலகிலும் இருந்ததற்கும் இன்று நவகொலனிய உலகில் இருக்கிறதற்கும் இடையில் நீங்கள் சொல்வது போற் பாரிய வேறுபாடுகள் உள்ளன.
  ஸ்தாலினின் வரைவிலக்கணம் இன்றும் தேசம்; தேச அரசு என்பனவற்றுக்கு அடிப்படையிற் சரியானது என்றாலும்; அதை மூர்க்கத்தனமாகப் பிரயோகிப்பது தவறு.

  இலங்கை உட்படப் பல இடங்களில் இன்றைய தேசிய இன ஒடுக்கல் நவகொலனிய ஓடுக்கலுக்கு உட்படும் ஒரு தேசிய இனம் நவகொலனியவாதிகளின் உடந்தையுடன் பிற தேசிய இனங்களை ஓடுக்குவதாக உள்ளது.எனவே இதை எவ்வாறு கையாளுவது என்பதே நம் முன்னுள்ள கேள்வி.
  இச் சூழலில் தேசியவாதம் சில வர்க்க நலன்கள் சார்ந்தே விருத்தி பெறுகிறது. இத் தேசியங்களாற் பேசப்படும் பிரச்சனைகளும் பேணப்படும் நலன்களும் வெவ்வேறு தன்மையானவை.
  தமிழ் சிங்கள முஸ்லிம் மலையகத் தமிழ்த் தேசியவாதங்கள எந்த நலன்கள் சார்ந்து முன்னெடுக்கப்படுகின்றன என்று பார்த்தால் முன்னிலை வகிக்கும் தேசியத்தின் வர்க்கத் தன்மை தெளிவாகும்.
  தமிழ்த் தேசியம் ஏன் இன்னமும் மேற்குலகின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறது என்பதும் வர்க்க நலன் சார்ந்த கேள்வியே.

  ஒவ்வொரு தேசியமும் தனது வர்க்க அரசியலாலும் வரலாற்றாலும் தன் வடிவை அடைகிறது. அதற்கு நிரந்தரத் தன்மை இல்லாமையையும் இலங்கை வரலாற்றிலேயே கண்டுள்ளோம்.

  இலங்கையில் மூன்று தமிழ்ப் பேசும் தேசிய இனங்களை மார்க்சிய லெனினியர்கள் பல ஆண்டுகள் முன்னரே எடுத்துரைத்துள்ளனர். அது எப்படி இயலுமானது?
  ஸ்தாலினின் வரைவிலக்கணம் வரலாற்று இயங்கியல் வழிப்பட்டது. அதை வரலாற்று இயங்கியல் வழியில் விருத்தி செய்யலாம். அதைத் தான் உலகெங்கும் மார்க்சிய லெனினியர்கள் செய்கின்றனா.

 16. விஜயகுமாரன். தங்களது கோபம் நியாயமானது. கருத்துக்கள் சிறப்பானவை. “பேரினவாதத்ற்கு எதிரான ஈழமக்களின் போராட்டம் மீண்டும் வீறுகொண்டு எழும்” எனும் கூற்றில் சிறிய திருத்தம். “பேரினவாத அரசியலுக்கும் ஆதிக்கத்திற்கும் எதிரான மக்களின் போராட்டம் வீறுகொண்டு எழவேண்டும் எழும்”  
  தொடர்ந்து இடம்பெறும் விவாதம் மிகமிகப் பிரயோசனமானது. தமிழன் என்பவரின் குறிப்பு மிகக் கேவலமாக உள்ளது. அதை இணையத் தளத்தின் கண்காணிப்பாளர்கள் அகற்றிவிடுதல் நன்று.
  -செஞ்சூரியன்-

Comments are closed.