புலம்பெயர்ந்த பெண்களின் பிரச்சினைகளும், உலகமயமாக்கலின் இருண்ட பக்கமும்.

 

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் அண்மையில் வெளியிட்டிருக்கும் உலக சனத்தொகை நிலைவர அறிக்கை இன்று உலகளாவிய இயல்பு நிகழ்வாகிவிட்ட புலம்பெயர்வில் பெண்கள் எதிர்நோக்குகின்ற நெருக்கடிகளை இனங்கண்டு விளக்கியுள்ளதுடன், அவர்களின் நிலைமையை மேம்படுத்துவதற்கு பயனுறுதியுடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கங்களிடம் கோரிக்கை விடுத்திருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. உலகெங்கிலும் புலம்பெயர்ந்தவர்களின் தற்போதைய எண்ணிக்கை 19 கோடி 50 இலட்சமாகும். இதில் சுமார் 10 கோடி பேர் அதாவது, அரைவாசிப் பேர் பெண்களாவர். இவர்களில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கின்ற வாழ்க்கை நிலைவரம் உண்மையில் வெளிச்சத்துக்கு வருவதில்லை. இவர்களின் வேலைகள் அநேகமாக அங்கீகரிக்கப்படுவதில்லை. புலம்பெயர் பெண்கள் சொந்த நாடுகளிலும் சென்ற நாடுகளிலும் குடும்பங்களுக்காகவும் சமூகங்களுக்காகவும் பெரும் பங்களிப்பை வழங்கிவருகின்ற போதிலும் அவர்கள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்படுகிறார்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள். ஆண்களுடன் ஒப்பிடுகையில் புலம்பெயர் பெண்கள் தங்களது சம்பாத்தியத்தில் கூடுதலான பங்கைச் சொந்த நாடுகளுக்கு அனுப்பிவைப்பதாக ஆய்வுகளில் இருந்து அறியக்கூடியதாக இருக்கிறது.தங்களது சொந்த நாடுகளில் பெறக்கூடியதாக இருப்பதைவிடக் கூடுதல் சம்பளத்துக்காகவே ஆண்களும் பெண்களும் வேலை தேடிப் புலம்பெயருகிறார்கள். உலகளாவிய ரீதியில் புலம்பெயர்பவர்களில் அரைவாசிப் பேர் பெண்களாக இருக்கின்ற போதிலும், இலங்கையைப் பொறுத்தவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்பவர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் பெண்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் என்று சுமார் 15 இலட்சம் இலங்கையர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் இலங்கையில் இருந்து வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்காக 4 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான புலம்பெயர்வு கணிசமான அளவுக்குப் பெண்கள் மயமாவது இயல்பாகவே பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது. எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினராகப் பெண் தொழிலாளர்களே விளங்குகிறார்கள். அடக்கிவைத்து வேலைவாங்கும் போக்கு, படுமோசமான சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு அவர்கள் ஆளாகவேண்டியிருக்கிறது. சட்டரீதியான பாதுகாப்பு ஏற்பாடுகளின் செயற்பாட்டுப் பரப்பெல்லைக்குள் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படாத ஒரு சூழ்நிலை பொதுவில் காணப்படுகிறது என்று சர்வதேச தொழில் ஸ்தாபனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று உலகளாவிய ரீதியில் ஆயுதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு அடுத்தபடியாக ஆட் கடத்தல் பெரும்பணம் சம்பாதிக்கக் கூடிய மிகப்பெரிய மூன்றாவது சட்டவிரோத தொழில் துறையாக விளங்குகிறது.பெண்களுக்கு எதிராகப் பரவியிருக்கும் பாரபட்சமும் வன்முறையும் முறைப்படியாகபாதுகாப்பாகப் புலம் பெயருவதற்கான வாய்ப்புக்களை மட்டுப்படுத்தும் வகையில் அமைந்த குடியகல்வுக் கொள்கைகளும் எல்லை கடந்த ஆட்கடத்தல்களைத் தூண்டுகின்றன என்று உலக சனத்தொகை நிதிய அறிக்கையில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. ஆட்கடத்தல் தொழில்துறை பாலியல் துஷ்பிரயோகத்துடனும் படுமோசமான சுரண்டலுடனும் பின்னிப்பிணைந்திருக்கிறது என்பதுடன் பலர் தங்கள் விருப்பத்துக்கு மாறாக பாலியல் தொழில்களில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டு, பெரும்பாலும் பாலியல் அடிமைகளாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லை கடந்த ஆட்கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் அண்மைக் காலத்தில் அதிகரித்து வந்திருக்கின்ற போதிலும், இந்த மோசமான குற்றச்செயலை முற்றாக நிறுத்துவதற்கு இயலாத அளவுக்கு அரசியல் அனுசரணையுடனான சட்டவிரோதக் கும்பல்கள் உலக நாடுகளெங்கும் செயற்படுகின்றன என்பதை கவனிக்க தவறக்கூடாது. புலம்பெயர்ந்த பெண்களின் தேவைகளும் பிரச்சினைகளும் குறைபாடுகளும் உலகமயமாக்கலின் இருண்ட பக்கத்தை மாத்திரமல்ல, தொடர்ச்சியான வறுமை, பால் சமத்துவமின்மை, துஷ்பிரயோகம் ஆகியவற்றைக் கோடிட்டுக் காட்டுவதாகவும் உலக சனத்தொகை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. எனவே புலம்பெயர்ந்த பெண்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய பாதையை வகுப்பதற்கான செயற்பாடுகளில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்.

( Tamil Editorial Thinakkural)