புத்தகக் கண்காட்சியில் – இலங்கை தேசிய இனப் பிரச்சினையும் தீர்வுக்கான தேடல்களும் – அறிமுகம்

“இச் சிறு நூலின் ஒரு நோக்கம் இலங்கையின் இனத்துவ, தேசிய இன உணர்வுகளின் வரலாற்று விருத்தியையும் முரண்பாடுகளின் விருத்தியையும் அவை தேசிய இன முரண்பாடாகவும் ஒடுக்குமுறையாகவும் போராகவும் மாறியதையும் கோடிட்டுக் காட்டுவதாகும். இனத்துவத்தினதும் வர்க்க நலன்களினதும் கோட்பாடுகளினதும் வகிபாகங்களை அடையாளம் காணுவது இன்னொன்றாகும். மேலும், இந்நூல் தேசிய இனப் பிரச்சினையின் தீர்வு பற்றி வெவ்வேறு வர்க்கங்களும் கோட்பாடுகளும் சார்ந்த அணுகுமுறைகளைப் பற்றிப் பேசுகிறது. அப் பிரச்சினையைப் போராக்கிப், போரை நீடிப்பதற்கு அந்நிய ஆதிக்க சக்திகள் வழங்கிய பங்கையும் தமது நலன்கட்கு உதவுமாறான தீர்வுகளைப் பகிர்ந்தமையையும் பற்றியும் பேசுகிறது.”

“இலங்கையின் இன்றைய பிரதான முரண்பாடு தேசிய இனப் பிரச்சினையேயாயினும், அது வர்க்க நலன்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்ததையும் அதைப் போராக்கிப் போரை நீடிப்பதில் பல்வேறு அதிகாரக் கும்பல்களின் செயற்பாடு இருந்ததையும் நாம் மனதிற் கொள்ள வேண்டும். தோற்றத்தில், போரானது சிங்கள ஆதிக்கத்திற்குட்பட்ட இலங்கை அரசாங்கத்தின் ஆயுதப்படைகட்கும் தமிழ்த் தேசிய இனம் முழுவதினதும் பிரதிநிதிகளென உரிமை கோரிவந்த தமிழீழ விடுதலைப்புலிகட்குமிடையிலானது. எனினும், தேசிய இனப் பிரச்சினைக்கான ஏற்கத்தக்க தீர்வு தேசிய இனப் பிரச்சினையின் ஒரு பகுதியாகவுள்ள, ஆனால் குறைவாகவே அறியப்பட்டுள்ள முரண்பாடுகளையும் கணக்கிற் கொண்டாக வேண்டும்.”

“இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை பற்றியும் சிறு இடை நிறுத்தல்களுடன் கால் நூற்றாண்டு காலமாக நடந்த ஒரு போராக அதன் வெளிப்பாடு பற்றியுமான உரையாடல்கள், பிரச்சினையையும் அதன் வரலாற்றையும் பற்றிய அகச்சார்பான விளக்கங்களாலும் குறுகிய குறிக்கோள்களாலும் வழிநடத்தப்பட்டுள்ளன. குறிப்பாகச் சிங்களப் பேரினவாதிகளாலும் அதனினும் குறைந்தளவுக்குப் பிறராலும் வரலாறு அகச்சார்பாக விளக்கப்பட்டமை, பிற சமூகங்கள் பற்றிய நோக்கையும் தேசிய இனங்களினதும் தேசிய சிறுபான்மையினங்களதும் இடையிலான சமூக உறவுகளைத் தீர்மானிப்பதில் பெரும் பங்களித்துள்ளது.”

“அதேவேளை, இனக்குழுக்களதும் தேசிய இனங்களதும் அடையாளங்களின் உருவாக்கத்தில் வர்க்கம், சாதி, பிரதேசம் என்பனவற்றின் பங்களிப்பையும் அடையாளம் காணுவது அவசியம். இனத் “தூய்மை” என்கிற புனைவும் இனத்துவ அடையாளங்களை வலிமைப்படுத்துவதில் ஒரு பங்காற்றியுள்ளது. அத்துடன் இந்தத் தீவில் முதல் முதலாக வந்து குடியேறியோர் யார் என்பதைப் பற்றிப் பெருமளவும் புனைவுகளின் அடிப்படையிலேயே உரிமை கோருதல்கள் அமைந்துள்ளன. அவற்றின் அடிப்படையில், “உண்மையான மண்ணின் மைந்தர் நாமே” என்றவாறான பிரகடனங்களும் பல வழிகளிலும் பேரினவாத நோக்குக்கட்கே ஊட்டமளித்துள்ளன.”

“தேசிய இனப் பிரச்சினையின் தீர்வு, பண்டைய வரலாற்றையோ முன் வரலாற்றையோ ஒட்டிய சர்ச்சைகளையன்றி, அவசரமான பிரச்சினைகளைப் பற்றியது. எனவே, காலப்போக்கில் இனத்துவ அடையாளங்கள் உருவாகி, வடிவம் பெற்று, அரசியல் வகைப்பாடுகளாகக் கட்டிறுக்கம் பெற்றமையையும் விளங்கிக் கொள்ள வேண்டும். பிரித்தானிய ஆட்சியின் கீழ் தேர்தல் அரசியல் அறிமுகமானதும் மேட்டுக்குடிகளிடையே இருந்து வந்த தொடக்க காலப் போட்டா போட்டி போன்ற சமூக பொருளியல் தோற்றங்களும் வெவ்வேறு இனக் குழுக்களிடையிலான உறவை எவ்வாறு நெறிப்படுத்தின என்பதை ஆராய வேண்டும்.

பிரச்சினையின் இயல்பை விளங்கிக் கொள்ள இவை உதவும்.

எனவே நூலின் முதற்பகுதி, சமூகங்களிடையிலான உறவும் மேட்டுக் குடிகளிடையிலான போட்டா போட்டியும் இன மோதல்கட்கு வழிகோலிய பின்னணியில், இனத்துவ அடையாளங்கள் விருத்தி பெற்ற விதத்தைப் பற்றியது.

அடுத்த பகுதி, சிங்கள தமிழ் தேசிய இனங்களிடையிலானதும் 1983ம் ஆண்டின் நெருக்கடிக்கு இட்டுச் சென்றதுமான முரண்பாட்டை மையமாகக் கொண்டது. அதற்கடுத்த பகுதி தேசிய இனப் பிரச்சினை போராக்கப்பட்ட காலந் தொட்டுச் சமகால நிலைமை வரையிலான ஒரு ஒட்டுமொத்தமான பார்வையை வழங்குகிறது.

நான்காவது பகுதி தேசிய இனப் பிரச்சினையையும் அதன் தீர்வையும் பற்றிய வெவ்வேறு அணுகுமுறைகளின் மீதான ஒரு பார்வையாகும். இறுதிப் பகுதி சுயநிர்ணய உரிமை என்ற நியதியை அதன் மிகப் பரந்துபட்ட அடிப்படையில் பயன் படுத்துகிற நோக்கில் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வாதங்களை முன்வைக்கிறது.”

மனிதவாழ்வை மறுக்கும் முதலாளித்துவக் கொடுங்கோன்மைக்கு
மார்க்சிய-லெனினியமே ஒரே மாற்று.

சென்னை புத்தகக் கண்காட்சி
(டிச.30 – சன.10 வரை, ஜார்ஜ் பள்ளி,பச்சையப்பன் கல்லூரி எதிரில்)

கீழைக்காற்று விற்பனை அரங்கு, எண் 64-65

◦உரைவீச்சுக்களாய், இசைப்பாடல்களாய், அரசியல் போராட்டக்காட்சிப் பதிவுகளாய், ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளின் ஒலி,ஒளி வட்டுகள், பெரியார், அம்பேத்கார் படைப்புகள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான அனைத்து ஆக்கங்களும் கீழைக்காற்றில் கிடைக்கும்.