புதிரை வண்ணார் மக்களின் முன்னேற்றத்துக்காக நலவாரியம் அமைப்பு!

50புதிரை வண்ணார் சமுதாயத்தினருக்கு என தனியாக நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாரியத்தில் அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 25 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை செயலாளர் விஷ்வநாத் ஷெகாவ்கர் பிறப்பித்துள்ளார்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் ஒரு சிறு பிரிவினராக இருப்பவர்கள் புதிரை வண்ணார்கள். அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருமணம், ஈமச்சடங்கு போன்றவற்றை நடத்தி வைப்பது, அவர்களின் துணிகளை வெளுப்பது ஆகிய பணிகளைச் செய்கின்றனர்.

“பொருளாதார, சமூக, கல்வி நிலைகளில் மிகவும் அடித்தளத்தில் வாழ்ந்து புதிரை வண்ணார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும்’ என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நலவாரியம் அமைப்பதற்கான உத்தரவை அரசு வெளியிட்டுள்ளது. அதுகுறித்த விவரம்:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர், நிதித் துறை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர், தொழிலாளர் துறை செயலாளர், சுகாதாரம், பள்ளிக் கல்வித் துறைகளின் செயலாளர்கள், ஆதிதிராவிடர் நலத் துறை ஆணையர் உள்ளிட்ட 11 பேர் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எம்.எல்.ஏ.க்கள்… எம்.எல்.ஏ.க்கள் மா.அன்பழகன் (பழனி), கோவை தங்கம் (வால்பாறை), து.ரவிக்குமார் (காட்டுமன்னார் கோயில்) உள்ளிட்ட 13 பேர் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அலுவல் சாரா உறுப்பினர்களுக்கு பயணப்படி மற்றும் தினப்படி பெற வழியுண்டு.

என்னென்ன திட்டங்கள்… “”புதிரை வண்ணார் சமுதாயத்தைச் சேர்ந்த அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு தங்கு தடையின்றி கல்வி அறிவு பெற வசதியாக ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் செயல்படும் விடுதிகளில் புதிரை வண்ணார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்தப் பாகுபாடும் காட்டக் கூடாது. விண்ணப்பித்த அனைவரையும் விடுதியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தாட்கோ மூலம் வழங்கப்படும் சிறு கடன்கள் வழங்கவும், சலவைத் தொழில் சார்ந்த கடைகள் நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு தொழில்களுக்கான பயிற்சி வகுப்புகளை “தாட்கோ’ மூலம் நடத்தி தனியாக தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாரியத்தின் மூலம் இந்த மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்” என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிரை வண்ணார் இன மக்களின் முன்னேற்றத்துக்காக அரசு மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்கள் மற்றும் உதவிகள் சிறப்பான முறையில் தங்கு தடையின்றி கிடைப்பதை கண்காணிக்கும் வகையில் இந்த நலவாரியம் செயல்படும்.

One thought on “புதிரை வண்ணார் மக்களின் முன்னேற்றத்துக்காக நலவாரியம் அமைப்பு!”

Comments are closed.