புதிய தொல்பொருள் ஆய்வுச் சட்டத்துக்கு வைகோ எதிர்ப்பு

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: புதிய சட்டத்தின்படி, பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னத்தில் இருந்து ஆயிரம் அடி வரை எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ள அனுமதி இல்லை. மீறுவோருக்கு ரூ. 1 லட்சம் அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். குடும்பத்தினரின் எண்ணிக்கை அதிகரித்து இட நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் மூதாதையர் வாழ்ந்த வீட்டை விரிவாக்கம் செய்யவோ, தாழ்வாரம், கழிவறை போன்றவையோ அமைக்கக் கூடாது. மீறினால் வீட்டின் உரிமையாளரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தண்டிக்கப்படுவார்கள். தொல்லியல் சின்னம் அமைந்துள்ள பகுதிகளில் புதிதாக மின் இணைப்பு வழங்கப்படமாட்டாது. புதிய தங்கும் விடுதிகள், பொழுதுபோக்கு மையங்கள் அமைக்க முடியாது என்று புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் வரலாற்று சின்னங்கள் அனைத்தும் ஆறுகால பூஜைகள், மூன்று கால பூஜைகள் நடைபெறும் கோயில்கள் ஆகும். இந்த ஆலயங்களைச் சுற்றி தேரோடும் ராஜ வீதிகளும், வணிக அங்காடிகளும், பூங்காக்களும் மக்களின் வாழ்விடங்களாக இருந்து வருகின்றன. சுதந்திர இந்தியாவில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கின்ற வகையில் இச்சட்டம் அமைந்துள்ளது. இதனை எதிர்த்து மக்கள் போராட வேண்டும். மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இச்சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.