புதிய உலக ஒழுங்கு விதி – சாம்பல் மேடுகளிலிருந்து.. : சபா நாவலன்

genocide

பாப்பாண்டவரிலிருந்து   “நோபல்  விருது”  ஒபாமா வரை  புதிய ஒழுங்கு விதி குறித்து நாளாந்த்தம்  துயரடைந்து  அறிக்கை விடுக்கிறார்கள்.  உலகின் செல்வாக்கு மிக்க  பொருளியலாளர்கள்  பொருளாதார   மாற்றுக் கொள்கை குறித்து  விவாதங்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.  ஒரு குறித்த  மூன்று  ஆண்டுகளுக்கு மட்டும் தற்காலிகமாக  ஐரோப்பிய – அமரிக்கப் பொருளாதாரம் சரிந்து  விடாமல்  பாதுகாக்கப் பட்டிருக்கிறது.

உலகம் புதிதாக ஒழுங்கமைக்கப்படுவது இது முதல் தடவையல்ல. ஜோன் மேனாட் கீனெஸ்(John Maynard Keynes) என்ற பொருளியலாளர் முதலாளித்துவத்தைப் பாதுகாக்க 1940 களில் முன்வைத்த கோட்பாடுகளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட உலகப் பொருளாதாரம் 1970 களில் மறுபடி நெருக்கடிக்கு உள்ளான போதே நவ-தாராளவாதமும் (Neo-Liberalism) அதன் புதிய பரிணாமமான உலகமயமாதலும் 70 களின் பின்னான ஒழுங்கு நிலையில் முன்னிடம் வகித்தன.

90 களில் மீண்டும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உலக மயமாதலைத் தீவிரப்படுத்தும் தீர்வினை முன்வைக்க, அதன் இன்றைய அமைப்பியல் முதலாளித்துவச் சரிவு வரை உலகை நகர்த்தி வந்திருக்கிறது.

2009 இல் சற்றேறக்குறைய நூற்றைம்பது வருடங்களின் பின்னர் கார்ல் மார்க்சின் மூலதனம் என்ற நூலின் மூன்றவது பகுதி, கார்ல் மார்க்சை கோமாளியாகச் சித்தரித்து வந்த உலக ஏகபோகங்களின் தலைவர்களை அவர் குறித்து மீண்டும் பேச வைத்திருக்கிறது. மின்னியலையும் மார்க்சையும் நிராகரித்து அறிவுலகம் புதிய அரசியலில் நிலைபெற முடியாது என்பது உணர்ந்து கொண்டுவிட்டார்கள் இவர்கள்.

1993 ஆம் ஆண்டு, இந்தவருட G20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது போல, அன்றைய பொருளாதார நெருக்கடியை ஆராயும் நோக்கோடு 66 நாடுகளை இணைத்து 1940 களில் ஏற்பட்ட புதிய ஒழுங்கமைப்புக் குறித்து ஆராய்ந்தனர். புதிய வல்லரசுகளும் புதிய அணிகளும் உருவாக வழிவகுத்த இந்த மாநாடு, எந்த முடிவிமின்றி முறிவடைந்தது.

இதன் பின்னான புதிய பொருளாதாரப் பகைப்புலத்தில் முளைவிட்டவர் தான் ஜேர்மனியச் சர்வாதிகாரியான ஹிட்லர். 2000ம் ஆண்டுகளின் புதிய ஒழுங்கு விதிகள் தனது நவீன மனிதப்படுகொலையைத் திட்டமிட்டு நிறைவேற்றிக் கொண்டிருப்பது போலவே அன்றைய ஒழுங்கு விதிகளின் முதல் மனிதப்படுகொலைகள் யூத அப்பாவிகள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டது.

40 களின் ஆரம்பத்தில் அமரிக்க ஆதரவுடன் கீனேசின் முன்மொழிவு வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட, சர்வதேச நானய நிதியம்(IMF), உலக வங்கி(World Bank), உலக வர்த்தக மையம் என்பன  அமரிக்க தலைமையிலான உலக சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்தது.

1970 களின் முன் பகுதிகளில் இந்த அமைப்பு முறை மறுபடி ஒருமுறை நெருக்குதலுக்கு உள்ளாக, மார்க்சியமும் அது தொடர்பான உரையாடல்களும் புத்துயிர் பெற்றன.

1975 இல பாரிசில், ஐந்து பணம்படைத்த நாடுகளைக் கொண்ட உச்சி மாநாடு நிகழ்வு பெற அங்கு இன்னுமொரு தடவை புதிய உலக ஒழுங்கு விதி குறித்துப் பேசப்பட்டது. அப்போது தான் இன்று நெருக்கடிக்கு உட்பட்டிருக்கும் உலக மயமாதல் தொடர்பான உரையாடல்களும் கருத்தியலும் உருவானது.

உலகமயமாதல் ஏற்படுத்திய அமைப்பியல் நெருக்கடி இன்று ஆசியப் பொருளாதாரத்தை உருவாக்கியிருக்கிறது.

முதலாளித்துவத்தின் அடிப்படை என்பதே மாறும் காரணியான (variable factor) இலாபத்தை அதிகரித்தல்(maximising profit) என்பதலிருந்தே ஆரம்பிக்கிறது. உண்மையில் இந்த மாறியின் பண்பானது அதிகரிக்கும் நிலையில் இருந்தால் மட்டுமே இயங்கும் முதலாளித்துவ அமைப்பு(functioning capitalism) நிலை கொள்ள முடியும்.

இலாபத்தின் மாறும் தன்மை என்பது இயங்கும் முதலாளித்துவத்தின் பல காரணிகளில் தங்கியுள்ளது.

1. உழைப்புச் சக்தியும் அதன் அடிப்படையில் பணத்தை மூலதனமாக மாற்றும் நிகழ்வுப் போக்கும்.

2. உற்பத்தி சக்திகளின் இன்னொரு பிரதான பகுதியான தொழில் நுட்பத்தின் வளர்ச்சி.

3. வேறுபட்ட நலன்களைக் கொண்ட உற்பத்தி உறவுகளிடையேயான மத்தியத்துவம்.

இலாபத்தை அதிகரிக்கும் இந்த நிகழ்வுப் போக்கானது இயங்கும் முதலாளித்துவத்தை உறுதி செய்கிறது. கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த காலப்பகுதியிலான முதலாளித்துவம் என்பது தொழிலாளிகளின் உழைப்பை முழுவதுமாக உறிஞ்சி அத்தொழிலாளிகளை “இழப்பதற்கு ஏதுமில்லாத” வர்க்கமாக மாற்றியிருந்தது.

 அவர் வாழ்ந்த சமூகத்தின் வர்க்க உறவுகளின் அடித்தளம் இதுவாகத்தான் அமைந்திருந்தது. அங்கு முதலாளிகள் தொழிலாளிகள் என இரண்டு வர்க்க சமூகங்கள் உருவாகியிருந்தன. இதனால் தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் முதலாளித்துவம் முரண்பாடுகளைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது என்று குறிப்பிடுகிறார்.

 

ஆனால், 1940 களின் பின்னர் இந்தத் தெளிவான முதலாளி-தொழிலாளி என்ற முரண்பாடு திட்டமிட்டுச் சீர்குலைக்கப்பட்டது.புதிய முகாமைத்துவ வர்க்கம்(managerial class) ஒன்று திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.

புரட்சிக்கான சூழ்லில் பின்னடைவை ஏற்படுதும் நோக்கோடு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இச்சிக்கலான முதலாளி-தொழிலாளிக்கு அப்பாலான உறவு என்பது இரண்டு புதிய பண்பியல் வேறுபாடுகளைக் கொண்ட வர்கங்களை உருவாக்கியது.

1. உற்பத்தித் திறனற்ற வர்க்கம்

2. உற்பத்தித் திறனுடைய உழைபுடன் ஈடுபடும் வர்க்கம்.

இதில் உற்பத்தித் திறனற்ற வர்க்கமான முகாமைத்துவ வர்க்கமானது, பல அடுக்குகளைக் கொண்டதும் அதனிடையேயான உள்முரண்களைக் கொண்டதுமான வர்க்கங்களாக உருவானது.

மூலதனத்தின் சொந்தக்காரானின் நேரடியான கட்டுப்பாடுகள் என்பது இம் முகாமையாளர்களினூடாக(Managers) ஏற்படுத்தப்பட்டது.

இவர்களிடையேயன சிக்கலான உள்பிரிவுகள் சாதாரண லிகிதர் ஆபீஸ் பையன் என்பது வரை புதிய உற்பத்தித் திறனற்ற வர்க்கத்தை உருவாக்கியது. இம் முகாமைத்துவ வர்க்கம் என்பது மத்தியதரவர்க்கத்தை முழுமையாக முதலாளித்துவத்தின் பக்கம் கவர்ந்திழுத்தது மட்டுமன்றி முதலாளி-தொழிலாளி என்ற உறவு முறையை மறைமுகமானதாக்கியது.

இந்த முத்லாளித்துவ ஒழுங்கமைப்பை முகாமைத்துவப் புரட்சியென( The Managerial Revolution) அழைக்கிறார்கள்.

இந்த முகாமைத்துவப் புரட்சியின் தொடர்ச்சியான வளர்ச்சியென்பது மூலதனச் சொந்தக் காரர்களுக்கு முழுமையான முகாமையாளர்களை உருவாக்கும் அதிகாரத்தை வழங்கியது.

 அரசுகளைக்கூட தமது முகாமையாளர்களாகப் மாற்றும் நிலை உருவாகியிருக்கும் இன்றைய சூழலே நாம் இப்போது காண்கின்ற முதலாளித்துவ அமைப்பியல் நெருக்கடி.

அரசுகள் முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் நோக்கோடு கூட பெரும் மூலதனச் சொந்தக் காரர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலையை அடைந்துள்ளன.

முதளாளிகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் அவர்களால் உருவாக்கப்பட்ட உச்ச பட்ச முகாமையாளர்களான ஆளும் வர்க்கத்தை அம்போ என்று கைவிட்டுவிட்டு, தமது மூலதனத்தைக் காவிக்கொண்டு மேலும் அதிக இலாபம் சம்பாதிப்பதற்காக ஆசியாவை நோக்கி நகர்ந்துள்ளனர்.

இவாறு ஆசியாவை நோக்கி நகர்ந்த மூலதனம் தான் சீனாவையும், இந்தியாவையும் ஆசிய வல்லரசுகளாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

மேற்கு வல்லரசுகளின் தோற்றத்தின் வெளிப்பாடான புதிய சிக்கலான உற்பத்தி உறவுகள் உற்பத்தித் திறனற்ற, வங்கிப்பொருளாதாரப் பொறிமுறைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட நாடுகளையே உருவாக்கியிருந்தன.

இந்த மேல் நாடுகளிலிருந்து அதிக இலாபத்தைத் தேடி பண மூலதனத்தை ஆசியாவை நோக்கி கட்டுப்பாடற்ற முதலாளிகள் நகர்த்திக்கொண்டனர்.

70 களின் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னான பொருளாதாரத் தாராளவாதம் என்ற புதிய ஒழுங்கு விதியே இவ்வாறான முழுப்பலம் பொருந்திய உலக முதலாளித்துவத்தை உருவாக்கியது.

பெரும் கோப்ரேட் நிறுவனங்களின் அதிகாரத்தை உலகம் முழுவதும் நிறுவிக்கொண்ட இந்தப் பொருளாதாரத் தாராளவாதம் தான் ஒபாமாவையும், இலங்கையில் ராஜபக்ஷவையும் கூட உருவாக்கியிருக்கிறது.

இந்தப் புதிய உலகப் முதளித்துவத்தின் ஆதிக்கப் பின்புலத்தில் இந்திய மக்களின் எதிர்காலம் துயர் படர்ந்த கோரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

மேற்குலகில் இந்த ஏகபோக முதலாளிகள் உருவாவான ஆரம்பக் காலகட்டங்களில் அந்த முதலாளிகளிடமிருந்து, குறிப்பாக அவர்கள் மூன்றாமுலக நாடுகளில் பெற்றுக்கொண்ட இலாபத்திலிருந்து அறவிடப்பட்ட வரிப்பணத்தில், மேற்கில் வாழுகின்ற வேலையற்றோருக்கும் குறைந்த வருமானத்தை கொண்டோருக்கும் சமூக உதவித் திட்டங்களூடாக உதவிகள் வழங்கப்பட்டன.

பல மேலை நாடுகளில் வேலையற்றோருக்கான உதவித் தொகை அடிப்படைச் சம்பளம் அளவிற்கு உயர்ந்ததாக அமைந்திருந்தது.

இதற்கு அவசியமான வரித்தொகையை உலக கோப்ரேட் நிறுவனங்களிடமிருந்தே முகாமைத்துவத்தை நடாத்தும் அரசுகள் பெற்றுக்கொண்டன. இதனால் இந்நிறுவனங்களின் உற்பத்திச் செலவு சற்று அதிகமாக, இவ்வாறான நிறுவனங்கள் மூன்றாமுலக நாடுகளை நோக்கி நகர, உற்பத்தித் திறனற்ற சமூகம் ஒன்று மேற்கில் உருவாகி வளர ஆரம்பித்தது.

உற்பத்தி அற்றுப்போக வங்கி மூலதனத்தின் கடன் பொறிமுறையே உள்ளூர் உற்பத்தி உறவுகளைத் தீர்மானிப்பதாக அமைந்தது. வங்கி மூலதனமும் கட்டுப்பாடற்ற முதலாளித்துவத்தின் பிடியில் ஆசிய நாடுகளை நோக்கி நகர்ந்து விட இன்றைய மேற்குப் பொருளாதார அமைப்புக சரிந்து விழும் நிலையை அடைந்துள்ளது.

 இவ்வாறான வரிப்பணத்திலிருந்து தப்பித்துக்கொள்ளவே இந்தியா போன்ற நாடுகளை நோக்கி நகர்ந்த பெரும் நிறுவனங்கள், அந்த நாடுகளில் இராட்சத உற்பத்தி முறைகளை அறிமுகப்படுத்துகின்றன.

உற்பத்தி சக்திகளை- அது விவசாயமாகட்டும், தகவற் தொழில் நுட்பமாகட்டும், சேவைத் துறையாகட்டும், நவீன மயப்படுத்துகின்றன. இந்த நவீன மயப்படுத்தலில் வேலையிழந்துபோகும் புதிய வர்க்கமானது,ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை,  எந்த வகையான சமூக உதவித்திட்டங்களையும் பெற்றுக்கொள்ள சாத்தியப்பாடுகளே இல்லை.

உற்பத்தியிலிருந்து அன்னியப்படுத்தப்படும் பெரும்பகுதியான வறிய மக்களுக்கு சமூக நலத்திட்டங்கள் வழங்கப்படுமானால், கோப்ரேட் நிறுவனங்களிடமிருந்து அவை அறவிடப்பட வேண்டும்.

தவிர, வாழ்வதற்கான அடிப்படைத் தொகை சமூக நலத்திட்டமாக வழங்கப்பட்டால், அடிபடைச் சம்பளத் தொகை அதற்கு மேலதிகமானதாக அமைய வேண்டும். ஆக, உழைப்புச் சக்தியின் விலை அதிகரிக்கும். இன்னும் வாழ்க்கைக்கான அடிப்படை வருமானம் நிர்ணயிக்கப்பட வேண்டும். இது ஒரு சுற்றுப் போல உழைப்புச் சக்தியின் விலையும், முதலாளிகளின் இலாபத்தின் மீதான வரித்தொகையும் அதிகரிக்க, கோப்ரேட் நிறுவங்கள் இந்தியா போன்ற நாடுகளை விட்டு வெளியேறும்.

இது மறுபடி ஒரு நெருக்கடியைத் தோற்றுவிப்பதோடு, இன்றைய புதிய ஒழுங்கமைப்பும் ஆசியப் பொருளாதாரமும் சீர்குலைந்து மறுபடி ஒரு அமைப்பியல் நெருக்கடியை (structural crisis) உருவாக்கும்.

ஆக, சமூக நலத்திட்டங்களை  உருவாக்க முடியாத கையறுநிலையில்,  இந்தியா போன்ற முதலாளித்துவ நாடுகள்,  வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வோரை அழித்தொழிப்ப்தை மட்டுமே தீர்வாக முன்வைக்க முடியும்.

இவாறு தான் இரண்டு லட்சம் விவசாயிகள் இந்திய மண்ணோடு மண்ணாகச் சாகடிக்கப்பட்டார்கள். சிங்கூரிலும், நந்திகிராமிலும், லால்காரிலும் இதனால் தான் மக்கள் கொல்லப்படுகிறார்கள்.

இதனால் தான் இவர்களைப் பிரநிதித்துவப்படுத்த முயலும்  மாவோயிஸ்டுக்கள்  தயவு தாட்சண்யமின்றி அழிக்கப்படுகிறார்கள்.

ஒரு புறத்தில் “made in America” பண்பு அழிந்து போக, மறுபுறத்தில் அதன் “முற்போக்குத்” தன்மைக்கு மக்களும் அழிந்து போகிறார்கள்.

அமரிக்க உளவுத்துறை ஆலோசனை மையம் மேற்கொண்ட ஆய்வில், 2020 இல் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சனையே வேலையில்லாத் திண்டாட்டம் என்கிறது.

வேலையில்லாத் திண்டாட்டத்தை  சமூக உதவித் திட்டங்களூடாக,  இந்தியா மேற்கின் வழியில் கையாண்டால் இந்தியாவில் பொருளாதாரமும் மூலதனமும் நிலை கொள்ளாது.

ஆக, எதிர்வரும் ஆண்டுகள் இந்திய “ஜனநாயகம்”  மனித அவலங்களுக்கு மத்தியில், வரலாறுகாணாத சாட்சியின்றிய கொலைகளுக்கு மத்தியில், மனித் இரத்தவாடைக்கு மத்தியில், மேல்-மத்திய தர வர்க்கம் மட்டுமே அனுபவிக்கும் தகமைகொண்ட பொருளாதாரம் ஒன்றை உருவாக்கிக் கொள்ளும்.

இந்தப் பொருளாதாரதின் கோரத்தோடு தாக்குப்பிடிக்க இயலாத அனைத்து மக்கட் பிரிவுகளும் அழிவிற்குட்படுத்தப்படப் போகின்ற புதிய சமூகத்தின் சபிக்கப்பட்ட வர்க்கம்.

மேற்கின் எந்த அதிகாரமும் இக்கொலைகளைக் கண்டுகொள்ளப் போவதில்லை. அதனைத்தான் இலங்கையில், இந்திய அதிகாரம் ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிறது. ஐ,நா சபையிலிருந்து மேற்கின் அனைத்து மனித உரிமைப் பெறுமானங்களும் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருகத் தான் இப்படுகொலைகள் அரங்கேற்றப்படும் என்பது இலங்கையிலும் பின்னர் சிங்கூரிலும் நிறுவப்பட்டாகிவிட்டது.

இவ்வாறு உலகம் தனது புதிய உலக ஒழுங்கை புதிய அதிகார ஒழுங்கு வடிவத்துடன்(New power Configuration) கட்டமைத்துக் கொள்கிறது.

இந்தியாவெங்கும் உருவாகும், மேல் மத்தியதர வர்க்கம், வேலையற்று உற்பத்தித் திறனற்றுப் போகும் மரணத்தின் வாசலுக்கு அனுப்பப்படும் வறிய மக்கள், உலக முதலாளித்துவத்துடன் சரிநிகராக எழுந்து நிற்கும் அதன் பங்காளர்களான இந்திய முத்லாளித்துவம், உடைந்து விழ ஆரம்பித்திருக்கும் நிலப்பிரபுத்துவக் கட்டுமானம், இவற்றை எல்லாம் ஒன்றிணைத்த புதிய ஆதிக்க சக்திகளின் அதிகார ஒழுங்குபடுத்தல் எவ்வாறு அமையும் என ஆய்வுசெய்தலும், அதன் அடிப்படையில் புதிய போராட்டக் கோட்படுகளை எமது சமூகப் புறச் சூழலுக்கு இயைவான அடிப்படையில் உருவாக்கிக் கொள்வதுமே நிகழப்போகிற மனிதப் பேரவலத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும் , ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்குமான முதல் படி நிலையாகும்.

அனுபவ முதிர்ச்சிபெற்ற புதிய ஏகபோக முதலாளித்துவத்தைப் போலவே அதன் உருவக்கமான மனிதர்களும் அதற்கு எதிராக உருவாகின்றார்கள் என்பது மட்டுமே நம்பிக்கை தரும் ஒரே அம்சம். திறந்த விவாதங்களும் புதிய ஆய்வுகளும் எதிர்ப்பு சக்திகளின் குறைந்தபட்ச ஒன்றிணைவும் இன்று எப்போதுமில்லாதவாறு அவசியமானதாயும் அவசரமானதாயும் அமைகிறது.

6 thoughts on “புதிய உலக ஒழுங்கு விதி – சாம்பல் மேடுகளிலிருந்து.. : சபா நாவலன்”

 1. good article; i believe you; keep continue… best wishes to you.

 2. Whatever ‘ism’ it may be,it is tend to fail,if it is not good for the mankind. That is what we are witnessing in present world. Cummunism cannot assure prosperity to people ,it is proved beyond doubt in Russia & China.Whole western world- so called capitalistic giants,who are preaching democracy & world trade,liberalisation of free trade are crumbling due to their policies. Only Eastern,oriental principle could save the world.
  Simple living,living as a family,taking care of elders,savings,contented lifestyle could alone sustain.
  Too much liberty to citizens could also harmful,that is what the west is experiencing.
  People who adopt self dicipline will have no big problem in their life.
  Days are not too far,the world will follow Indian philosophy

 3. இந்தியாவில் இருக்கின்ற புரட்சிகர கூறுகள் என்று மாவோயிஸ்டுகளைத் தான் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அது முற்றும் உண்மையானதே. புதிய சூழலையும் அதற்கு ஏற்ற சமூக அமைப்புகளையும் கருத்தில் கொள்ளாது அழிவை நோக்கியே செல்லுகிறார்கள்.

 4. Yes, I agree wuth you. What i want to remember here is that according to Karl Marx Philosopers have already interpreted the world, our present task is to change it.

 5. ஆம்,நான் முளூமையாக உடன்படுகிறேன், மிகநல் ல கட்டுரை தொடருங்கள். வாள்த்துகள்!

 6. சபா நாவலன்.
  கட்டுரை புதிய விடயங்கள் குறித்து சிந்திக்கத் தூண்டுகின்றது.

  இரண்டாண்டுகளுக்கு முன்பான இந்திய மற்றும் சீனா நாடுகளின் வளர்ச்சி குறித்து —
  மேலைத்தேச – குறிப்பாக அமெரிக்க முதலாளித்தவம் தொடர்ந்தும் முதன்மை நிலையை தக்கவைத்துக் கொண்டு. தனக்கு இலாபத்தை தராத பல துறைகளை இந்நாடுகளுக்கு வழங்கி தமது முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு உதவுகிற ஒரு துணை அமைப்புக்களாக இந்நாடுகளை மாற்றி வருகிறது எனக்கருததத்லைப்பட்டேன்.

  தகவல் தொழில் நுட்பத்தில் மற்றும் கைத்தொழில் துறையில் அமெரிக்கா போன்ற நாடுகள் பிரதான இடத்தினைப் பெற்று வந்தார்கள். தமது தொழில் நுட்பத்தினை விற்கிற – தமது நாடுகளின் வளர்ச்சிக்கு உதவுகிற தொழில் நுட்ப த் திறன் கொண்ட தொழிலாளர்களைக் கொண்ட நாடுகளாக இந்நாடுகள் விளங்கின என்றே சிந்திக்க முடிந்தது. மற்றொரு புறம் நிதி மூலதனததை வழங்கி அதனால் லாபம் பெற்று வரும் வருகிற நாடாகவே கருதவேண்டியிருந்தது.

  ஆனால் உலகப் பொருளதார நெருக்கடி> நிதி நிறுவனங்களின் வீழ்ச்சி> உற்பத்திகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பன புதிய போக்குகள் உருவாகி விட்டன என்பதை உணரவைத்தன.

  அவ்விடயம் குறித்து உங்கள் கட்டுரை ஓரளவுக்கு விளக்கத்தினை தருவதாக அமைவதாக கருதுகின்றேன்.

  நிலைமைகள் குறித்து பெரும் ஆய்வுகள் கருத்தாடல்கள் நடைபெற வேண்டும்.

  நாம் 1980 களில் கண்ட உலக ஒழுங்கமைப்பு இப்போது இல்லை என்பது தெளிவாகிறது.

  இந்தியா சீனாவின் வளர்ச்சி உலக ஒழுங்கமைப்பில் முக்கிய விடயமாக மாற்றம் பெற்றுள்ளது.

  இவையாவும் லாப நோக்கில் செயற்படுகின்ற – மக்கள் விரோத அரசுகாளாகவே வளர்ச்சி பெற்று வருகின்றன.

  ஒடுக்கப்பட்ட மக்கள் – அம்மக்களுக்காகப் போராடுபவர்கள் மிகப் பலவீனமாக்கப்பட்டுள்ளார்கள்.

  இவை ஒரு துயர் நிறைந்த வரலாற்றுக் காலத்தை நம்முன் நிறுத்தியிருக்கிறது.

  மக்கள் குரல்கள் தெளிவாக முன்வைக்கப்படமுயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

  ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அமையும் ஊடகம் எனும் பெரும் பணி குறித்து சிந்தியுங்கள்.

  வி.ஆர்

Comments are closed.