புதிதாக நிர்மாணிக்கப்படும் இராணுவ மற்றும் சிங்களக் கிராமங்களில் முகாமிலுள்ள மக்களை குடியமர்த்தத் திட்டம்!

 
    புதிதாக நிர்மாணிக்கப்படும் இராணுவ மற்றும் சிங்களக் கிராமங்கள் உள்ளடங்கிய திட்டத்தின் கீழ் இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்களைக் குடியமர்த்த அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருகிறது. இதனாலேயே, வவுனியா முகாம்களில் உள்ள மக்களை மீளக்குடியர்த்துவதற்கான காலம் இழுத்தடிப்புச் செய்யப்படுவதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது மக்கள் நடமாட்டமற்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் கீழ் மற்றும் வவுனியாவில் மேல் வலயங்கள் என அவை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசங்களிலேயே மீள்குடியமர்த்தும் செயற்திட்டம்   முன்னெடுக்கப்படுவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இதனால் தமிழ் மக்களின்  பூர்வீக இடங்கள் அனைத்தும் அற்றுப்போகும் நிலை காணப்படுவதாக அஞ்சப்படுகின்றது.

தற்போது வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மக்களில், இராணுவத்தின் சோதனை செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுமார் ஒரு லட்சம் மக்களை அவர்கள் விரும்பிய இடங்களில் குடியமர்த்தவும் சந்தர்ப்பம் உள்ளது. எனினும், மேல் குறிப்பிட்ட சிங்களக் குடியேற்றத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதால் அவர்களை விடுவிப்பதிலும் இழுத்தடிப்புச் செய்யப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்புச் செயலரின் கூற்றுக்களின்படி, இடம்பெயர்ந்துள்ள மூன்று லட்சம் மக்களில் 10 ஆயிரம் பேர் வரையில் விடுதலைப் புலிகள் சந்தேக நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. எனினும், இவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் பேர், இளைஞர் யுவதிகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு இரண்டு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தவிர, விடுதலைப் புலிகளின் சிறுவர் போராளிகளின் குழுவொன்றுக்கு அபேபுஸ்ஸவில் உள்ள இராணுவ முகாமொன்றில் புனர்வாழ்வளிக்கப்படுகிறது. வேறு சில விடுதலைப் புலி உறுப்பினர்கள்  பூசா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியர்த்துவதற்காக உதவிகளை வழங்கும் இந்தியா மற்றும் சர்வதேச சமூகத்திற்கு 180 நாள் வேலைத் திட்டமொன்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், 92 நாட்கள் தற்போது கடந்துள்ளன.

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் தரப்பினரே மேற்குறிப்பிட்ட திட்ட யோசனையை முன்வைத்துள்ளதாகவும் அவர்கள் அதிகாரத்தைப் பகிர்வதற்கு முழுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், கடந்த 19ம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மனித உரிமைகள் மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க, எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் இடம்பெயர்ந்துள்ள மக்கள் அனைவரும் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவர் எனத் தெரிவித்தார்.